‘வேட்டையன்’ வெற்றி அடைவது மகிழ்ச்சிக்குரியது!

’ஜெய் பீம்’ கொடுத்த த.செ.ஞானவேல் தன் அடுத்த படத்துக்கு ரஜினிகாந்துடன் இணைகிறார் என்று தெரியவந்தபோது எனக்கு இயல்பாக ஏற்பட்டிருக்க வேண்டிய உற்சாகம் ஏற்படவில்லை. படம் என்கவுண்டர் பற்றியது என்ற தகவல் கசிந்தது, படத்தின் ஆரம்ப போஸ்டர்கள் போன்றவையும் படம் மீதான எதிர்பார்ப்பு ஏற்படுவதைத் தடுத்தன. வழக்கமான ரஜினி படமாக இருக்கக்கூடும், எப்படியும் பார்க்கத்தான் போகிறோம், நன்றாக இருந்தால் மகிழ்ச்சி என்று மட்டும்தான் நினைத்தேன்.

சில வாரங்களுக்கு முன்பு வெளியான படத்தின் டீஸரும் ட்ரெய்லரும் ரஜினியை என்கவுண்டர் போலீஸாக, அவர் செய்யும் சாகசங்களை முன்னிறுத்துவதாகவே இருந்தன. என்கவுண்டரை எதிர்க்கும் தரப்பாக அமிதாப் பச்சன் என்னும் இந்திய சினிமாவின் மாபெரும ஆளுமையை முன்னிறுத்தியிருந்தனர். காவல்துறையின் கொடிய வன்முறைக்கு எதிரான அற்புதப் படைப்பான ‘ஜெய் பீம்’ கொடுத்த ஞானவேல், காவல்துறையின் என்கவுண்டர் செய்யும் அதிநாயகனை முன்னிறுத்திப் படம் எடுக்கிறார் என்று பலர் ஏமாற்றம் தெரிவித்திருந்தனர். வேறு சிலர் என்கவுண்டருக்கு எதிரான அம்சங்கள் படத்தில் இருக்கும் என்று நம்பிக்கை தெரிவித்திருந்தனர். ட்ரெயல்ர், டீஸரை மட்டும் வைத்து படத்தின் உள்ளடக்கம் குறித்து தீர்ப்பு எழுதக் கூடாது என்கிற கொள்கையின் காரணமாக நான் எதுவும் எழுதவில்லை. என்றாலும் ரஜினி படத்தில் ரஜினியின் தரப்புக்கு மாற்றான தரப்பு சரியானதாக முன்னிறுத்தப்படுவதற்கோ, ரஜினியின் கதாபாத்திரம் பிழைகளை உள்ளடக்கியதாகவோ, அவர் திருந்துவதாகவோ இருக்க வாய்ப்பே இல்லை என்று நான் கருதினேன். எனவே படம் என்கவுண்டருக்கு எதிராக இருக்க வாய்ப்பில்லை என்றும் அதிகபட்சம் சுவாரசியமான ‘ரஜினி பட’மாக இருக்கும் என்றும் நினைத்தேன்.

’வேட்டையன்’ படத்தின் மூலம் என்னுடைய (அவ)நம்பிக்கையைப் பொய்யாக்கிவிட்டார் ஞானவேல். அதுவே எனக்குப் பெரும் மகிழ்ச்சி. இது நிச்சயமாக என்கவுண்டர் எதிர்ப்புப் படம்தான்.

(spoiler alert)

கொடிய குற்றவாளிகளை என்கவுண்டர் செய்வது தவிர்க்க முடியாதது, குற்றங்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு விரைவாக நீதி வழங்கப்படுவதற்கான வழி அதுதான் என்று நம்புபவராக இருக்கிறார் ரஜினி. சட்டத்தின் அடிப்படையில்தான் தண்டனைகள் வழங்கப்பட வேண்டும், தண்டிக்கும் அதிகாரத்தை காவல்துறை எடுத்துக்கொள்ளக் கூடாது என்று வலியுறுத்துகிறார் அமிதாப். இரண்டுக்கும் இடையிலான முரணில் என்கவுண்டர் ஹீரோயிசமாக முன்வைக்கப்படும் அதே நேரத்தில் அதற்கு எதிரான சட்டவாதப் பார்வை, சட்டம் செயல்படுத்தப்படுவதில் நிலவும் சமத்துவமின்மை, மனித உரிமைத் தரப்பு ஆகியவை சரியாகவும் வலுவாகவும் பதிவாகியுள்ளன.

