‘அஞ்சல’ – விமர்சனம்
கதாநாயகர்களையும், கதாநாயகிகளையும் மையமாகக் கொண்ட தமிழ் திரைப்படங்களுக்கு மத்தியில், ஒரு டீ கடையை மையப்படுத்தி கதை சொல்லப்பட்டுள்ள படம்தான் ‘அஞ்சல’.
பசுபதி, சுதந்திர போராட்ட காலத்தில் தனது தாத்தா தொடங்கிய 100 ஆண்டுகால பாரம்பரிய மிக்க அஞ்சல என்ற டீக்கடையை சோழவந்தானில் நடத்தி வருகிறார். அவருடைய உலகமே அந்த டீக்கடைதான். அதேபோல், பாரம்பரியமிக்க இந்த டீக்கடையை அந்த சுற்றுவட்டாரத்தில் உள்ளவர்கள் அனைவரும் தங்களுடைய சொந்தம் போலவே கருதி வருகிறார்கள்.
அதே ஊரில், சொந்தமாக டூவீலர் சர்வீஸ் சென்டர் வைப்பதற்காக வங்கியில் லோனுக்கு ஏற்பாடு செய்துவிட்டு, பணத்திற்காக காத்திருக்கிறார் விமல். இவரும், இவருடைய நண்பர்களும் பசுபதியின் டீக்கடையே கதியென்று கிடக்கிறார்கள்.
சந்தோஷமாக இவர்களது வாழ்க்கை சென்றுகொண்டிருக்கும் நிலையில், சாலையை விரிவுபடுத்துவதற்காக அஞ்சல டீக்கடையை இடிக்க நெடுஞ்சாலைத்துறை முடிவு செய்கிறது. அஞ்சல டீக்கடையை இடிக்க கிராமத்தில் இருப்பவர்கள் அனைவரும் எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள்.
இவர்கள் கோரிக்கையை நெடுஞ்சாலைத் துறையினர் ஏற்க மறுக்கின்றனர். இதனால், கோர்ட்டுக்கு சென்று கடையை இடிப்பதற்கு இடைக்கால தடை பெறுகிறார்கள். இது ஒருபக்கம் நடந்துகொண்டிருக்கும்போது, காலேஜ் படிக்கும் நந்திதாவும் விமலும் காதலிக்கத் தொடங்குகிறார்கள்.
இந்நிலையில், நந்திதா மீது மோதிவிட்டு செல்லும் ஒரு லாரியை அஞ்சல டீக்கடையில் உள்ளவர்கள் வழிமறிக்க, அந்த வேன் டீக்கடைமுன் தலைகுப்புற கவிழ்கிறது. அப்போது, அந்த லாரியில் எடுத்துவந்த போலி மதுபான பாட்டில்கள் ரோட்டில் சிதறுகின்றன..
இந்த போலி மதுபானம் அந்த ஊரில் உள்ள பெரிய தொழிலதிபரான பஞ்சு சுப்புவுக்கு சொந்தமானது என்பதை போலீஸ் அறிந்ததும் அவர் தலைமறைவாகிறார். அவருக்கு உடந்தையாக இருந்த போலீஸ் அதிகாரியும் சஸ்பெண்ட் செய்யப்படுகிறார்.
இதனால், கோபமடையும் போலீஸ் அதிகாரியும், பஞ்சு சுப்புவும் அஞ்சல டீக்கடையை நேசிக்கும் பசுபதி, விமல் உள்ளிட்டவர்களை பழிவாங்க துடிக்கின்றனர். இந்நேரத்தில் அஞ்சல டீக்கடையில் கத்தை கத்தையாக கள்ளநோட்டுகளை போலீசார் பறிமுதல் செய்கின்றனர். இதற்கு காரணம் பசுபதி, அவருடைய டீக்கடைக்கு வந்துபோகும் விமல் மற்றும் அவரது நண்பர்கள் என்று கூறி அனைவரையும் கைது செய்து ஸ்டேஷனுக்கு அழைத்து செல்கிறார்கள். டீக்கடைக்கும் சீல் வைக்கிறார்கள்.
இதன்பின்னர், இந்த பிரச்சினையிலிருந்து வெளியே வரும் அனைவருக்கும் வாழ்க்கையில் வெவ்வேறு பிரச்சினைகள் ஏற்படுகிறது. இதனால், எல்லோரும் தனித்தனியாக பிரிகிறார்கள். இந்த பிரச்சினைகளில் இருந்து மீண்டு, அனைவரும் மீண்டும் ஒன்று சேர்ந்து சந்தோஷமாக இருந்தார்களா? இல்லையா? என்பதே மீதிக்கதை.
விமல், தனது எல்லா படங்களிலும் காட்டும் பந்தாவை இதிலும் காட்டி நடித்திருக்கிறார். இன்னமும் இவர் முகத்தில் பரிதாபம், கோபம் என எதுவுமே வர மிகவும் தயங்குகிறது. நந்திதாவுக்கு படத்தில் விமலை காதலிப்பது மட்டுமே வேலை. இதனால் தனது கதாபாத்திரத்தை சிறப்பாக செய்திருக்கிறார்.
பசுபதி இருவேறு கெட்டப்புகளில் வந்தாலும், தனது அனுபவ நடிப்பால் கவர்கிறார். ஆனால், ஒருசில காட்சிகளில் எல்லை மீறி நடித்திருப்பது சற்று பொறுமையை சோதிக்கிறது. விமலின் நண்பர்களாக வருபவர்கள் ஓரளவுக்கு நடிப்பை வரவழைத்திருக்கிறார்கள். இமான் அண்ணாச்சி காமெடி என்ற பெயரில் கடுப்பேற்றியிருக்கிறார். ரித்விகா ஒருசில காட்சிகளே வந்தாலும் கவர்கிறார்.
அஞ்சல என்ற பாரம்பரியமிக்க டீக்கடையை மையப்படுத்தித்தான் இப்படம் முழுக்க நகர்கிறது. ஆனால், டீக்கடைக்கும் அதை தங்களில் ஒருவனாக நம்பி இருக்கிறவர்களுக்கும் உண்டான நெருக்கத்தை இன்னும் கொஞ்சம் ஆழமாக காட்டியிருக்கலாம்.
கிளைமாக்ஸ் காட்சி படத்தின் ஆரம்பத்தில் இருந்து டீக்கடையின் மீது உண்டாகும் ஒருவிதமான பரிதாப உணர்வை தகர்த்துவிடுகிறது. இதை கொஞ்சம் மாற்றி அமைத்திருக்கலாம். அதேநேரத்தில், சுதந்திர போராட்ட காலத்தில் வரும் காட்சிகளெல்லாம் ரசிக்க வைக்கிறது.
கோபி சுந்தர் இசையில் பாடல்கள் எதுவும் மனதில் நிற்கவில்லை. பின்னணி இசையிலும் கூடுதல் கவனம் செலுத்தியிருக்கலாம். ரவிகண்ணனின் ஒளிப்பதிவு சற்று பலம் கூட்டியிருக்கிறது.
‘அஞ்சல’ – சுவை குறைவான டீ!