நீட் விலக்கு கோரி 8ஆம் தேதி திருச்சியில் பொதுக்கூட்டம்: திமுக தோழமை கட்சிகள் அறிவிப்பு!
பிளஸ் 2 தேர்வில் 1200க்கு 1176 மதிப்பெண்கள் எடுத்தும், நீட் தேர்வு கொடுமை காரணமாக மருத்துவம் படிக்க முடியாத நிலை ஏற்பட்டதால், அரியலூர் மாணவி அனிதா கடந்த 1ஆம் தேதி தற்கொலை செய்து கொண்டார். இதனால் தமிழகம் முழுவதும் கொந்தளிப்பான சூழல் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், நீட் தேர்வு கொடுமைக்கு முற்றுப்புள்ளி வைக்க எத்தகைய போராட்டங்களை முன்னெடுப்பது என்பது குறித்து முடிவு செய்வதற்கான ஆலோசனைக் கூட்டத்துக்கு திமுக ஏற்பாடு செய்திருந்தது. அதிமுக, பாஜக, பாமக தவிர மற்ற கட்சிகளுக்கு இக்கூட்டத்தில் கலந்துகொள்ள அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.
ஆனால், திமுகவின் தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் இன்று நடந்த இந்த ஆலோசனைக் கூட்டத்தில் தேமுதிக, மதிமுக, தமாகா ஆகிய கட்சிகள் பங்கேற்காமல் புறக்கணித்துவிட்டன. இதனால் திமுக கூட்டணிக் கட்சிகள் மற்றும் மதிமுக தவிர்த்த மக்கள்நல கூட்டணிக் கட்சிகள் ஆகியவற்றின் ஆலோசனைக் கூட்டமாகவே இது அமைந்துவிட்டது.
திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற இந்த ஆலோசனைக் கூட்டத்தில் தமிழக காங்கிரஸ் தலைவர் சு.திருநாவுக்கரசர், சட்டப்பேரவை காங்கிரஸ் கட்சித் தலைவர் கே.ஆர்.ராமசாமி, திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் அகில இந்தியத் தலைவர் கே.எம்.காதர் மொகிதீன், மமக தலைவர் எம்.எச்ஜவாஹிருல்லா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களின் விவரம்:
மத்திய, மாநில அரசுகளின் அலட்சியத்தால் தனது மருத்துவக் கனவு பொய்த்துப் போனதால் தற்கொலை செய்துகொண்ட மாணவி அனிதாவின் மரணத்துக்கு இந்தக் கூட்டம் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறது. அனிதாவின் உயிர்த் தியாகம் சமூக நீதி பாதுகாக்கப்பட வேண்டும் என்ற விழிப்புணர்வை, மாணவ சமுதாயத்தினரிடமும், தமிழக மக்களிடமும் விதைத்துள்ளது.
தமிழகத்துக்கு மட்டும் நீட் தேர்விலிருந்து விலக்கு அளிக்க முடியாது என உச்ச நீதிமன்றத்தில் பிரதமர் மோடி தலைமையிலான அரசு எடுத்த நிலைப்பாடுதான் அனிதாவின் தற்கொலைக்கு காரணம். எனவே, அனிதாவின் உயிரிழப்புக்கு பிரதமர் மோடியும், மத்திய அரசுக்கு உரிய அழுத்தம் தரத் தவறிய முதல்வர் கே.பழனிசாமியும் பொறுப்பேற்க வேண்டும்.
மாநில அதிகார வரம்புக்குள் இருந்த கல்வியை பொதுப்பட்டியலுக்கு மாற்றி கல்வி தொடர்பாக எஞ்சியிருக்கும் அதிகாரங்களையும் பறிக்கும் முயற்சியில் மத்திய அரசு ஈடுபட்டு வருகிறது. சமூக நீதியின் தொட்டிலாக இருக்கும் தமிழகத்தில் நீட் தேர்வு என்ற புதிய சதித் திட்டத்தின் மூலம் சமூக நீதியை சீர்குலைக்கும் மத்திய பாஜக அரசின் முயற்சியைக் கண்டு தமிழகமே எரிமலையாக குமுறிக் கொண்டிருக்கிறது. பேரவையில் நிறைவேற்றப்பட்ட 2 மசோதாக்களுக்கு ஒப்புதல் தராமல் தமிழக மக்களின் உணர்வுகளை காலில் போட்டு மிதித்து கூட்டாட்சி தத்துவத்துக்கு வேட்டு வைத்துள்ளது. தமிழக கல்வியில் தரமில்லை என மனுதர்ம கண்ணோட்டத்தோடு ஆட்சியில் இருக்கும் பாஜகவினர் பொய்ப்பிரச்சாரம் செய்து வருவது கடும் கண்டனத்துக்குரியது. பொதுப்பட்டியலுக்கு மாற்றப்பட்ட கல்வியை உடனடியாக மாநிலப் பட்டியலுக்கு மாற்ற வேண்டும்.
அரியலூர் மாணவி அனிதா மரணத்துக்கு காரணமான மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்தும், நீட் தேர்விலிருந்து தமிழகத்துக்கு நிரந்தர விலக்கு அளிக்கவும், கல்வியை மாநிலப் பட்டியலில் சேர்க்கவும் உரிய சட்டத் திருத்தங்களை செய்ய வேண்டும் என வலியுறுத்தி வரும் 8-ம் தேதி திருச்சியில் அனைத்துக் கட்சித் தலைவர்கள் கலந்து கொள்ளும் மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெறவுள்ளது.
இவ்வாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டம் முடிந்ததும் செய்தியாளர்களிடம் பேசிய ஸ்டாலின், ‘‘நீட் தேர்வினால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து ஆலோசித்தோம். திருச்சியில் 8-ம் தேதி பொதுக்கூட்டம் நடத்துகிறோம். அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து பொதுக்கூட்டத்தில் அறிவிப்போம். அனிதாவின் மரணத்தை திசைதிருப்பவே இது குறித்து விசாரணை நடத்த வேண்டும் என சிலர் பேசி வருகின்றனர். இதனை சட்ட ரீதியாக எதிர்கொள்வோம்’’ என்றார்.