‘அன்னபூரணி’யும் ஆபத்தின் மேகங்களும்…!
தியேட்டரில் வெளியானபோது அன்னபூரணியை பார்க்க முடியவில்லை. ஓ.டி.டி தான் இருக்கிறதே என்று பலரைப் போல எண்ணியமர்ந்தால், சிலரின் மனது புண்படுகிறது என்று படம் நெட்ஃப்ளிக்ஸில் இருந்து நீக்கப்பட்டிருக்கிறது. யார் அந்த சிலர்?
8 வயது சிறுமி கடத்தப்பட்டு, கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, கொலை செய்யப்பட்டபோது, அதற்கு காரணமானவர்களை கைது செய்ததற்கு எதிராக ஊர்வலம் சென்று போராடியவர்கள். காரணம், அவர்கள் இந்துக்கள். மனம் புண்பட்டு விட்டது.
6 மாத கர்ப்பிணிப் பெண்ணை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்து, அவளின் 3 வயது மகளை கல்லில் அடித்து கொலை செய்தவர்களை அரசே முன்வந்து ‘நன்னடத்தை’ காரணமாக விடுதலை செய்தபோது, அதற்காக ஸ்வீட் எடுத்து கொண்டாடியவர்கள். காரணம் அவர்கள் அனைவரும் இந்துக்கள். கைதானபோது மனம் புண்பட்டு விட்டது.
மணிப்பூரில் இரு பெண்கள் முழு நிர்வாணமாக்கப்பட்டு, அது பற்றிய பிரக்ஞையே இல்லாதளவு தாக்கப்பட்டு இழுத்து வரப்பட்டபோது, அது குறித்து உடலின் எந்த பாகமும் புண்படாதவர்கள். ‘இது போல் நிறைய சம்பவங்கள் நடந்தது. நாங்கள் சமூக வலைத்தளங்களை முடக்கியதால் தான் அதுவெல்லாம் வெளியே வராமல் நின்றது’ என்று முழங்கியவர்கள்.
இன்னும் எண்ணற்ற தருணங்களில், கோயிலில் நுழைந்ததற்காக, பொதுக் கிணற்றில் நீர் எடுத்ததற்காக பல குடும்பங்களை நிர்வாணப்படுத்தி அடித்து சித்தரவதைகள் செய்தவர்கள். ஆனால் பாருங்களேன்… கோயிலில் நுழைந்ததும் தண்ணீர் எடுத்ததும் கூட இந்துக்கள் தான். இருந்தும் மனம் புண்பட்டிருக்கிறது.
இப்படியான புண்படும் பாரம்பரியம் கொண்ட அந்த பிஞ்சு நெஞ்சு, இந்த முறை எதற்காக புண்பட்டு இருக்கிறது? ராமர் அசைவம் சாப்பிட்டதற்காக? இல்லை. ராமர் அசைவம் சாப்பிட்டதாக வால்மீகி ராமாயணத்தில் எழுதியதற்காக? இல்லை. பின்? ராமர் அசைவம் சாப்பிட்டதாக வால்மீகி ராமாயணத்தில் எழுதியதை ‘அன்னபூரணி’ படத்தில் சொன்னதற்கு! க்யூட் ல!!
ஆபத்தின் மேகங்கள் சூழ்கின்றன. சென்சார் செய்யப்பட்ட ஒரு படத்தை ஒரு குழு இப்படியான சாதி மதப் பிரச்சனைகளை கிளப்பி குறிப்பிட்ட காட்சிகளை நீக்க முடியும் என்றால், அங்கு நிலவுவது ஜனநாயகம் அல்ல. கருத்துரிமை அல்ல.
ஆனால் கார்ப்பரேட்டுகள், ஓ.டி.டி, அரசியல், சினிமா என பின்னிப் பிணைந்துள்ள இந்த கோடிகளின் வியாபாரத்தில் இது நிகழத் தான் செய்யும். இந்தத் தருணத்தில் இயக்குனருடன் நிற்பது அவசியம். நிற்கிறேன். இது குறித்து பெருவாரியாக பேச, எழுத, விவாதிக்க ஒவ்வொரு தளத்தில் இருக்கும் நண்பர்களும் முன் வர வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
இது எல்லாவற்றையும் தாண்டி, சந்தோஷப்பட, ஆறுதல் கொள்ள, நம்பிக்கை கொள்ளத் தக்க ஒரே விஷயம், சினிமா எத்தனை வீரியமான கருவி என்பதை இச்சம்பவம் உணர்த்திச் சென்றிருக்கிறது.
-JEYACHANDRA HASHMI