கொடிய குற்றவாளிகளை மட்டுமே என்கவுண்டர் செய்ய நினைப்பவர் ரஜினி. ஒரு திருடனின் திறமையை அங்கீகரித்து அவனைத் திருத்தி தனக்கு உதவியாளராக வைத்துக்கொள்கிறார். தவறாக வழிநடத்தப்பட்டு ஒரு அப்பாவியை என்கவுண்டர் கொலை செய்துவிடுகிறார். இதை உணர்ந்த பிறகு என்கவுண்டரே தவறு என்ற முடிவுக்கு வராவிட்டாலும் என்கவுண்டர் கொலைகளால் அப்பாவிகள் உயிரிழக்கக்கூடும் என்கிற புரிதலை அடைகிறார். கொடிய குற்றங்களுக்கு உடனடி தண்டனை கேட்கும் மனநிலை சமூகத்தில் புரையோடிப் போயிருப்பதால் காவல்துறைக்கு ஏற்படும் அழுத்தத்தின் காரணமாக பல நேரம் முறையான விசாரணை இன்றி யாரேனும் ஒரு எளிய மனிதன் திட்டமிட்டோ அவசரத்தின் விளைவான கவனக்குறைவுகளாலோ சிக்கவைக்கப்பட்டு கொல்லப்படுவதை உணர்கிறார். இப்படி சிக்கவைக்கப்படுபவர்கள் ஏழைகளாகவும் குடிசைப் பகுதியில் வசிப்பவர்களாகவும் ஒடுக்கப்பட்ட சாதிகளைச் சேர்ந்தவர்களாகவும் இருப்பதையும் உணர்கிறார். அதைவிட முக்கியமாக, எவ்வளவு கடுமையான அழுத்தம் இருந்தாலும் அரசியல் அதிகாரம் உடையவர்கள், பணக்காரர்கள் , சாதி/மத செல்வாக்கு உள்ளவர்கள யாரும் எனகவுண்டர் செய்யப்படுவதில்லை என்பதையும் உணர்கிறார். இதற்குப் பிறகு அவர் படத்தில் யாரையும் என்கவுண்டர் செய்வதில்லை. ஏன் ஒரு பணக்கார கார்ப்பரேட் முதலாளி தன் லாப வெறிக்காக பல அப்பாவிகள் உயிர்போகக் காரணமானவன் தன்னிடம் சிக்கும்போதுகூட அவனையும் கொல்வதில்லை. சட்டத்தின் முன் நிறுத்துகிறார். (வேறு சிலரைக் கொல்கிறார். ஆனால் அது பிடிபட்டவரைக் கொல்வதல்ல, தன்னை சுட வந்தவனைச் சுடுவதாகத்தான் கணக்கில் கொள்ள முடியும்). அத்தகைய குற்றவாளிகூட கொல்லப்படக் கூடாது என்று அமிதாப் பச்சன் ஒரு இடத்தில் சொல்கிறார். அமிதாப் போன்ற ஒரு பெரும் ஆளுமையை இந்தக் கதாபாத்திரத்துக்கு தேர்ந்தெடுப்பதிலிருந்து அவரது இந்த வசனங்களை இயக்குநரின் குரலாகவே பார்க்க வேண்டும். இது போக ‘உடனடி நீதி’ கோரும் பொதுப்புத்தியும் அதற்குக் காரணமாக சொல்லப்படும் நீதி விசாரணைத் தாமதமும்கூட வலுவாக விமர்சிக்கப்படுகின்றன.

