ஆன்யா’ஸ் டுடோரியல் – விமர்சனம்

நடிப்பு: ரெஜினா கசாண்ட்ரா, நிவேதிதா சதீஷ் மற்றும் பலர்

இயக்கம்: பல்லவி கங்கிரெட்டி

தயாரிப்பு: அர்கா மீடியா

ஓ.டி.டி தளம்: ஆஹா தமிழ்

மக்கள் தொடர்பு: யுவராஜ்

இது ஒரு திகில் இணையத் தொடர். ’ஆஹா தமிழ்’ ஓடிடி தளத்தில் வெளியாகியிருக்கும் வித்தியாசமான ஹாரர் வெப் சீரிஸ். ‘லைவ் வீடியோவில் பேய்’ என்ற ஒருவரிக் கதையை வைத்து இதை அமைத்திருக்கிறார்கள். இது மொத்தம் ஏழு எபிசோடுகள் கொண்டது. ஒவ்வொரு எபிசோடும் அரை மணி நேரம் தான். அதாவது மூன்றரை மணி நேரம் மட்டுமே ஓடக்கூடிய சிறிய தொடர் இது.

கொரோனா முதல் அலையின்போது ‘யாரும் வீட்டைவிட்டு வெளியே வரக்கூடாது. காரணமின்றி வெளியே வந்தால் போலீஸ் அடித்துத் துரத்தும்’ என்ற கெடுபிடி இருந்த காலத்தில் இக்கதை நடக்கிறது.

ரெஜினா கசாண்ட்ராவும், நிவேதிதா சதீஷும் அக்கா – தங்கை. சிறு வயதிலிருந்தே இருவருக்கும் ஒத்துப்போகாது. நிறைய பிரச்சனைகள் இருக்கும். இதனால் நிவேதிதா சதீஷ் சண்டை போட்டு தன் அக்காவையும், அம்மாவையும் பிரிந்துவந்து தனியாக அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் வசிக்கிறார். அந்த குடியிருப்பில் நிவேதிதாவைத் தவிர வேறு யாருமே இல்லை.

தனியாக இருக்கும் நிவேதிதா, இன்ஸ்டாகிராமில் ’ஆன்யா’ஸ் டுடோரியல்’ என்ற பக்கத்தைத் தொடங்கி லைவ் வீடியோ போடுகிறார். அவர் போட்ட முதல் லைவ் வீடியோவிலேயே, அவருக்குப் பின்னால் ஒரு பேய் நிற்பதை வியூவர்ஸ் பார்த்து விடுகிறார்கள். அவ்வளவு தான்… சமூக வலைத்தளங்களில் பரபரப்பு பற்றிக்கொள்கிறது. நிவேதிதாவின் ‘ஆன்யா’ஸ் டுடோரியல்’ பக்கத்துக்கு எக்கச்சக்கமான லைக்குகள் குவிகின்றன. பல்லாயிரக் கணக்கானோர் அவரை பின்தொடர்பவர்கள் ஆகிறார்கள்.

நிவேதிதா வசிக்கும் வீட்டில் உண்மையிலேயே பேய் இருக்கிறதா? லைவ் வீடியோவில் அவருக்குப் பின்னால் வந்து நின்ற அமானுஷ்ய சக்தி யார்? நிவேதிதாவுக்கும் அவரது அக்கா ரெஜினா கசாண்ட்ராவுக்கும் அப்படி என்ன தான் பிரச்சனை? என்பன போன்ற கேள்விகளுக்கு விடை அளிக்கிறது மீதிக்கதை.

ரெஜினா கசாண்ட்ராவும், நிவேதிதா சதீஷும் அச்சுப் பிசகாமல் அளவெடுத்து தயாரித்தது போல் அக்கா – தங்கை கதாபாத்திரங்களுக்கு கச்சிதமாகப் பொருந்தியிருக்கிறார்கள். அக்காவாக வரும் ரெஜினா தன் தங்கைக்காக கவலைப்படுபவராகவும், அதே நேரத்தில் அவர் மீது கோபம் கொள்பவராகவும் சிறப்பாக நடித்திருக்கிறார். தங்கையாக வரும் நிவேதிதாவுக்கு நடிப்பதற்கு அக்காவை விட அதிக வாய்ப்புகள். அவற்றை சரியாக பயன்படுத்தி தன்னை நிரூபித்துக்கொண்டுள்ளார் நிவேதிதா.

பல்லவி கங்கிரெட்டி இத்தொடரை இயக்கியிருக்கிறார். இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸிடம் உதவியாளராகப் பணியாற்றியவர் என்பதால், அனுபவ உழைப்பு பளிச்சிடுகிறது. தொடரின் ஆரம்பம் முதல் இறுதி வரை சஸ்பென்சை கட்டிக்காத்திருப்பதோடு பார்வையாளர்களை திகிலுடன் சீட்டின் நுனியில் உட்கார வைப்பதில் வெற்றி பெற்றிருக்கிறார். குழந்தைகள் பராமரிப்பில் மிகுந்த அக்கறை காட்ட வேண்டும். இல்லாவிட்டால், குழந்தைகள் உளவியல் ரீதியில் பாதிக்கப்படுவார்கள் என்ற மெசேஜையும் கூறியிருக்கிறார். என்ன ஒன்று. கதை வலுவில்லாமல் இருக்கிறது. அதனால் சுவாரஸ்யத்துக்காக செய்யப்படும் ஜிம்மிக்குகள் ஒரு கட்டத்தில் சலிப்பூட்டுகின்றன. திரைக்கதையிலும் குழப்பம் இழையோடி, இயக்குனரின் தடுமாற்றத்தை வெளிக்காட்டுகிறது. அடுத்த படைப்பில் இயக்குனர் இவற்றை சரி செய்வார் என எதிர்பாக்கலாம்.

ஒளிப்பதிவு இந்த தொடருக்கு பிளஸ். ’ஹாரருக்கான மூட்’ என்பதை பார்வையாளர்களுக்கு அது துல்லியமாக கடத்தியிருக்கிறது. இத்தொடருக்கு பலம் சேர்ப்பதில் இசையும், படத்தொகுப்பும் உறுதுணையாக இருந்துள்ளன.

‘ஆன்யா’ஸ் டுடோரியல்’ – ஒருமுறை பார்த்து ரசிக்கலாம்!