அரண்ண்மனை 4 – விமர்சனம்
நடிப்பு: சுந்தர்.சி, தமன்னா பாட்டியா, ராஷி கண்ணா, சந்தோஷ் பிரதாப், ராமச்சந்திர ராஜு, கோவை சரளா, யோகி பாபு, விடிவி கணேஷ், டெல்லி கணேஷ், கே.எஸ்.ரவிக்குமார், நமோ நாராயணா, கருடா ராம், நான் கடவுள் ராஜேந்திரன், சிங்கம் புலி, சேஷு மற்றும் பலர்
இயக்கம்: சுந்தர்.சி
ஒளிப்பதிவு: ஈ.கிருஷ்ணசாமி
படத்தொகுப்பு: ஃபென்னி ஆலிவர்
இசை: ‘ஹிப்ஹாப் தமிழா’ ஆதி
தயாரிப்பு: ‘அவ்னி சினிமேக்ஸ் பி லிட்’ குஷ்பு சுந்தர், ‘பென்ஸ் மீடியா பி லிட்’ ஏ.சி.எஸ்.அருண்குமார்
பத்திரிகை தொடர்பு: சதீஷ் (எய்ம்)
காமெடியும், கவர்ச்சியும் கலந்த கமர்ஷியல் திகில் திரைப்படங்கள் எடுப்பதில் கை தேர்ந்தவர் என பெயர் பெற்றவர் இயக்குநர் சுந்தர்.சி. 2014ஆம் ஆண்டு அனைத்துத் தரப்பினரும் கண்டு களிக்கத் தக்க ‘அரண்மனை’ என்ற பேய் படத்தை எடுத்த இவர், அது சக்கைப் போடு போட்டு வசூலை வாரிக் குவித்ததைத் தொடர்ந்து, ‘அரண்மனை’ என்ற ராசியான தலைப்பைக் கெட்டியாகப் பிடித்துக்கொண்டு, ’அரண்மனை 2’, ‘அரண்மனை 3’ ஆகிய அமானுஷ்ய திரைப்படங்களை அடுத்தடுத்து எடுத்து வெற்றி பெற்றார். இந்த வெற்றிகள் தந்த ஊக்கத்தால் இப்போது ‘அரண்மனை 4’ என்ற படத்தை எடுத்து வெளியிட்டிருக்கிறார்.
’அரண்மனை’ என்ற தலைப்பு பொதுவானதாக இருந்தாலும், நல்ல சக்திக்கும், தீய அமானுஷ்ய சக்திக்கும் இடையில் நடக்கும் போராட்டம் தான் இந்த படங்கள் அனைத்துக்கும் பொதுவான கதைக்கருவாக இருந்தாலும், ஒவ்வொரு படக்கதையிலும் ஒவ்வொரு புதுமை சேர்த்து, ஒன்றிலிருந்து மற்றொன்றை மாறுபட்டதாகப் படைப்பதில் சுந்தர்.சி கில்லாடி. அந்த வகையில் இந்த ’அரண்மனை 4’ புதுமையாகவும் வித்தியாசமாகவும் இருக்க வேண்டும் என்பதற்காக, சுந்தர்.சி இந்த படத்துக்காக வடகிழக்கு இந்தியாவிலிருந்து ஸ்பெஷலாக ’பாக்’ (Baak) என்ற கொடிய தீய ஆவியை அழைத்து வந்திருக்கிறார்…!
தமிழ்நாட்டு கிராமியக் கதைகளில் தீய ஆவியை ‘பேய்’, ‘பிசாசு’, ‘முனி’ என்று குறிப்பிடுவதைப் போல, வடகிழக்கு இந்தியாவில் உள்ள அஸ்ஸாமில், அஸ்ஸாமிய நாட்டுப்புற கதைகளில், ‘பாக்’ என்று தீய ஆவியைக் குறிப்பிடுகிறார்கள். இந்த கொடிய தீய ஆவி நீரிலும், நீர்நிலைகள் அருகிலும் வாசம் பண்ணும் என்றும், அது யாருடைய உருவத்துக்கு மாற விரும்புகிறதோ, அவரைக் கொன்று அவருடைய உருவத்துக்கு மாறிக்கொள்ளும் ஆற்றல் கொண்டது என்றும் அஸ்ஸாமியர்கள் அச்சத்துடன் நம்புகிறார்கள்.
