அரசாங்கம் மக்களுக்கானதாக இருக்கையில் தான் போலீசும் மக்களுக்கானதாக இருக்கும்!

“நாங்கள் தமிழனுக்காகத்தானே போராடினோம், தமிழ்நாட்டு போலீஸ் ஏன் எங்களை தாக்குகிறது?” என் தொலைக்காட்சி ஒன்றில் கேட்கிறார் போராட்ட களத்தில் இருந்த பெண்.

“பிடிபட்ட ஒருவனை 50 போலீஸ் சேர்ந்து தாக்குவதை நம்ப முடியவில்லை. ரவுடிகள்கூட இப்படி செய்ய மாட்டார்களே” என் திகைப்போடு என்னிடம் வினவினார் ஒரு கார்ப்பரேட் ஊழியர். சில நாட்களுக்கு முன்பு இதே மெரினா போராட்டத்தின் ஒழுங்கு பற்றி பெரிய ஆச்சர்யத்தை வெளிப்படுத்தியவர் அவர்.

“தன் மீதான வன்முறையை சகித்துக்கொள்ளவும், மக்கள் மீது குற்ற உணர்ச்சி இல்லாமல் வன்முறையை பிரயோகிக்கவும் எப்படி ராணுவ மற்றும் காவல்துறையால் முடிகிறது? இதன் பின்னிருக்கும் உளவியல் என்ன?” என புரியாமல் கேட்கிறார் ஒரு ராணுவ வீரர்.

இவையெல்லாம் வெறும் உதாரணங்கள். இப்படிப்பட்ட பல கேள்விகளை நான் நாள்தோறும் எதிர்கொள்கிறேன். இதுதான் நமது உண்மையான போலீசின் முகம், ஜனவரி 23க்கு முந்தைய ஆறேழு நாட்களாக நீங்கள் கேள்விப்பட்டவை, பிறந்தது முதல் பார்த்த சினிமாவில் பார்த்தவை எல்லாம் வெறும் வேஷம் எனும் என் விளக்கத்தை நம்பவும் முடியாமல் மறுக்கவும் முடியாமல் அவர்கள் தடுமாறுகிறார்கள்.

வாச்சாத்தி, சிதம்பரம் பத்மினி போன்ற வார்த்தைகள் எந்த சலனத்தையும் அவர்களிடம் ஏற்படுத்தாது.. காரணம் அவற்றை பற்றி எதுவும் அவர்களுக்கு தெரியாது. ராணுவம் இருப்பதால் நாடு பாதுகாப்பாக இருப்பதாகவும், போலீஸ் இருப்பதால் ஊர் பாதுகாப்பாக இருப்பதாகவும் நம்பும் அப்பாவிகள் அவர்கள்.

இதுநாள் வரை அவர்கள் போலீசின் தடியடி காட்சிகளை பார்த்திருக்கக் கூடும். ஒரு சப்.இன்ஸ்பெக்டர் சிறுவன் ஒருவனை கைது செய்து வாயில் சுட்ட செய்தியை படித்திருப்பார்கள். ஆனாலும், அத்தகைய கொடுமைகள் அவர்கள் வாழ்வில் குறுக்கிட வாய்ப்பில்லை என்பதால் மூளையில் ஏறியிருக்காது. செலக்டிவ் லிசனிங் என்றொரு பதம் உளவியலில் உண்டு. அதாவது, தனக்கு தேவையில்லை என கருதும் செய்திகளை கவனிக்காமல் மூளை புறந்தள்ளிவிடும். நாம் அப்படித்தான் இதுவரை போலீஸின் அத்துமீறல்களை கவனித்தும் கவனிக்காமல் இருந்திருக்கிறோம்.

