அஞ்சாமை – விமர்சனம்

நடிப்பு: விதார்த், வாணி போஜன், ரகுமான், கிருத்திக் மோகன், விஜய் டிவி ராமர், தான்யா மற்றும் பலர்

இயக்கம்: எஸ்.பி.சுப்புராமன்

ஒளிப்பதிவு: கார்த்திக்

படத்தொகுப்பு: ராம் சுதர்சன்

பாடலிசை: ராகவ் பிரசாத்

பின்னணி இசை: கலா சரண்

தயாரிப்பு: ‘திருச்சித்ரம்’ டாக்டர் எம்.திருநாவுக்கரசு எம்.டி

வெளியீடு: ‘ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ்’ எஸ்.ஆர்.பிரபு

பத்திரிகை தொடர்பு: ஜான்சன்

‘மக்கள் பிரச்சினையை மையமாக வைத்து திரைப்படங்கள் வருவதில்லை; வந்தாலும் அவை மக்களின் உணர்வுகளை பிரதிபலிப்பதில்லை’ என்ற விமர்சனம் தமிழ்த் திரையுலகு மீது உண்டு.

இந்தப் பழியை, சொல்லி வைத்து அழித்திருக்கிறது ‘அஞ்சாமை’ திரைப்படம். மனித உயிர்க்கொல்லியான நீட் குறித்து, அதிகார வர்க்கத்தின் முன் ஆணித்தரமாக கேள்விகளை எடுத்து வைத்து இருக்கிறது. நீட் காரணமாக ஏற்படும் பாதிப்பை, உயிர்ப்பலியை கண்முன் நிறுத்தி கலங்க வைக்கிறது. ஆவணப்படத்தைப் போல அத்தனை தரவுகளை கொட்டுகிறது. அதே நேரம் ஒரு முழு நீள திரைப்படத்துக்கான இலக்கணத்துடன் ரசிக்க, நெகிழ, கேள்வி கேட்க வைக்கிறது.

பூ விவசாயியான சர்க்கார் (விதார்த்) தனது மனைவி சரசு (வாணி போஜன்) மற்றும் மகன் அருந்தவம் (கிருத்திக் மோகன்), மகளுடன் திண்டுக்கல் அருகே உள்ள காந்திகிராமத்தில் வாழ்ந்து வருகிறார். அவரது மகன் அருந்தவம் மருத்துவராக ஆசைப்படுகிறார். அவரது கனவுக்கு உயிர் கொடுக்க நினைக்கிறார் தந்தை சர்க்கார். அதன்படி ஒன்றிய அரசின் மருத்துவக் கல்வி நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிக்கிறார். ஆனால், அவர்களுக்கான தேர்வு மையம் ஜெய்ப்பூரில் ஒதுக்கப்படுகிறது.

இதனால் கடும் சிரமத்தையும் தாண்டி, தந்தையும், மகனும் மருத்துவ நுழைவுத் தேர்வுக்காக ஜெய்ப்பூர் செல்ல, அங்கு என்ன நடக்கிறது, அந்தச் சம்பவம் அவர்களின் வாழ்வில் என்ன மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்துகிறது? மருத்துவத்தை கனவாக கொண்டிருக்கும் மாணவனுக்கு ‘தகுதித் தேர்வு’வினால் ஏற்படும் பிரச்சினைகள் என்ன? அது எப்பபடி பெற்றோர்களை பாதிக்கிறது என்பது ‘அஞ்சாமை’ திரைப்படத்தின் மீதிக்கதை.

பொருளாதார சிக்கலை தாங்கிக் கொண்டு மகனின் கனவுக்காக போராடும் எளிய குடும்பத்தைச் சேர்ந்த தந்தை சர்க்காராக உணர்வுப்பூர்வமான நடிப்பில் அசத்துகிறார் விதார்த். அவரது மனைவி சரசாக வரும் வாணி போஜன், கணவருக்கு உறுதுணையாக இருந்து, உடைந்து போகும் இடத்தில் தேர்ந்த நடிப்பை வெளிப்படுத்துகிறர். மகனும், மாணவருமான அருந்தவம் கதாபாத்திரத்தில் வரும்  கிருத்திக் மோகன் சிறப்பான பங்களிப்பை செலுத்துகிறார்.

முதலில் போலீஸ் அதிகாரியாக இருந்து பின்னர் வழக்கறிஞராக மாறும்  ரகுமான் நடிப்பில் அழுத்தம் கூட்டுகிறார். ‘விஜய் டிவி’ ராமர், கொடுத்த வேலையை செய்திருக்கிறார்.

அரசுப் பள்ளியில் படித்த எளிய குடும்பத்தைச் சேர்ந்த மாணவன் ஒருவன் தனது மருத்துவ கனவை அடைய, ‘தகுதித் தேர்வு’க்கு எத்தனை அழுத்தங்களுடன் தயாராக வேண்டியிருக்கிறது, ‘கோச்சிங் சென்டர்’ அதற்கான பணம், பெற்றோர்களுக்கான பொருளாதார நெருக்கடி, கடைசி நேர பதற்றங்கள், நீட் தேர்வுக்கான கட்டுப்பாடுகள், வட மாநிலங்களில் ஒதுக்கப்படும் தேர்வு மையங்கள் என பல்வேறு பிரச்சினைகளை பேசியிருக்கிறார் இயக்குநர் சுப்புராமன். ஒவ்வொரு காட்சியையும் அதி அற்புதமாக உருவாக்கி நெஞ்சில் பதிய வைக்கிறார் இயக்குநர்.

படத்தில் வரும் சில வசனங்களை குறிப்பிட்டாலே போதும்.. படத்தின் தரம் விளங்கும்.

