‘பிப்.14 பசு அணைப்பு தினம்’என்பது வாபஸ்: எதிர்ப்பு காரணமாக பின்வாங்கியது விலங்குகள் நல வாரியம்
வரும் (பிப்ரவரி) 14ஆம் தேதி அன்று பசுக்களை கட்டிப் பிடித்து கொண்டாடச் சொன்ன வேண்டுகோளை திரும்பப் பெற்றுள்ளது விலங்குகள் நல வாரியம். இது தொடர்பாக எழுத்துபூர்வமான அறிவிப்பு ஒன்றை அந்த வாரியம் வெளியிட்டுள்ளது.
பசுவை ‘கோமாதா’ என கொண்டாடும் சங் பரிவாரங்களின் நடைமுறையை கருத்தில் கொண்டு, கடந்த 6ஆம் தேதி விலங்குகள் நல வாரியம் வெளியிட்ட அறிவிப்பில் பிப்ரவரி 14 அன்று பசுக்களை கட்டிபிடித்து கொண்டாடுமாறு வேண்டுகோள் விடுத்திருந்தது. ஒவ்வொரு பசு நேசரும் இதைச் செய்ய வேண்டும் என வாரியம் தெரிவித்தது. பசு இந்திய கலாச்சாரம் மற்றும் கிராமப்புற பொருளாதாரத்தின் முதுகெலும்பு என்றும் அப்போது அதில் குறிப்பிடப்பட்டு இருந்தது. இது பாசிட்டிவ் எனர்ஜியை கொண்டு வரும் என அதில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.
இந்த வேண்டுகோளை அடுத்து, இந்திய அளவில் பசுக்களை கட்டிப் பிடிக்கும் இந்த விவகாரம் கவனம் பெற்றது. சிலர் மீம்ஸ் போட்டு இதை விமர்சித்திருந்தனர். அரசியல் கட்சிகளும் சமூக ஆர்வலர்களும் இந்த அறிவிப்பை கடுமையாக விமர்சித்தனர். காதலர் தினத்தை சிதைக்கும் முன்னெடுப்பு என்று அவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இந்தச் சூழலில், விலங்குகள் நல வாரியம் தற்போது தமது அறிவிப்பை திரும்பப் பெற்றுள்ளது. மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத் துறை அமைச்சகம் மற்றும் அதிகாரிகளின் வழிகாட்டுதலின் பேரில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தற்போது வெளியாகி உள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி 14ஆம் தேதி அன்று பசு அணைப்பு தின கொண்டாட்டம் திரும்பப் பெறுவதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.