ஆனால், அதன் பொருள் நாம் போலீசை நம்புகிறோம் என்பதல்ல. போலீஸ் அத்துமீறலை நியாப்படுத்தும் நடுத்தர வர்க்கம் தான் போலீஸ் மீது அதிகம் அவநம்பிக்கை கொண்டிருக்கிறது. பெரும்பாலான சமயங்களில் போலீஸ் நிலையத்தை அணுகுவதையே நாம் தவிர்க்கிறோம். போலீஸ்காரர்கள் வீட்டில் சம்மந்தம் செய்வதையே தவிர்க்கும் பல குடும்பங்களை எனக்கு தெரியும். (“எதுக்கு வம்பு, சின்ன பிரச்சினைக்குகூட ஸ்டேஷனுக்கு இழுத்துருவாங்க.”) பேருந்தில் பணம் பொருள் தொலைத்த எத்தனை பேர் காவல்துறையிடம் புகார் கொடுக்கிறார்கள்? அது ஒரு கூடுதல் தண்டம் எனும் அபிப்ராயம் தான் பலர் மனதில் இருக்கிறது. போலீசின் அராஜகம் மீதான நமது பாராமுகத்தின் அடிப்படை, அது நம்மை பாதிக்காது எனும் நம்பிக்கையும், பாதித்தால் பணம் கொடுத்து தப்பிக்கலாம் எனும் வாய்ப்பும்தான் (குடும்ப பிரச்சினைக்காக ஸ்டேஷன் போனவர்கள் அனுபவத்தை கேட்டுப்பாருங்கள்).

அப்படியானால் போலீஸ் என்னதான் செய்கிறது?

அவர்கள் பணி என்பது தங்கள் மீதான அச்சத்தை மக்களிடம் விதைத்து அதனை பராமரிப்பது மட்டுமே. ஓராண்டுக்கு முன்பு திருப்பூர் பேருந்து நிலையத்தில் காத்திருக்கையில், அங்கே குடித்துவிட்டு படுத்திருந்த ஒருவரை காவலர் ஒருவர் சந்தேகத்தின் பேரில் அழைத்து சென்றார். பேருந்து நிலையத்திலேயே இருந்த காவலர் தங்குமிடத்தில் அவரை உட்கார வைத்துவிட்டு, தன் வண்டியில் இருந்த பிளாஸ்டிக் குழாய் ஒன்றை எடுத்து பொறுமையாக துடைத்து வளைத்துப் பார்த்து, அதே அளவு நிதானத்துடன் உள்ளே போய் பிடித்து வைத்த நபரை சரமாரியாக அடித்தார். ஒரு கேள்விகூட கேட்கவில்லை, முகத்தில் ஆத்திரம் இல்லை. அடி வாங்குபவரின் அலறல் அவரிடம் எந்த சலனத்தையும் ஏற்படுத்தவில்லை. வழக்கமாக செய்யும் காலைவேளை பூசையைப்போல மிக இயல்பாக இருந்தது அந்த வெறித் தாக்குதல்.

பயம், சமயங்களில் குற்றங்களை தடுக்கும்தான். ஆனால் நமது அந்த பயம்தான் பெரும் குற்றங்களை போலீசின் ஒத்துழைப்போடு பலரும் செய்ய காரணமாக இருக்கிறது. மதுரை கிரானைட் மாஃபியா பி.ஆர்.பழனிச்சாமி குற்றம் சாட்டப்பட்ட நபராக மேலூர் காவல் நிலையத்திற்கு வந்தபோது அந்த வளாகம் சுத்தம் செய்யப்பட்டு புதுப்பொலிவோடு அவரை வரவேற்க காத்திருந்தது என்றால் நம்புவீர்களா? காவலர் விடுதியில் சில வழிப்பறி திருடர்களை தங்க வைத்து திருட்டை ஒரு தொழிலாக செய்தார் ஒரு போலீஸ்காரர். கைது செய்யப்பட்ட ஒரு பெண்ணை தனியார் லாட்ஜில் அடைத்து வைத்து 12 நாட்கள் தொடர் பாலியல் வல்லுறவு செய்து லட்சக்கணக்கில் பணமும் பறித்தார் தஞ்சாவூர் போலீஸ் அதிகாரி (அந்தப்பெண் கடிதம் எழுதிவைத்துவிட்டு லாட்ஜிலேயே தற்கொலை செய்துகொண்டார். அந்த காவல் ஆய்வாளர் இன்னமும் பணியில்தான் இருக்கிறார்).

