ரஜினிகாந்த் உடல்நிலை: அப்போலோ மருத்துவமனை விளக்கம்
சென்னை அப்போலோ மருத்துவமனை தரப்பில் இன்று வெளியிடப்பட்டுள்ள மருத்துவ செய்திக் குறிப்பில், “ரஜினிகாந்த் செப்டம்பர் 30-ம் தேதி கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அவரது இதயத்திலிருந்து வெளியேறும் பிரதான ரத்தக் குழாயில் வீக்கம் ஏற்பட்டது. அறுவை சிகிச்சை இல்லாத டிரான்ஸ்கேட்டர் முறையில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.
மூத்த இதயவியல் மருத்துவர் சாய் சதீஷ், ரஜினியின் இதயத்தில் ஸ்டன்ட் பொருத்தியுள்ளார். திட்டமிட்டபடி அனைத்தும் செய்து முடிக்கப்பட்டுள்ளது என்பதை ரஜினி ரசிகர்களுக்கும் நலம் விரும்பிகளுக்கும் தெரிவித்துக் கொள்கிறோம். ரஜினி நலமுடன் உள்ளார். இரண்டு நாட்களில் வீடு திரும்புவார்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது ரஜினிகாந்த் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ‘கூலி’ படத்தில் நடித்து வருகிறார். தா.செ.ஞானவேல் இயக்கியுள்ள ‘வேட்டையன்’ அக்டோபர் 10-ம் தேதி வெளியாகவுள்ளது. இந்தப் படத்தில் அமிதாப் பச்சன், ரஜினிகாந்த், ராணா, ஃபகத் பாசில், மஞ்சு வாரியர், ரித்திகா சிங், ரக்ஷன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். அனிருத் இசையமைத்துள்ள இந்தப் படத்தை லைகா நிறுவனம் தயாரித்துள்ளது. அண்மையில், இப்படத்தின் டீசர் வெளியான நிலையில், நாளை (அக்டோபர் 2) இப்படத்தின் டிரெய்லரை படக்குழு வெளியிடுகிறது.
இந்நிலையில், ரஜினிகாந்த் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பது அவரது ரசிகர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.