மீஞ்சூர் கோபி இயக்கும் ‘அறம்’ படத்தில் சகாயம் ஸ்டைல் கலெக்டராக நயன்தாரா!
நாயகியை முதன்மை கதாபாத்திரமாகக் கொண்டு உருவாகி இருக்கும் படம் ‘அறம்’. இதில் நாயகியாக நயன்தாரா நடித்துள்ளார். நயன்தாராவின் பிறந்த நாளான இன்று இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. இந்த ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரே படக்கதையை குறிப்பால் உணர்த்தி, எதிர்பார்ப்பை எகிறச் செய்கிறது.
சகாயம் ஐ.ஏ.எஸ் போல தொண்டுள்ளம் கொண்ட கலெக்டராக எளிய உடையில், கம்பீரமான முகபாவனையுடன் இதில் காட்சியளிக்கிறார் நயன்தாரா. அருகே ஏழை எளிய கிராமத்து மக்கள் கூடியிருக்கிறார்கள். பக்கத்தில் பள்ளம் பறிக்கும் ஒரு ஜே.சி.பி. எந்திரம் இருக்கிறது. ‘அறம்’ என்ற தலைப்பில் உள்ள ‘ற’ என்ற எழுத்துக்குள் இருக்கிறது கதைக்கரு. அதில், அடி ஆழத்திலிருந்து ஒரு குழந்தையின் பிஞ்சுக் கரம் மேல் நோக்கி நீளுகிறது. அதை பற்றுவதற்காக ஒரு கரம் மேலிருந்து கீழ் நோக்கி நீண்டு கொண்டிருக்கிறது. அது தான் படக்கதை.
100 அடி, 200 அடி ஆழம் கொண்ட ஆழ்துளை கிணற்றில் குழந்தை தவறி விழுந்து உயிருக்கு போராடுவதையும், அதை உயிருடன் மீட்க மீட்பு குழுவினர் போராடுவதையும் நாம் அடிக்கடி தொலைக்காட்சி சேனல்களில் பதட்டத்துடன் பார்த்திருப்போம். அத்தகைய ஒரு சம்பவத்தை மையமாக வைத்து தான் ‘அறம்’ படம் உருவாக்கப்பட்டுள்ளது.
இப்படம் பற்றி இதன் இயக்குனர் கோபி நயினார் (மீஞ்சூர் கோபி) கூறுகையில், “உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாகி இருப்பது தான் எங்களின் ‘அறம்’. மக்களுக்கு நல்லது மட்டுமே செய்ய வேண்டும் என்ற சிந்தனையோடு பணியாற்றும் ஒரு மாவட்ட ஆட்சியரை மையமாகக் கொண்டு தான் கதை நகரும். எனவே தான் நாங்கள் படத்திற்கு ‘அறம்’ என்று தலைப்பிட்டோம். ‘மாவட்ட ஆட்சியர்’ என்ற வார்த்தைக்கு புதியதொரு அர்த்தத்தை தன்னுடைய அசாத்திய நடிப்பால் நயன்தாரா வழங்கி இருப்பது, எங்களுக்கு எல்லையற்ற மகிழ்ச்சியாக இருக்கிறது.
எங்கள் ‘அறம்’ படத்தின் முதல் போஸ்டரை, அவர்களின் பிறந்த நாளன்று வெளியிட்டிருக்கிறோம். அதற்கு ரசிகர்கள் மத்தியில் தற்போது கிடைத்து வரும் அமோக வரவேற்பைப் பார்க்கும்பொழுது, மிகவும் பெருமையாக இருக்கிறது. ‘அறம்’ திரைப்படம் மூலம் சமுதாயத்தில் ஒரு மாற்றம் ஏற்படும் என்ற நம்பிக்கை எங்களுக்கு முழுமையாக இருக்கிறது” என்றார் கோபி நயினார்.
‘காக்கா முட்டை’ புகழ் விக்னேஷ் – ரமேஷ் முக்கிய கதாபாத்திரங்களிலும், வேல ராமமூர்த்தி, ஈ ராம்தாஸ், சுன்னு லக்ஷ்மி மற்றும் ராம்ஸ் வலுவான கதாபாத்திரங்களிலும் நடித்து வரும் இத்திரைப்படத்தை கேஜேஆர் ஸ்டுடியோஸ் சார்பில் தயாரித்து வருகிறார் கோட்டப்பாடி ஜே ராஜேஷ்.
ஒளிப்பதிவாளர் ஓம் பிரகாஷ், தேசிய விருது பெற்ற கலை இயக்குநர் லால்குடி இளையராஜா, படத்தொகுப்பாளர் கோபி கிருஷ்ணா மற்றும் முன்னணி சண்டை பயிற்சி இயக்குநர்களுள் ஒருவரான பீட்டர் ஹெய்ன் என தலை சிறந்த தொழில்நுட்ப கலைஞர்கள் இதில் பணியாற்றி வருகிறார்கள்.