இவையெல்லாம் கடலின் ஒரு துளி. ஒழுக்கமான ஊடகங்கள் இருந்தால் போலீசின் குற்றங்களுக்கு என ஒரு தனி இணைப்பையே தினசரிகள் தரவேண்டியிருக்கும். (போலீஸ் – பத்திரிக்கைகள் இடையேயான உறவு இன்னொரு அசிங்கமான அபாயம்)

அரசு இத்தகைய கிரிமினல் வேலைகளை அனுமதிக்கக் காரணம், அவர்களை அச்சமின்றி அரசுக்காக எந்த செயலையும் செய்ய வைக்கத்தான். விழுப்புரத்தில் இருளர் பெண்களை கூட்டு வன்புணர்வு செய்த காவல்துறை குற்றவாளிகளை கைது செய்யக்கூட மறுத்தது தமிழக அரசு. பாதிக்கப்பட்ட பெண்களுக்கு 5 லட்சம் கொடுத்துவிட்டு, பாலியல் வன்கொடுமை நடக்கவேயில்லை என சாதித்தார் ஜெயா. அடியாள் மட்டத்திற்கே உரித்தான குற்றங்களை அனுமதித்தால்தான் தாதாவின் அசைன்மெண்ட்களை அவர்கள் தயங்காமல் செய்வார்கள். காவல்துறையில் இருக்கும் கொடிய அடிமைத்தனத்தை கேள்வி கேட்காமல் சகித்துக்கொள்ளும் பயிற்சியும் போலீசை காட்டுமிராண்டிகளாக மாற்றும் ஒரு கூடுதல் காரணி. உன் மீதான அடக்குமுறையை சகித்துக்கொள், உனக்கான அடிமையை நான் தருகிறேன் எனும் சமரசம் அது… இந்தியாவின் சாதியமைப்பை போலவே.

இந்திய ராணுவத்தில் அதிகாரிகளின் வீட்டு வேலையை மட்டும் செய்வதற்காகவே ஒன்றரை லட்சம் வீரர்கள் பயன்படுத்தப்படுகிறார்கள். அவர்களுக்கு உள்ள வாய்ப்பு கொஞ்சம் இரக்க குணமுள்ள அதிகாரியிடம் பணி கிடைக்க வேண்டும் என வேண்டுவது மட்டும்தான். சுயமரியாதையை இழப்பவர்களை எளிதாக மிருகமாக்க முடியும். சுயமரியாதை காயடிக்கப்பட்ட வடஇந்திய இந்துக்களிடம் இந்துவவாதிகள் எளிதில் வன்முறையை கற்றுத்தர முடிவதன் காரணமும் இதுதான்.

இவர்கள் எல்லோரும் வீட்டில் தன் மனைவியிடம் அன்பை பொழியலாம். மகனோ மகளோ சிறிதாக காயம்பட்டாலும் பதறிப்போகலாம். ஆனால் ஒரு அமைப்பாக அவர்கள் வன்முறைக்கு பயிற்றுவிக்கப்பட்டவர்கள். ஹிட்லரின் நாஜிப்படை மனிதர்களை விதம் விதமாக சித்திரவதை செய்வதை விளையாட்டைப்போல செய்யப் பழகியிருந்தார்கள். அவர்கள் வீட்டில் ஒரு அன்பான அப்பாவாகவும் மகனாகவும் கணவனாகவும்தான் இருந்திருப்பார்கள். ஆனாலும் எப்படி வன்முறையை சாதாரணமாக பயன்படுத்த முடிகிறது?