“சிலம்பம் கத்துகிட்டு களத்துக்கு வந்தவன்கிட்ட, கத்தி சண்டை போடச்சொன்னா எப்படி சார்?”

“தகுதித் தேர்வுதான் முடிவென்றால், எதற்கு பள்ளிப் படிப்பு?”

“மகனே.. நல்லாத்தான் படிக்கிறே.. இருந்தாலும் இந்த கம்ப்யூட்டர் படிக்கக் கூடாதா.. டாக்டருக்குத்தான் படிக்கணுமா?”

”ரெட் கலர் சட்டை போட்டா, எக்ஸாம் எழுத முடியாது!”

“இது ஆண்டவன் சதியா.. ஆண்ட, அவன் சதியா”

“நான் நல்லா படிச்சதுதான் சார் தப்பு!”

“கஷ்டப்பட்டுத்தான் படிக்கணுமா, இஷ்டப்பட்டு படிக்கிற மாதிரி மாத்த முடியாதா”

”போட்டோவை ஸ்கேன் பண்ணனுமா.. ஆஸ்பத்திரி போவணுமா?”

“முக்கியமான செய்தின்னா, பத்திரிகையில சின்னதாத்தான் போடுவாங்க!”

“ரயில்ல டிக்கெட் எடுக்காம போனா அபராதம் போடறீங்க.. தொன்னூறு பேர் போக வேண்டிய கோச்ல நானூறு பேருக்கு டிக்கெட் கொடுக்கிறீங்களே.. அதுக்கு அபராதம் என்ன”

“மற்ற எல்லா மாநில மாணவர்களும் அவங்கவங்க மாநிலத்திலேயே எக்ஸாம் எழுதறாங்க.. தமிழ்நாட்டு மாணவர்களுக்கு மட்டும் ஏன் ஜெய்ப்பூர்ல எக்ஸாம்”

“ஓட்டுச்சாவடி மட்டும் பக்கத்துல வக்கறீங்களே.. அடுத்த முறை டில்லியில வைங்க.. நாங்க போயி ஓட்டுப் போடுறோம்”

அதே போல காட்சி அமைப்புகளும் அருமை.

நாயகனுக்கு சர்க்கார் என்று பெயர் வைத்து, கேள்வி கேட்க வைத்தது.

“சர்க்கார் மரணம்” என்கிற போஸ்டர்.

’நீட் தேர்வு’ என்கிற வார்த்தைக்குப் பதிலாக, ’புதிய தகுதி தேர்வு’ என்றே படம் முழுக்க சொல்கிறார்கள். (சென்சார் பிரச்சனையாக இருக்கலாம்.) அதே நேரம், ஒரு காட்சியில், “பாரத் நீட் தேர்வு பயிற்சி மையம்” என்கிற போர்டு வருகிறது.

இன்னொரு காட்சியில் நீட் தேர்வால் தற்கொலை செய்துகொண்ட அனிதா போஸ்டர் என தில்லாக காட்சிகளை வைத்து உள்ளனர்.

தொன்னூறு பேர் பயணிக்க வேண்டிய ரயில் பெட்டியில் நூற்றுக்கணக்கானவர்கள் ஏறி (ஏற்றி) திண்டாட… ரயிலின் பக்கவாட்டில் தேசிய கொடி…

நீட் தேர்வு நடக்கும் மையத்தில் “ஸ்வெச் பாரத்” குப்பைத் தொட்டி என குறியீடுகளில் அசத்தி இருக்கிறார்கள்..

நீட் மையத்தில் மாணவிகளின் உள்ளாடைகளை பரிசோதிப்பது,

“ஜெய்ப்பூர்னு நாங்க போடலை… கம்ப்யூட்டர் தானா போட்டுருச்சு” என திமிராக அதிகாரி பதில் சொல்ல.. “அப்படினா கம்ப்யூட்டருக்கு சம்பளம் கொடுத்திரலாமா” என வழக்கறிஞர் அதிரடியாக கேட்பது..

நீட் தேர்வில் தோல்வி அடைந்தால் மகன் தற்கொலை செய்து கொள்வானோ என பயந்து சீலிங் பேனை கழற்றி, டேபிள் பேன் வைப்பது..

அறிமுகம் இல்லாத ஜெய்ப்பூர் நகரில் அப்பாவை காணவில்லை.. அவரது செருப்பு மட்டும் சாலையில் கிடக்க.. மகன் ’அப்பா…’ என கதறுவது.. அவன் சத்தம் கேட்காமல் அதை இசை நிரப்புவது..

“போராட்டம் போராட்டம் என்றால் நாடு நாசமாயிடும்” என்று வில்லன் (வழக்கறிஞர்) பேசுவது..

“கிரிக்கெட்டுக்கு தனி ட்ரெய்ன் விடறீங்க.. நீட் தேர்வுக்கு விட முடியாதா” என்ற கேள்வி…

படத்தின் கதைக்கருவும், நோக்கமும் அப்பழுக்கு இல்லாதது; சமூக நோக்கம் கொண்டது; பாராட்டத்தக்கது.

கார்த்திக்கின் ஒளிப்பதிவு, ராகவ் பிரசாத்தின் இசை, படத்துக்கு பலம்.

சமூக அக்கறையுடன் படத்தைத் தயாரித்து இருக்கும் தயாரிப்பாளர் ‘திருச்சித்ரம்’ டாக்டர் எம்.திருநாவுக்கரசு எம்.டி, படத்தை வெளியிட்ட ட்ரீம் வாரியர்ஸ் பிக்சர்ஸ் எஸ்.ஆர்.பிரபு ஆகியோருக்கும் நன்றிகள். ’அஞ்சாமை’ – அற்புதம்! அனைவரும் தவறவிடாமல் பார்க்க வேண்டும்!