நீட் தேர்வை எதிர்த்து லயோலா கல்லூரி மாணவர்கள் சாலை மறியல் போராட்டம்!
மாணவி அனிதா மரணத்தை அடுத்து நீட் எதிர்ப்பு போராட்டம் வலுத்து வரும் நிலையில், சென்னை லயோலா கல்லூரி மாணவர்கள் இயக்குநர் கவுதமன் தலைமையில் சாலையில் அமர்ந்து போராட்டம் நடத்தினர். நடிகை ரோகினியும் இந்த போராட்டத்தில் கலந்துக்கொண்டார்.
நீட் மருத்துவ நுழைவுத்தேர்வு தமிழக மாணவர்களை பாதிக்கும் என்ற நிலையில் விதிவிலக்கு கேட்டு தொடர் போராட்டம் நடந்து வந்தது. தமிழக அரசும், மத்திய அரசும் நீட் தேர்விலிருந்து தமிழகத்திற்கு ஓராண்டு விலக்கு அளிப்பதாக கடைசிவரை கூறிவந்த நிலையில் திடீரென விலக்கு இல்லை என அறிவிக்கப்பட்டது.
இது மாணவர்களைக் கடுமையாக பாதித்தது. 1176 மதிப்பெண்கள் எடுத்து நம்பிக்கையுடன் இருந்த அரியலூர் மாணவி அனிதா நீட் விலக்கு கோரி உச்ச நீதிமன்றம் சென்றார். அங்கு வழக்கு தள்ளுபடியான நிலையில் திடீரென தற்கொலை செய்து கொண்டார்.
அனிதாவின் தற்கொலை தமிழகம் முழுதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில் அனைத்து கட்சிகளும் அனிதாவின் மரணத்திற்கு நீதி கேட்டு நீட் விலக்கு அளிக்க வலியுறுத்தி வருகின்றனர்.
தமிழகம் முழுதும் மாணவர்கள், இளைஞர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.இந்நிலையில் இன்று (செப்டம்பர் 9) காலை திடீரென லயோலா கல்லூரி மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து கல்லூரி வாயிலில் அமர்ந்து போராட்டம் நடத்தினர்.
இந்தப் போராட்டத்தில் இயக்குனர் கவுதமன், நடிகை ரோகினி கலந்துகொண்டனர். இயக்குநர் வெற்றிமாறன் போராட்டத்தில் கலந்துகொண்டு ஆதரவு தெரிவித்தார். மாணவர்கள் கோரிக்கையை அரசு பரிசீலிக்க வேண்டும் என்றார்.
நூற்றுகணக்கான மாணவர்கள் ஆவேசமாக கோஷமிட்டபடி சாலையில் அமர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். சம்பவ இடத்தில் பாதுகாப்புக்கு போலீசார் குவிக்கப்பட்டு மாணவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தி வருகின்றனர்.
சென்னையில் பல்வேறு கல்லூரி மாணவர்களும் போராட்டம் நடத்த வாய்ப்பு உள்ளதாக வந்த தகவலை அடுத்து பச்சையப்பன் கல்லூரி, மாநில கல்லூரி, நந்தனம் கலைக்கல்லூரி உள்ளிட்ட பல கல்லூரிகளில் போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.