அரண்மனை 3 – விமர்சனம்

நடிப்பு: ஆர்யா, சுந்தர் சி, ராஷி கண்ணா, சாக்ஷி அகர்வால், ஆண்ட்ரியா, யோகி பாபு, விவேக், மனோபாலா, சம்பத்ராஜ்

இயக்கம்: சுந்தர் சி

தயாரிப்பு: ஆவ்னி சினிமேக்ஸ் & பென்ஸ் மீடியா

ஒளிப்பதிவு: செந்தில்குமார்

இசை: சத்யா சி

சுந்தர்.சி இயக்கத்தில், நகைச்சுவையும் திகிலும் கலந்த ‘அரண்மனை’ திரைப்படம் 2014ஆம் ஆண்டு திரைக்கு வந்தது. வணிக ரீதியில் அது பெற்ற வெற்றி அளித்த ஊக்கம், 2016ஆம் ஆண்டு ‘அரண்மனை 2’ திரைப்படத்தையும், ஐந்தாண்டுகளுக்குப்பின் தற்போது ‘அரண்மனை 3’ திரைப்படத்தையும் எடுக்க வைத்திருக்கிறது.

’அரண்மனை 3’ எப்படி? பார்க்கலாம்…

ஜமீன்தார் சம்பத்ராஜின் அரண்மனையில் உள்ள பேய், சம்பத்ராஜின் மகளான நாயகி ராஷி கண்ணாவை கொலை செய்ய முயற்சிக்கிறது. ராஷி கண்ணாவின் காதலரான ஆர்யாவோ, சம்பத்ராஜின் உதவியாளர்களை கொலை செய்கிறார். இந்த கொலைகளுக்கான காரணமும், அரண்மனையில் உள்ள பேயின் பின்னணியும் தான் ‘அரண்மனை 3’ படத்தின் கதை.

படத்தின் நாயகன் ஆர்யா என்று விளம்பரப்படுத்தப்பட்ட போதிலும், படத்தில் அவருக்கான முக்கியத்துவம் மிகக் குறைவே. இதனால் படத்துக்கு ஆர்யாவின் பங்களிப்பும் குறைவு தான்.

a2

உண்மையில், படத்தில் முதன்மை நாயகன் போல் வருவது வழக்கம்போல் சுந்தர்.சி. தான். அரண்மனையின் பல்லாண்டுகால மர்மங்களைத் தீர்க்க ஒரு புலனாய்வு அதிகாரி போல் இயங்கி, விறுவிறுப்பைக் கூட்டியிருக்கிறார்.

சுந்தர்.சி தன் படங்களில் கதாநாயகியை படுகிளாமராகக் காட்டுவது வாடிக்கை. இந்த படமும் அதற்கு விதிவிலக்கல்ல. சுந்தர்.சி-யின் இந்த ஃபார்முலாவுக்கு நாயகி ராஷி கண்ணாவும் தாராளமாக ஒத்துழைத்திருக்கிறார்.

ரசிகர்களை சிரிக்க வைக்க விவேக், யோகிபாபு, மனோபாலா ஆகியோர் இருக்கிறார்கள். இவர்கள் படத்தை சுவாரஸ்யமாக நகர்த்திச் செல்ல பெரிதும் உதவியிருக்கிறார்கள்.

a4

ஆண்ட்ரியா, சாக்‌ஷிஅகர்வால், நளினி, மைனா நந்தினி, சம்பத்ராஜ், வேலராமமூர்த்தி, மதுசூதனராவ், விச்சுவிஸ்வநாத், வின்செண்ட் அசோகன் உள்ளிட்டோர் தங்களுக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்துக்கு ஏற்ற நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்கள்.

ஏற்கெனவே வந்த ’அரண்மனை – 1’, ‘அரண்மனை – 2’ ஆகிய படங்களிலிருந்து இந்த படத்தை வேறுபடுத்திக் காட்ட இயக்குனர் சுந்தர்.சி ரொம்பவே மெனக்கெட்டிருக்கிறார். அதில் அவர் வெற்றியும் பெற்றிருக்கிறார் என்றே சொல்ல வேண்டும்.

யு.கே.செந்தில்குமாரின் ஒளிப்பதிவும் கிராபிக்ஸ் காட்சிகளும் கண்ணையும் கருத்தையும் கவருகின்றன.

சி.சத்யாவின் இசையில் பாடல்கள் இனிமையாக அமைந்திருக்கிறது. பின்னணி இசை தேவையான அளவு இருக்கிறது.

‘அரண்மனை 3’ – காமெடி கலந்த திகில் பிரியர்களுக்கு விருந்து!