இரண்டு காரணங்கள் இதனை சாத்தியமாக்குகின்றன. முதலாவது, இந்த தாக்குதலுக்கான நியாயத்தை அவர்கள் கற்பித்துக்கொள்கிறார்கள். நம் எல்லோருக்கும் எல்லா விதிகளுக்கும் ஒரு விதிவிலக்கு இருக்கும். உங்கள் தேநீரை ஒரு இளைஞன் தட்டிவிடுவதற்கும் குழந்தை தட்டிவிடுவதற்கும் ஒரே எதிர்வினையை நீங்கள் வெளிப்படுத்துவதில்லை. காரணம் குழந்தைகளின் சில தவறுகளுக்கு நீங்கள் விலக்கு அளித்திருக்கிறீர்கள். எல்லா குற்றவாளிகளும் (சீருடை அணிந்த மற்றும் அணியாத) தங்கள் குற்றங்களுக்கான நியாயத்தை வைத்திருப்பார்கள். மேலும் நியாயத்தை உங்கள் சூழலும் உருவாக்குகிறது. திருட்டை தொழிலாக செய்யும் சமூக அமைப்பில் நேர்மையாக வாழ விரும்புவன் தவறானவனாக கருதப்படுவான். அப்படியான ஒரு நியாயத்தை போலீஸ் மற்றும் ராணுவ சூழல் உருவாக்குகிறது. அடிக்காவிட்டால் இவர்களை கட்டுப்படுத்த முடியாது எனும் நியாயம் ஒவ்வொரு போலீஸ்காரன் மனதிலும் எழுதப்படுகிறது.

இதனை விளங்கிக்கொள்ள பாஜகவின் முஸ்லீம் விரோத பிரச்சாரங்கள் ஒரு சரியான உதாரணம். ஏன் அவர்கள் நாள் தவறாமல் இஸ்லாமிய வெறுப்பை பரப்புகிறார்கள்? அதன் நோக்கம் கலவரத்துக்கு ஆள் திரட்டுவது மட்டும் அல்ல. அதனை பணம் கொடுத்துகூட அவர்களால் செய்ய முடியும். ஆனால் இந்த பிரச்சாரம் மூலம் அவர்கள் முஸ்லீம் மக்கள் மீதான தாக்குதலை ஏற்றுக்கொள்ள வைக்கும் நியாயத்தை (ஜஸ்டிஃபிகேஷன்) பொதுத்தளத்தில் உருவாக்குகிறார்கள். அதன் விளைவுதான் குஜராத் கொலைகள் குறித்த இந்திய கூட்டுமனசாட்சியின் மௌனத்திற்கு அடிப்படை.

இரண்டாவது காரணம் பழக்கம். வன்முறையை பிரயோகிக்கவும் அதனை ஏற்றுக்கொள்ளவும் பழக்கப்படுத்தினால் காலப்போக்கில் அதனை மிக இயல்பாக மனம் ஏற்றுக்கொள்ளும். முரட்டுத்தனமாக அடிக்கும் கணவனை பிரிந்து வர மறுக்கும் பெண்களை நான் பார்த்திருக்கிறேன். ‘விசாரணை’ படத்தின் கதாசிரியர் தனது சிறை அனுபவங்களை குறிப்பிடுகையில் போலீஸ்காரர்கள் லாக்கப்பில் இருக்கும் எல்லோரையும் தினமும் வெறித்தனமாக அடிப்பதை ஒரு வழக்கமாகவே வைத்திருந்ததாக பதிவு செய்கிறார். புதிதாக வேலைக்கு வரும் போலீஸ்காரர் அங்கே நடத்தப்படும் வன்முறையை பார்த்துப் பார்த்து அதற்கு தன்னை விரைவில் தயார்படுத்திக்கொள்ள முடியும். இல்லாவிட்டால் தனித்துவிடப்பட்டு விடுவோம் எனும் பயம் அவரை தொற்றிக்கொள்ளும்.