’அரண்மனை 4’ படக்கதை, வடகிழக்கு இந்தியாவில், அஸ்ஸாம் வழியாகப் பாய்ந்தோடும் பிரம்மபுத்திரா நதியில் ஆரம்பமாகிறது. ஒரு பூசாரியும், அவரது மகளும் பிரம்மபுத்திரா நதியில் ஒரு படகில் பயணம் செய்கிறார்கள். அப்போது மகளுக்கு தற்செயலாக காயம் ஏற்பட்டு, அவளுடைய ரத்தம் நதியில் சிந்தி, அந்த நதிக்குள் சிறைப்பட்டுக் கிடக்கும் ’பாக்’ என்ற ‘உருவத்தை மாற்றும் ஆற்றல் படைத்த கொடிய தீய ஆவி’யை விடுவிக்கிறது. உடனே அந்த தீய ஆவி, பூசாரியின் மகளைக் கொன்று, அவளுடைய வடிவத்தை எடுக்கிறது. பூசாரி பாக் தீய ஆவியின் ஆன்மாவை ஒரு சொம்பில் அடைத்து, “என் மனைவியைப் பாதுகாக்க, என் மகளின் இடத்தை நிரந்தரமாக எடுத்துக்கொள்” என்று கட்டாயப்படுத்தி, வீட்டுக்குக் கொண்டு போகிறார்.
கதை அங்கிருந்து தென்னிந்தியாவுக்குத் தாவுகிறது. செல்வி (தமன்னா பாட்டியா) தன் குடும்பத்தினரின் எதிர்ப்பை மீறி, இஞ்சினியரை (சந்தோஷ் பிரதாப்) காதலித்து திருமணம் செய்துகொண்டு, அவருடன் கோவூர் என்ற கிராமத்துக்குச் சென்று, அங்குள்ள பழைய அரண்மனையில் வசித்து வருகிறார். அவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளன. ஒருநாள் வெளியே செல்லும் இஞ்சினியரை ஒரு தீய அமானுஷ்ய ஆவி கொன்றுவிட்டு, இஞ்சினியரின் உருவம் எடுத்து, அரண்மனைக்குள் புகுந்து, செல்வியின் குழந்தைகளைக் கொல்ல முயற்சி செய்கிறது. குழந்தைகளைக் காப்பாற்ற தீவிரமாக போராடும் செல்வி, இந்நிகழ்வில் கொல்லப்படுகிறார்.
தங்கை செல்வி மீது அளவற்ற பாசம் வைத்திருக்கும் வழக்கறிஞர் சரவணன் (சுந்தர்.சி), தங்கை மற்றும் அவரது கணவரின் மரணங்களின் பின்னணியில் இருக்கும் மர்மங்களைக் கண்டுபிடிக்க முயலுகிறார். அப்போது அடுத்தடுத்து மேலும் சிலர் மர்மமாக இறக்கிறார்கள். அத்துடன், தங்கை செல்வியின் குழந்தைகளையும் கொல்ல குறி வைக்கிறது அமானுஷ்ய தீய ஆவி.
கொலைகள் செய்யும் அமானுஷ்ய தீய ஆவியை சரவணன் அடையாளம் கண்டாரா? எவ்வாறு அடையாளம் கண்டார்? தங்கையின் குழந்தைகளைக் காப்பாற்ற அமானுஷ்ய தீய ஆவியுடன் சரவணன் நடத்தும் போராட்டம் என்ன? இறுதியில் அமானுஷ்ய தீய ஆவி எவ்வாறு அழிக்கப்பட்டது? என்பன போன்ற கேள்விகளுக்கு சஸ்பென்ஸ் மற்றும் திகிலுடன், காமெடி மற்றும் கவர்ச்சி கலந்து சுவாரஸ்யமாக விடை அளிக்கிறது ‘அரண்மனை 4’ திரைப்படத்தின் மீதிக்கதை.
கதையின் நாயகனாக, எளிய மக்களுக்கு நியாயம் கிடைக்க மட்டுமே வழக்காடும் லட்சியவாத வழக்கறிஞர் சரவணனாக நடித்திருக்கிறார் சுந்தர்.சி. தன் தங்கையின் பெயர் கொண்ட பெண் என்பதற்காகவே அந்த பெண்ணுக்கு ஆதரவாக களத்தில் குதித்து, ரவுடிகளை அதகளம் செய்து, அந்த பெண்ணுக்கும் அவரது காதலனுக்கும் திருமணம் செய்து வைப்பதன் மூலம் தன் தங்கை மீது எவ்வளவு பாசம் வைத்திருக்கிறார் என்பதை வித்தியாசமாக காட்டி விடுகிறார். அரண்மனையைச் சுற்றியுள்ள மர்மங்களைப் புரிந்துகொள்வதிலும், அவற்றை அவிழ்க்கப் போராடுவதிலும், வழக்கத்தை விட கூடுதலாக சீரியசான நடிப்பை சிறப்பாக வெளிப்படுத்தியிருக்கிறார். அதிரடி ஆக்ஷன் காட்சிகளிலும் தன் கதாபாத்திரத்துக்கு நியாயம் செய்திருக்கிறார்.
