அண்ணாமலைக்கு கோபமே சுயசிந்தனை கொண்ட இரண்டாம் வகை பத்திரிகையாளர்கள் மீதுதான்!

Fascists never apologize!

செய்தி சொல்லுதல் என்பது ஒரு சமூக செயல்பாடு. காலவோட்டத்தில் அச்சமூக செயல்பாடு பலவாறாக மாறிப் பரிணமித்து வந்திருக்கிறது.

செய்திகளை இருவகைகளாக பிரிக்கலாம். ஒன்று, அரசு மக்களுக்கு தெரிவிக்க விரும்பும் செய்திகள். மற்றொன்று, அரசு மக்களுக்கு சொல்ல விரும்பாத செய்திகள். முதலாவதை பிரசாரம் எனக் கொண்டால் இரண்டாவதும் பிரசாரம்தான். ஆனால் இரண்டுக்கும் ஒரேவிதமான வரவேற்போ விளைவுகளோ இருப்பதில்லை.

இரண்டாவது வகைச் செய்தி செய்பவர்கள் அடிப்படையில் அரசை எதிர்ப்பவர்களாக இருப்பார்கள். Anti Establishment என அழைக்கப்படுவர். அவர்களுக்கென ஓர் அரசியல் நிலைப்பாடு இருக்கும். பெரும்பாலும் இடதுசாரிகளாக இருப்பார்கள். அவர்களின் சித்தாந்தத் தீரம் எந்தளவு இருக்குமெனில் ஆளுபவர்கள் இடதுசாரி கட்சிகளாக இருந்தாலும் அவர்கள் விட மாட்டார்கள். அதனால்தான் அவர்கள் Anti Establishment!

அண்ணாமலைக்கு கோபமே சுயசிந்தனை கொண்ட இரண்டாம் வகை பத்திரிகையாளர்கள் மீதுதான். அவர்களை அஜெண்டா கொண்ட பத்திரிகையாளர் எனக் குறிப்பிடுகிறார் அவர்.

அதாவது அண்ணாமலையைப் பொறுத்தவரை பாஜகவுக்கு சொம்பு தூக்கும் செய்தி போட வேண்டும். அல்லது அவர் சொல்பவற்றை கிளிப்பிள்ளை போல எழுத வேண்டும். அப்படி செய்தால்தான் அவரைப் பொறுத்தவரை பத்திரிகையாளர்.

அரசியல் சிந்தனையோ ஒரு interpretation கொண்டு செய்தி எழுதுவதோ அவரைப் பொறுத்தவரை பத்திரிகையாளருக்கான தன்மை அல்ல. ‘பாஜகவை எதிர்த்து பேசினால், நீ தேசவிரோதி’ என்கிற ‘this or that’ பைனரி அரசியலை திணிக்கும் பாஜகவின் அழுகிப் போன தந்திரத்தை ஊடகவியலாளர்களிடம் பிரயோகிக்கப் பார்க்கிறார்கள். அவ்வளவுதான்.

பாசிசவாதிகள், சுய சிந்தனை கொண்ட பத்திரிகையாளரை எதிரியாக பார்ப்பது புதிது இல்லை. சமீபத்தில் ட்ரம்ப், பொல்சனாரோ போன்றோரை நாம் பார்த்திருக்கிறோம். அண்ணாமலையோ மோடியோ விதிவிலக்கல்ல.

ஆனால் அண்ணாமலை விடுத்திருக்கும் ‘விருப்பம் இல்லையெனில் ப்ரெஸ் மீட்டுக்கு வராதீர்கள்’ என்கிற சவாலில்தான் பாசிசத்தை ஊட்டி வளர்ப்பவர் யார் என்கிற ரகசியம் இருக்கிறது.

ஊடகவியல் என்பது ஓர் அறம். ஒரு நெறி. அதற்கென ஒரு தார்மிகம் இருக்கிறது. ஓர் ஓர்மை உண்டு. யாராலும் விலைக்கு வாங்கப்படாத கர்வம் கொண்டது அது. பத்திரிகையாளனின் ஓர்மைக்கு சிக்கல் ஏற்படின், எதையும் புரட்டித் தள்ளும் வீரம் கொண்டது.

குறிப்பாக 1960-களில் தொடங்கி 80-களின் பிற்பகுதி வரை நீடித்த லட்சியவாத தலைமுறை போட்டு செழுமைப்படுத்திய பாதைதான் இரண்டாவது வகை (anti establishment) செய்திகளுக்கான பாதை.

1990-களுக்கு பிந்தைய ஊடக நிலை வேறாக மாறியது. இந்தியாவில் தாராளமயம் வந்தபிறகு, செய்தி என்பது ஒரு பண்டமானது. அந்தப் பண்டத்தை விற்பதற்கான மார்க்கெட்டிங் மற்றும் விளம்பரம் போன்ற உத்திகளை செயல்படுத்தும் கார்ப்பரெட் டீம்கள் ஊடகங்களுக்குள் நுழைந்தன.