காரணங்கள் இருப்பதால் போலீசின் வன்முறையை நாம் சகித்துக்கொள்ள முடியாது. முதல்நாள் வரை தனக்கு தண்ணீரும் உணவும் கொடுத்த மனிதர்களை ஒரே உத்தரவில் அடித்து துவைக்க இவர்களால் முடிகிறது. குற்றமற்ற ஒருவனை துணிந்து ஆயுள் சிறைக்குள் வைக்கும் சுயநலம் இவர்களுக்கு பயிற்றுவிக்கப்பட்டிருக்கிறது (பாண்டியம்மாள் வழக்கு). தன்னுடன் உணவருந்திய ஒருவனை மூர்க்கமாக அடித்து துவைக்கும் அளவுக்கு இவர்கள் மனசாட்சியற்றவர்களாக மாற்றப்பட்டிருக்கிறார்கள். என்கவுண்டர் செய்யப்படும் முன்பு அந்த நபரோடு காவலர்கள் வெகு சாதாரணமாக தேநீர் அருந்தியிருக்கக் கூடும். ஒரு முற்றிய சைக்கோபாத் போல நிராதரவான பெண்களை இவர்களால் பாலியல் வன்புணர்ச்சி செய்ய முடிகிறது. இவையெல்லாம் தனிமனித பலவீனங்கள் அல்ல. தன்னை எப்படியும் காப்பாற்றிவிடும் என நம்பிக்கையளிக்கும் அரசு அமைப்புத்தான் இவர்களது குற்றங்களை ஊக்குவிக்கிறது.

சென்னையின் மீனவர் குடியிருப்புக்களில் போலீஸ் நடத்திய வெறியாட்டம் என்பது வெகுமக்களுக்குத்தான் புதிய செய்தி. போலீசைப் பற்றி அறிந்தவர்களுக்கு இது ஒரு கூடுதல் தகவல் அவ்வளவே. முன்னாள் போலீஸ் அதிகாரிகள் டிவியில் சொல்வதுபோல இது ஒரு சிலரின் அத்துமீறல் அல்ல. எதிரியின் வீடென்றாலும் அவர் கடைக்கோ வயலுக்கோ உங்களால் தீ வைக்க முடியுமா? ஆனால் போலீஸால் மீனவர்களின் வாழ்வாதாரத்தை ஒற்றை தீக்குச்சியியால் அழிக்க முடிகிறது (பாஸ்பரஸ் துணையோடு). கட்டுப்படுத்த முடியாத சூழலால் தடியடி நடத்தப்பட்டதாக அரசு எப்போதும் சொல்லிவருகிறது. அப்படியானால் தனியாக சிக்கியவனை 50 போலீஸ்காரர்கள் சேர்ந்து மிருகத்தனமாக அடித்து இழுத்து செல்வதன் பொருள் என்ன?

கூட்டத்தை கலைப்பதுதான் தடியடியின் நோக்கம் என எல்லோரும் நம்புகிறார்கள். ஆனால் எல்லா தடியடி சம்பவங்களிலும் போலீஸ் சிக்குபவனை அடிக்கத்தான் அதிகம் மெனக்கெடுகிறது. போலீஸ்காரர் அடியில் இருந்து தப்பி ஓடுகிறார் ஒரு பெண், அப்போது கீழே விழுந்த அவரது பர்ஸை எடுத்து கொடுக்கிறார் இன்னொரு போலீஸ்காரர். ஒருகையால் பர்சை கொடுத்துக்கொண்டே இன்னொரு கையில் இருக்கும் லத்தியால் அவரை அடிக்கிறார் (மதுரை அல்லது கோவையில் எடுக்கப்பட்ட காட்சியாக இருக்கலாம்). ஒரு போலீஸ்காரர் மிக நிதானமாக ஆட்டோக்களுக்கு தீ வைக்கிறார். இன்னொருவர் அதே நிதானத்தோடு குடிசையை கொளுத்துகிறார். இவையெல்லாம் தனி மனித அத்துமீறல்கள் எனும் பச்சைப் பொய்யைக்கூட நம்புவோம். ஆனால் இவர்கள் அப்படி செய்யும்போது அமைதியாக ஏனைய போலீஸ்காரர்கள் பார்த்துக்கொண்டிருப்பதை எப்படி வகைப்படுத்துவீர்கள்? கடைகளை கொளுத்திவிட்டு அங்கே திருடிய மீன்களை சுட்டு தின்னும் மனோபாவத்தை குறிப்பிடும் கொடிய மனநோய்கள் மருத்துவ அகராதியில்கூட கிடையாது.

