‘சந்திரகுமார் அண்ட் கோ’வின் கலகத்துக்கு காரணம் சாதிவெறி?

மக்கள் நலக் கூட்டணியுடன் தேமுதிக கூட்டு சேர்ந்ததால், திருமாவளவனின் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்காகவும் தேர்தல் பணிகளைச் செய்ய நேரிடும் என்பதாலும், அதில் விருப்பம் இல்லை என்பதாலும்தான் தேமுதிக எம்.எல்.ஏ.க்களான சந்திரகுமார், சேகர், பார்த்திபன் உள்ளிட்டோர் விஜயகாந்த்துக்கு எதிராக கலகக்குரல் எழுப்பிவருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

“தேமுதிக எப்போதும் சாதிப் பாகுபாடு பார்த்ததில்லை. நானும் சாதி பார்த்து பழகியதில்லை” என்று அக்கட்சியின் நிறுவனத் தலைவர் விஜயகாந்த் உறுதியாக கூறிவந்தார்.

தேமுதிகவின் தோற்றமும் வளர்ச்சியும் தமிழகத்தின் வடமாவட்டங்களில் பாமக செல்வாக்கை கடுமையாக சரித்ததோடு, கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில், பாமக பலமாக உள்ள மாவட்டங்களாக பாமகவினராலேயே கூறப்பட்டுவரும் சேலம், விழுப்புரம் மாவட்டங்களில் தேமுதிக அதிரடியாக வெற்றியை குவித்தது.

இவற்றில் ஒரு தொகுதியான மேட்டூரின் தேமுதிக சட்டப்பேரவை உறுப்பினர் எஸ்.ஆர்.பார்த்திபன், தேமுதிக தலைவர் மீதும், மக்கள் நலக் கூட்டணியோடு அவர் இணைந்ததது குறித்தும் தற்போது பல்வேறு கடுமையான விமர்சனங்களை செய்தியாளர்கள் முன் வைத்து வருகிறார்..

இவர் முன்னதாக சேலம் மாவட்டத்தில் தனது ஆதரவாளர்களின் ஆலோசனை கூட்டத்தில் பேசியபோது, “தேமுதிக தலைமை, மக்கள் நலக் கூட்டணியோடு எப்படி தேர்தல் கூட்டணி வைக்கலாம்? அதில், விடுதலை சிறுத்தைகள் கட்சி இருக்கிறது. அவர்களுக்கும் நமக்கும் ஆகாது. எனவே, திருமாவளனுக்காக அவர் கட்சி சார்பில் நிறுத்தப்படும் வேட்பாளர்களுக்காக நான் எப்படி ஓட்டு கேட்டு செல்லமுடியும்? அதனால் என்னால் தேர்தல் வேலை செய்ய முடியாது. இந்த நிலையில் ஏன் நாம் திமுக பக்கம் செல்லக் கூடாது?” என்று கூறியதாக தகவல் தெரிவிக்கிறது.

ஆனால், அவரது இந்த நிலைப்பாட்டுக்கு சேலம் தேமுதிக மட்டத்திலேயே தற்போது கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. அவர் எந்தத் தொகுதியில் நின்றாலும் அவருக்கு எதிராக தீவிர பிரசாரம் செய்து தோற்கடிப்பது என்றும் சேலம் மாவட்ட தேமுதிகவினர் முடிவு செய்துள்ளனர்.

பார்த்திபனின் இந்த தலித் விரோத நிலைப்பாட்டிலேயே சந்திரகுமார், சேகர் உள்ளிட்டோரும் இருப்பதாக கூறப்படுகிறது.

எனவே, இவர்களை தி.மு.க. தூண்டிவிட்டதா, விலைக்கு வாங்கியதா? என்ற கேள்விக்கு அப்பால், மீடியாக்களின் முன்னால் தினம் தினம் குரைக்கும் இவர்களைப் போன்றவர்களின் ஆதிக்க நடுச்சாதி வெறியையும், தலித் விரோத வெறுப்புணர்வையும் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டியது அவசர அவசியம் என்றே தோன்றுகிறது.

– அமரகீதன்