நாயகனின் தங்கையாக, இஞ்சினியரின் காதல் மனைவியாக, இரண்டு குழந்தைகளின் தாயாக செல்வி என்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் தமன்னா பாட்டியா. பிள்ளைகள் மீது பாசம் காட்டுவதில் நிஜத் தாய்மார்களையும் மிஞ்சும் வகையில் அமர்க்களமாக நடித்திருக்கிறார். தன் குழந்தைகளை அமானுஷ்ய தீய ஆவியிடம் இருந்து காப்பாற்ற போராடும் காட்சியில் தாய்ப்பாசத்தில் பார்வையாளர்களை நெகிழ வைத்திருக்கிறார்.
கதையில் அதிக முக்கியத்துவம் இல்லை என்ற போதிலும், அரண்மனை உரிமையாளரின் பேத்தி மாயா என்ற கதாபாத்திரத்தில் ராஷி கண்ணா குறைவான காட்சிகளில் வந்தபோதிலும், நிறைவான நடிபை வழங்கியிருக்கிறார்.
நாயகனின் அத்தையாக வரும் கோவை சரளா, மேஸ்திரியாக வரும் யோகி பாபு, கார்ப்பெண்ட்டராக வரும் விடிவி கணேஷ், அரண்மனை உரிமையாளர் ஜமீனாக வரும் டெல்லி கணேஷ் மற்றும் அமரர் சேஷு ஆகியோரது காமெடி அலப்பரைகள் நம்மை மெய் மறந்து சிரிக்க வைக்கின்றன.
சந்தோஷ் பிரதாப், ராமச்சந்திர ராஜு, ஜெயப்பிரகாஷ், நமோ நாராயணா, கருடா ராம், சிங்கம் புலி, கே.எஸ்.ரவிகுமார் உள்ளிட்ட ஏனைய நடிப்புக் கலைஞர்களும் தத்தமது கதாபாத்திரத்துக்குத் தேவையான நடிப்பை அளித்திருக்கிறார்கள்.
சிம்ரன் மற்றும் குஷ்புவின் ஆட்டம் இடம்பெறும் இறுதிப் பாடல் காட்சியின்போது ரசிகர்களின் விசில் சத்தம் காதைப் பிளக்கிறது.
உண்மையில் பேய், பிசாசு, முனி, பாக் என எதுவும் இல்லை என்பது அறிவியல். எனவே, உண்மையில் இல்லாத ஒன்றை அடிப்படையாக வைத்து எடுக்கப்படும் படத்தைப் பார்க்க வருகிறவர்கள், இரண்டரை மணி நேரம் பொழுது போக்காக, என்கேஜிங்-ஆக இருக்கிறதா? என்று தான் கவனிப்பார்களே தவிர, ’லாஜிக்காவது, மயிலாப்பூராவது’ என்று இருந்துவிடுவார்கள். இதை நன்கு புரிந்து வைத்திருக்கும் இயக்குநர் சுந்தர்.சி, கடுகளவு கூட லாஜிக் பற்றி சிந்திக்காமல், பொழுதுபோக்கு எனும் வெற்றிச்சூத்திரத்தை மட்டும் மனதில் வைத்து, இப்படத்தை அனைத்துத் தரப்பினரும் அனைத்து வயதினரும் ரசிக்கும் வண்ணம் சுவாரஸ்யமாகவும், விறுவிறுப்பாகவும் நகர்த்திச் சென்றுள்ளார். மேலும், வடகிழக்கிலிருந்து பாக் எனும் தீய ஆவியை இழுத்துவந்து இப்படத்தில் சேர்த்திருப்பது சுவாரஸ்யத்தையும், திகிலையும் ஒருசேர அதிகரிக்கச் செய்திருக்கிறது. மட்டும் அல்லாமல், திரைக்கதையில் புதுமை சேர்க்க சுந்தர்.சி.யும் அவரது குழுவினரும் எவ்வளவு மெனக்கெடுகிறார்கள் என்பதற்கு இது ஒரு சாட்சி. இந்த உழைப்புக்கு பலனாக வெற்றி நிச்சயம் கிடைக்கும். விளைவாக ‘அரண்மனை 5’ படத்தை விரைவில் எதிர்பார்க்கலாம்!
ஈ.கிருஷ்ணசாமியின் ஒளிப்பதிவு, ஃபென்னி ஆலிவரின் படத்தொகுப்பு, ‘ஹிப்ஹாப் தமிழா’ ஆதியின் பாடலிசை மற்றும் பின்னணி இசை ஆகியவை இயக்குநரின் வெற்றிக்கு பக்கபலமாக இருந்துள்ளன.
‘அரண்மனை 4’ – கோடை விடுமுறையை குடும்பத்துடன் குதூகலமாகக் கொண்டாட சரியான தேர்வு! தேர்வு செய்யுங்கள்! கொண்டாட்டமாக இருங்கள்!