2000மாம் வருடங்களின் பிற்பகுதியில். Breaking News அறிமுகமானது. உடனுக்குடன் செய்தி தருவதை சமூக ஊடகம் அடைந்து விட்டதால் செய்திகளின் தன்மை குறித்த பார்வை மாறுதல் கொள்ள வேண்டியிருந்தது. ஆனால் அதற்கான பார்வையோ பயிற்சியோ ஓர்மையோ அடுத்த தலைமுறை ஊடகவியலாளர்களிடம் இல்லை. எனவே மார்க்கெட்டிங்குக்கு உவப்பான செய்திகள் உருவானது.

TRP ரேட்டிங்கிலிருந்து நகர்ந்து ‘subscribe பண்ணுங்க, ஷேர் பண்ணுங்க’ என்ற இடத்தை செய்திகள் அடைந்தன. ‘நடிகை செய்யும் காரியத்தைப் பாருங்களேன்’, ‘நாயைக் கடித்த வெறி பிடித்த மனிதன்’ என பரபரப்பு மட்டுமே செய்தியாக தரும் அவலத்தை அடைந்தோம்.

செய்தி டீம்களுக்கு மார்க்கெட்டிங் இலாகா டார்கெட்டுகள் வைக்கத் தொடங்கின.

ஒருநாளில் ஒரு இணையச் செய்தியாளன் 10-லிருந்து 15 செய்திகள் எழுதிக் கொடுக்க வேண்டும். 10 பேர் கொண்ட டீம் என்றால் ஒருநாளில் 150 செய்திகள். உலகம் முழுவதும் browse செய்தாலும் ஒரே செய்திகள்தான் உண்டு. அவற்றை வெவ்வேறாக கொடுக்க வேண்டுமென்பது மட்டுமே செய்தியாளர்களின் இலக்கு. பரபரப்பூட்டும் டைட்டில்கள் மட்டுமே இன்றைய ஊடக நெறி.

ஒரே செய்தியைக் கூட ஆழமான பார்வையுடனும் அலசலுடனும் வரலாற்றுப்பூர்வ சிந்தனையுடன் எழுதினால் புதுக் கட்டுரை ஆகும். ஆனால் ஊடக நிறுவனங்களை இயக்கும் கார்ப்பரெட் கடிவாளங்களுக்கு அது தேவையில்லை. எண்ணிக்கையே பிரதானம் என்ற நம்பிக்கை அவர்களுக்கு.

விளைவு?

இன்றைய தலைமுறை ஊடகவியலாளனுக்கு ஊடகம் தெரியாது. அரசியல் கிடையாது. ஆழமான பார்வை இல்லை. பரபரப்பும் பேக்கேஜிங் மட்டுமே தெரியும். ஓர்மைக்கு வாய்ப்பே இல்லை. அறமோ சுத்தம்!

இவர்களுக்குள்ளிருந்தும் எழுந்துவிடும் ஒரு சிறு அளவிலான எதிர்ப்பைக் கூட தாங்கிக் கொள்ள முடியாத இடத்தில்தான் அண்ணாமலை இருக்கிறார்.

இன்றுமே அண்ணாமலையை எதிர்த்து பேசியும் எழுதியும் கொண்டிருப்பவர்கள் அரசியல், அறம் மற்றும் ஓர்மை கொண்ட பத்திரிகையாளர்கள்தான். லட்சியவாத தலைமுறை கொண்டு வந்த இதழியலால் ஈர்க்கப்பட்டு வந்தவர்கள்தாம். பேசாமல் உள்ளுக்குள் குமையும் பத்திரிகையாளர்கள் ஏற்கனவே நிறுவனத்தாலும் கார்ப்பரெட்களாலும் காயடிக்கப்பட்டவர்கள்.

கார்ப்பரெட்டும் பாசிசமும் கலந்து பெற்ற சாத்தான் குழந்தையின் கோரக் கெக்கலிப்புதான் அண்ணாமலையின் வார்த்தைகள்!

கார்ப்பரெட்டுகள் ஆளும் இடத்தை ஊடகங்களில் கொடுத்த பின் செய்திக்கான அறத்தை இழந்து விட்டோம்.

‘என்கிட்ட காசு வாங்கி நடத்தற நிறுவனத்தோட வேலைக்காரன்தானே நீ’ என்கிற இறுமாப்பைதான் அண்ணாமலை வெளிப்படுத்தி இருக்கிறார்.

வேலை செய்யும் பாவத்துக்கு அங்கு நின்று, சுயமரியாதையை இழக்கக் கொடுத்தது தொழிலாளர் ஒற்றுமை, அரசியல், ஓர்மை, அறம் இன்றி கார்ப்பரெட் இயந்திரத்தால் உருவாக்கப்பட்ட இன்குபேட்டர் செய்தியாளர்கள்தாம்!

RAJASANGEETHAN