பாமர மக்களை இப்படி துன்புறுத்துவதுதான் போலீசின் உண்மையான முகம். அதனை உணர்ந்ததால்தான் மக்களுக்காக அவர்கள் தண்ணீர் பாட்டில் சுமந்தபோது நீங்கள் எல்லோரும் பேராச்சர்யம் கொண்டீர்கள். அரசாங்கம் யாருக்கு விசுவாசமாக இருக்கிறதோ அவர்களுக்கு விசுவாசமாக இருக்கும் அடியாள்படைதான் போலீஸ். எதேச்சையாக நடக்கும் நற்காரியங்கள் மூலம் அவர்களுக்கு பாபவிமோசனம் தர முடியாது. கோடிக்கும் மேலான மக்களைக் கொன்ற ஹிட்லர் தன் ஸ்டெனோகிராபரிடம் மிக கண்ணியமாக நடந்துகொண்டவர்தான். தன் மனைவியையே கொன்று சமைத்த இடி அமீன் சாகும்வரைக்கும் அவரோடு அவரது ஏனைய மனைவிகள் சாதாரணமாக வாழ்ந்துவந்திருக்கிறார்கள். அவர்கள் பார்வையில் அவர் நல்லவராக இருக்கக்கூடும்.

சம்பளத்தை கூட்டுவது, பணிச்சுமையை குறைப்பது போன்ற தடவிக்கொடுக்கும் மாற்றங்களால் ஒருக்காலும் போலீசின் சுபாவத்தை மாற்ற இயலாது. இத்தகைய பரிந்துரைகள் எல்லாம் போலீஸ் மீது மக்களுக்கு பரிதாபம் வரவைப்பதற்காக செய்யப்படுபவை (அவை ஓரளவுக்கு உண்மையென்றாலும்). இத்தகைய சூழலிலும் எந்த போலீசும் மந்திரியின் மகன்மீது கைவைக்க மாட்டார்கள். தங்கள் அதிகாரிக்கு எதிராக ஒன்றுகூட மாட்டார்கள். எல்லா பிரச்சினைகளுக்கும் வடிகாலாக எளிய மக்கள் மீதான வன்முறையை மட்டும் பிரயோகிப்பதில் பரிதாபம் கொள்ள என்ன இருக்கிறது?

இவற்றையெல்லாம் சரிசெய்ய நமக்கிருக்கும் ஒரே வழி மக்களுக்கான அரசு அமைவதுதான். அரசாங்கம் மக்களுக்கானதாக இருக்கையில் தான் போலீசும் மக்களுக்கானதாக இருக்கும். அதுவரைக்கும் காவல்துறை என்பது பெரிய கிரிமினல்களின் நண்பனாகவும் சாதாரண மக்களுக்கு அச்சுறுத்தலாகவும்தான் இருக்கும். அப்படியான அரசு அமையும்வரை பாதிக்கப்படும் மக்கள் பக்கம் இருப்பதுதான் நமக்கிருக்கும் ஒரே வாய்ப்பு, காரணம் தங்கள் உயிரையும் பொருட்படுத்தாமல் அடிவாங்கிய மாணவர்களை காக்க வந்தவர்கள் போலீசின் எளிய இலக்கான பாமர மக்கள்தான்.
————–.

(யார் எழுதியது என்று தெரியவில்லை. உள்ளதை உள்ளபடி புட்டு வைத்துள்ள உண்மைகள். இது ஒரு வாட்ஸ்அப் பகிர்வு செய்தி.)

Shared from UMAR FAROOQ