அப்பா – விமர்சனம்

சற்றே நாடகத் தன்மையும் மிகையுணர்வும் கொண்டதே தமிழ் சினிமா. அதன் இலக்கணங்களுக்கு உட்பட்டே ‘அப்பா’ போன்ற சமகால எரியும் பிரச்சனைகளைப் பேசவேண்டியிருக்கிறது. “உடன் பிறப்பே” என்றோ, “ரத்தத்தின் ரத்தங்களே” என்றோ கரகர குரலில் விளித்தால் விழுந்தடித்துக் கைத்தட்டும் மாந்தரிடையே ‘வே ஹோம்’ போல நிதானமான வாழ்வின் அபூர்வக் காட்சிகள் எடுபடப் போவதில்லை.

“பூட்டிய இருப்புக் கூட்டின் கதவு திறக்கப்பட்டது, சிறுத்தையே வெளியே வா” என்றால்தான் எலியாகவே வாழ்ந்து பழகியவனுக்கு சிறு கிளுகிளுப்பிருக்கிறது. சமுத்திரக்கனியின் ‘அப்பா’, சினிமா அழகியலை நிறைவு செய்திருக்கிறதா என்றால் நிறைய மாற்றுக்கருத்துக்கள் உள்ளன.

ஆனால், தமிழரின் சமகால பிரச்சனையைப் பேசிய வகையில் கருத்தியல் ரீதியாக ஆதரிக்க வேண்டிய படம்.

தமிழர்களின் தோல் தடித்துவிட்ட நிலையில், சாட்டையால் அடித்து உண்மைகளை உரத்துப் பேச வேண்டியுள்ளது. குழந்தை கருக்கொண்டவுடனே, அதன் கழுத்தில் ஸ்டெத்தைத் தடவிப் பார்க்கிற தந்தைகளின் காலமிது.

பிள்ளைகளின் குழந்தைப் பருவத்தைத் திருடி, அவர்களிடம் அப்பாக்களின் நிறைவேறாத கனவுகளைத் திணிக்கும் பேராசையைப் பேசுகிற படம்.

சமுத்திரக்கனி, பிள்ளைகள் கனவு காண்கிற லட்சிய அப்பா. தம்பி ராமையாவோ தமிழ்சமூகத்தின் யதார்த்த அப்பா. இந்த இரண்டு முரண்களையும் அருகருகே வைத்து அதன் விளைவுகளை எதிர்பார்க்கிற திசையில் நகர்த்திச் செல்கிறது படம்.

நமக்கு யதார்த்தங்களை விடவும் லட்சியங்களே அதிகம் தேவைப்படுகிறது. அவ்வகையில் ‘அப்பா’ வசீகரமான லட்சியங்களை உள்ளடக்கியிருக்கிறது.

இன்று கல்விக் கொள்கைகளை உருவாக்குகிற இடத்தில் நாமக்கல் பள்ளிகள் இருக்கின்றன. அவற்றின் இருள் நிறைந்த பகுதிகளைப் பேச, சினிமா அழகியலை மீற வேண்டிய தேவை சமுத்திரக்கனிகளுக்கு இருக்கிறது.

இந்தியத் தந்தை சாதிக் கறை படிந்தவனாக, மதக் கறை படிந்தவனாக, ஏகாதிபத்தியத்தின் மீதி மிச்சங்களைத் தின்று வாழ்வதில் ருசி கண்டவனாக இருக்கின்றான். அடிமை வாழ்வில் சுகம் கண்டவனுக்கு விடுதலையின் மகத்துவம் தெரியவில்லை.

தனது நதி, மலை, காடு, வயல், ஆகாயம், வரலாறு, பண்பாடு, மொழி, தெய்வம்… எது அழிந்தாலும் கவலை இல்லை. க்ரீன் கார்ட், என்ஆர்ஐ ஸ்டேட்டஸ் போதும் அவனுக்கு.

சாதாரணர்களுககும் அம்பானியாகத் தான் ஆசையேயொழிய, அருந்ததி ராயாகும் ஆசை இல்லை.

இப்படி நிறைய பேச, சிந்திக்க வைக்கிறது சமுத்திரக்கனியின் ‘அப்பா’.

ஆனாலும் சில இடங்களில் சறுக்குகிறார். பில்கேட்ஸ், டெண்டுல்கரா நம் லட்சிய மனிதர்கள்? அம்பேத்கர், பகதசிங் இல்லையா?

நெருடல்கள் இருக்கட்டும். “பிள்ளைகளை ப்ராய்லர் கோழிகளைப் போல் வளர்த்தால் அவர்கள் கசாப்புக் கடைகளில்தான் பலியிடப்படுவார்கள்” எனும் வலிக்கும் உண்மையை உரத்துப் பேசிய வகையில் ‘அப்பா’ முக்கியமான படம்.

வாழ்த்துக்கள் சமுத்திரகனி சார்!

– கரிகாலன்