ரஜினி போன்ற ஒரு சூப்பர் ஸ்டார் நடிகரை வைத்து இந்த அளவுக்கு என்கவுண்டர் எதிர்ப்பு பேசியிருப்பதை வரவேற்க வேண்டும். ரஜினிக்கான சமரசங்கள் இருக்கின்றனதான். இரவு நேரத்தில் ஒரு பெண்ணிடம் விசாரணை நடத்துவது என காவல்துறையின் வேறு சில விதிமீறல்கள் நியாயப்படுத்தப்படுகின்றன. ஏன் ஒரு அப்பாவியை என்கவுண்டர் செய்த ரஜினி அதற்கான தண்டனையை அனுபவிப்பதாக, குறைந்தபட்சம் பணியை ராஜினாமா செய்வதாகக்கூட காண்பிக்கப்படவில்லை.

ஆனால் இதை எல்லாம் பெரிதுபடுத்தி இந்தப் படம் என்கவுண்டருக்கு ஆதரவான படம் என்றோ, என்கவுண்டர் எதிர்ப்பில் சமரசம் செய்துகொள்வதாகவோ பேசுவதை என்னால் ஏற்க முடியவில்லை. ரஜினி போன்ற ஒரு மாஸ் நடிகர் , நம் பொதுப்புத்தி ஆகியவற்றை வைத்துக்கொண்டு ஒரு வெகுஜன சினிமாவில் இவ்வளவுதான் பேச முடியும். இந்த அளவுக்குப் பேசியிருப்பதே மிகப் பெரிய விஷயம். மேலும் ரஜினி போன்ற ஒரு நடிகரை வைத்து இப்படிப்பட்ட விஷயங்கள் பேசப்படுவது சமூக மாற்றத்தின் பிரதிபலிப்பாகவும் சமூகத்தை முன்னோக்கிச் செலுத்துவதாகவும் இரண்டுமாகவும் இருக்க முடியும்.

மேலும் கல்வியின் பெயரால் இங்கு நடக்கும் அநீதிகளை அரசியலை வணிக நோக்கை அம்பலப்பத்தியிருப்பதற்காகவும் ‘வேட்டையன்’ முக்கியமான படம் ஆகிறது. லாபநோக்கு கல்வியில் கொண்டுவந்துகொண்டிருக்கும் அல்லது வரப்போகும் சமத்துவமின்மையை ஒட்டுமொத்தமாக கல்வி அமைப்பையே சமத்துவமற்றதாக மாற்றக்கூடிய ஆபத்தைச் சொல்லி எச்சரித்துள்ளது இந்தப் படம்.

சரி இது போன்ற மனித உரிமை, கல்வி சமத்துவம் போன்ற அரசியல்ரீதியான காரணங்களுகாக மட்டும்தான் வேட்டையன் நல்ல படமா? இந்த அரசியல் விஷயங்களைப் பேசுவோருக்கு இவற்றில் அக்கறை கொண்டோருக்கு மட்டும்தான் இந்தப் படம் பிடிக்குமா? என்றால் நிச்சயம் இல்லை. ஒரு commercial investigative thriller and/or police procedural with social statement என்கிற வகையிலும் பெருவாரியான ரசிகர்களை இந்தப் படம் ஏமாற்றாது என்றே கருதுகிறேன். காவல்துறை விசாரணைக் காட்சிகளில் தர்க்கப் பிழைகள், இரண்டாம் பாதி திரைக்கதையில் நீளம், சில காட்சிகள் பல படங்களில் இதே போன்ற காட்சிகளைப் பார்த்துவிட்ட உணர்வை ஏற்படுத்துவது போன்ற குறைகள் ஒட்டுமொத்த படத்தை நிராகரிக்கப் போதுமானவையாக இல்லை.

மனித உரிமை, சட்டத்தின் ஆட்சியின் மூலம் சமத்துவத்தை நிலை நாட்டப்படுவது, சமூக நீதி, போன்ற விழுமியங்களுக்கான தனது பற்றுறுதியை விட்டுக்கொடுக்காமல் ஒரு ரசிக்கத்தக்க ‘ரஜினி’ படத்தையும் கொடுத்திருக்கும் ஞானவேலையும் அவருடன் இணைந்து திரைக்கதை எழுதியிருக்கும் கிருத்திகாவையும் மனதாரப் பாராட்டலாம்.

‘வேட்டையன்’ வெற்றி அடைவது மகிழ்ச்சிக்குரியது.

-Gopalakrishnan Sankaranarayanan