‘பாகுபலி 2’ வெளியாகும் நாளில் பிரபாஸின் ‘சாஹூ’ டீஸர் ரிலீஸ்!

இந்தியாவின் மிக சிறந்த காவிய திரைப்படங்களில் ஒன்றாக கொண்டாடப்படும் ‘பாகுபலி’யின் நட்சத்திர நாயகன் பிரபாஸ் மீண்டும் மக்கள் மனதை கவர மூன்று மொழிகளில் ஒரே நேரத்தில் தயாராகும் ‘சாஹூ’ திரைப்படம் மூலம் தயாராகிவிட்டார்.

‘பாகுபலி’யில் கதாபாத்திரத்திற்குத் தேவையான நடிப்பை வெளிப்படுத்த பிரபாஸ் எடுத்துக்கொண்ட அக்கறையும், கடின உழைப்பும் ‘பாகுபலி 2’ பற்றிய ஆவலையும் எதிர்பார்ப்புகளையும் அதிகப்படுத்தியுள்ளன.

ஆனால், ‘சாஹூ’வில் தோன்றும் பிரபாஸ் முற்றிலும் மாறுபட்டவர். ஒரு வித்தியாசமான பின்புலத்தில், முற்றிலும் மாறுபட்ட கதாபாத்திரத்தில், வித்தியாசமான கதைக்களத்தில் ஒரு புதிய வடிவத்தில் உருப்பெற்று வருகிறது ‘சாஹூ’. பிரம்மாண்டமாக, உயர் தொழில்நுட்பத்துடன் அதிரடியும், காதலும், விறுவிறுப்பும், வேகமும் சரிவிகிதத்தில் சற்றும் குறைவில்லாமல் ரசனையோடு கலந்து பிரமாதமாக உருப்பெற்றுள்ளது.

இந்திய திரையுலகின் பல முன்னணி நடிகர் – நடிகைகளும் இதில் பங்கு பெறுவது மேலும் ஆவலை கூட்டுகிறது. இந்தியாவிலும், வெளிநாடுகளிலும் பிரம்மாண்டமாக, பல புதிய இடங்களில் படம் பிடிக்கபட்டுவரும் இந்த படத்தை இயக்குனர் சுஜீத் இயக்க, வம்சி மற்றும் பிரமோத்தின் யூவீ கிரியேஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

ஹிந்தி, தமிழ், தெலுங்கு என மூன்று மொழிகளில் ஒரே நேரத்தில் ‘சாஹூ’ தொடர்ந்து படமாக்கப்பட்டுவரும் நிலையில், பிரம்மாண்டமாய் அதிக திரையரங்குகளில் வரும் 28ஆம் தேதி வெளியாகும் ‘பாகுபலி 2’ படத்துடன் ரசிகர்கள் ‘சாஹூ’வின் டீஸர் காணலாம்.