அனிருத் பாடல்கள், இசை நிகழ்ச்சிகளை சோனி நிறுவனம் பிரபலப்படுத்தும்!
இசையமைப்பாளர் அனிருத் தனிப்பட்ட முறையில் உருவாக்கும் பாடல்களையும், அவரது இசை நிகழ்ச்சிகளையும் சோனி நிறுவனம் பிரபலப்படுத்தும். இதற்கான ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது.
‘3’ படத்தின் மூலமாக இசையமைப்பாளராக அறிமுகமானவர் அனிருத். பல்வேறு வெற்றி படங்களுக்கு இசையமைத்திருக்கும் அனிருத் அவ்வப் போது தனிப்பட்ட முறையில் ஒரு பாடலையும் செய்து வெளிப்பட்டு வருகிறார்.
‘சான்ஸே இல்ல’, ‘எனக்கென்னா யாரும் இல்லயே’ மற்றும் ‘அவளுக்கென’ உள்ளிட்ட அனிருத் தனிப்பட்ட முறையில் உருவாக்கிய பாடல்கள் அனைத்துமே இளைஞர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு அடைந்திருக்கிறது.
இந்நிலையில், அனிருத் உருவாக்கும் தனிப்பட்ட பாடல்கள் அனைத்தையும் சோனி நிறுவனத்திற்கு அளிப்பது என்று ஒப்பந்தம் போடப்பட்டு இருக்கிறது. இதற்காக அனிருத்திற்கு நல்ல தொகையை அளித்திருக்கிறார்கள்.
இனிமேல் அனிருத் தனிப்பட்ட முறையில் உருவாக்கும் பாடல்களையும், அனிருத்தின் இசை நிகழ்ச்சிகளையும் சோனி நிறுவனம் பிரபலப்படுத்தும் என்று அறிவித்திருக்கிறார்கள்.
இந்த ஒப்பந்தம் குறித்து அனிருத் “இவை மிகச்சிறந்தவை, எனவே நான் லேபலுக்கு கையெழுத்திடுவதென்றால் இவர்களுக்கு மட்டுமே கையெழுத்திடுவேன் என்பது எனக்கு எப்பவும் தெரிந்ததே. இது ஆரம்பம்தான். இதன் மூலம் நாங்கள் இணைந்து ஒவ்வொரு புதிய ரிலீஸிலும் ரசிகர்களுக்கு புதிதான இசை அனுபவத்தை அளிப்போம் என்று நாங்கள் உறுதியாகக் கூறுகிறோம். புதிய இசையை உருவாக்குவது குறித்து நான் மட்டற்ற உற்சாகத்தில் இருக்கிறேன், ரசிகர்களுக்காக இதனை வெளிக்கொண்டு வருவதற்காக காத்திருக்கிறேன்” என்று தெரிவித்திருக்கிறார்.
சிவகார்த்திகேயன் நடிக்கும் ‘ரெமோ’, ‘ரம்’, ‘அஜித் 57’ மற்றும் மோகன் ராஜா இயக்கவிருக்கும் படம் ஆகிய படங்களுக்கு இசையமைப்பாளராக பணிபுரிந்து வருகிறார் அனிருத்.