அவர்கள் எல்லாம் சிம்பன்சிகள் தானே தவிர, மனிதர்கள் அல்ல!

Paridhabangal-ல் Animal படத்தை நக்கல் அடித்து எடுத்திருக்கும் காணொளியை பார்த்துக் கொண்டிருக்கிறேன். நல்லவேளையாக படத்தை பார்க்கவில்லை. பலர் ஏற்கனவே விமர்சித்திருந்தார்கள்.

சமீபத்தில் வந்த தோழன் ஒருவனுடன் அரசியல் உள்ளிட்ட பல விஷயங்களை பேசும்போது அவ்வப்போது ஆசுவாசம் கொள்ள அப்படத்தின் காட்சிகளை போட்டு பார்த்து சிரித்துக் கொண்டிருந்தோம். இன்னொரு இயக்கத் தோழர் ஒருவர், அப்பட இயக்குநர் கொடுக்கும் ஊடகச் சந்திப்புகளில் அவர் பேசுவதும் திமிராக இருப்பதாக சொன்னார். அந்த இயக்குநர் இந்துத்துவ அரசியல் ஆதரவு கொண்டவர் என்பதில் ஆச்சரியம் இருக்க முடியாது.

இப்படம் வைக்கும் முக்கியமான கான்செப்ட் Alpha Male!

Alpha Male என்பது என்ன?

மனித இனத்தின் ஒன்றுவிட்ட சகோதர குரங்கின வகைகளில் சிம்பன்சி முக்கியமான வகை. சிம்பன்சி கூட்டத்தில் தலைமை வகிப்பது ஒரு முக்கியமான விஷயம். ஏனெனில் தலைவர் சிம்பன்சிக்கு ஏகப்பட்ட அதிகாரம் உண்டு. அதற்கென தனி சலுகைகளும் உண்டு. அதிகாரத்தில் இருப்பதாலேயே பெண் சிம்பன்சிகள் பலவும் அந்த தலைவன் சிம்பன்சியை ஈர்க்கும் முயற்சிகளை மேற்கொள்ளும். தலைவன் சிம்பன்சி, குழுவின் எல்லா பெண் சிம்பன்சிகளுடனும் உறவு கொள்ளும். அதை அந்த பெண் சிம்பன்சிகளும் அனுமதிக்கும்.

அந்த தலைவன் சிம்பன்சிதான், Alpha Male எனப்படுகிறது. அதாவது குழுவில் இருக்கும் சிம்பன்சிகளிடம் இருந்து தனிச்சிறப்பு வாய்ந்த சிம்பன்சி!

அப்படியென்ன தனிச்சிறப்பு அந்த Alpha Male சிம்பன்சிக்கு?

ஏற்கனவே இருந்த தலைமையை பிற இளைய சிம்பன்சிகளுடன் அரசியல் செய்து வீழ்த்தியிருக்கும். ஆம், சிம்பன்சிகள் அரசியல் செய்யும். வீழ்த்திய பின், எதிராக இருக்கும் பிற ஆண் சிம்பன்சிகளை ஓரங்கட்டும். மீறி எதேனும் எதிர்த்தால் சண்டை கட்டி காலி செய்யும். பிறகு ஆதரவாக இருந்த இளைய ஆண் சிம்பன்சிகளையும் தனக்கு கீழ்ப்படிந்து வைத்திருக்க செய்யும். குழுவுக்கான உணவு, வசிப்பிடம் ஆகியவற்றின் கட்டுப்பாட்டை தன் வசம் வைத்துக் கொள்ளும்.

ஆகவே அடிப்படையில் ஆதிக்கமும் அரசியலும் வன்முறையும் கொண்ட ஆண் சிம்பன்சிதான் Alpha Male!

இன்றும் இது போல் பல ‘கால் வாருதல்கள்’, அரசியல் செய்யுதல், அணி திரட்டுதல், கூடவே இருந்து கழுத்தறுத்தல் போன்றவை அலுவலகம் தொடங்கி குடும்பம், அரசியல் வரை நடப்பது உண்டு.

ஆனால் உண்மை என்னவென்றால் நாம் சிம்பன்சிகள் அல்ல.

சிம்பன்சியைப் போலவே மனிதனுக்கு ஒன்றுவிட்ட சகோதர குரங்கினமான – ஆனால், சிம்பன்சியின் சகோதர குரங்கினமான – போனபோவிடம் வன்முறையே கிடையாது. காதல், காதல், காதல்தான். அன்பு, அன்பு, அன்புதான். இரண்டிலும் இருந்து வேறுபட்டு பரிணமித்த நமக்கு குழு உறுப்பினர்களின் எண்ணிக்கை சிம்பன்சி, போனபோவை காட்டிலும் அதிகம்.

ஒரு குடியிருப்பாக, தெருவாக, ஊராக, சமூகமாக வாழ வேண்டிய கட்டாயம்தான் நமக்கான பரிணாமம். எனவே பரிணாமரீதியாகவே மனித சமூகம் சிம்பன்சிகளை போன்ற Alpha Male-களை உருவாக்குவதில்லை. ஏனெனில் அந்த அளவு வன்முறை, அரசியல், சுயநலம் ஆகியவை பெருஞ்சமூக வாழ்க்கைக்கு எதிரானது. மனிதர்களுடன் ஒத்து வாழ்வதே நம் பரிணாமம். இதில் எவரையேனும் அழித்து மேலே வர திட்டம் தீட்டி கழுத்தறுத்து பதவி பற்றி எப்போதும் மார் தட்டியபடி அகங்காரத்துடன் ‘நான்தான், நான்தான்’ என புதுப்பேட்டை தனுஷ் போல திரிவது அழிவுக்கு மட்டுமே இட்டுச் செல்லும்.

Alpha Male-க்கான உடற்கூறுகளாக சொல்லப்படும் அகல மார்பு, உயரம், உடல் வலு போன்றவை மனித சமூகத்தின் எல்லா ஆண்களிடமும் இல்லாமல் இருப்பதற்கு காரணமும் இதுதான். இத்தகைய கூறுகளுடன் கூடிய ஆண்தான் இணையாக வேண்டுமென விரும்பும் பெண்களின் எண்ணிக்கை குறைவாக இருப்பதற்கான காரணங்களில் இதுவும் ஒரு காரணமே!

மேலும் முதலாளித்துவமும் இந்துத்துவமும் இத்தகைய Alpha Male தன்மையை முன்னிறுத்துவதும் யதேச்சையானது அல்ல. முன்னது சுயநலமும் சுரண்டலும், பின்னது பிற்போக்கு. இரண்டுமே மனிதப் பரிணாமத்துக்கு எதிரானவையும் கூட!

ஒருவேளை சிம்பன்சியின் Alpha Male தன்மை, சிந்தனைப்படிவாக இருந்தாலும் அதை ஒழிப்பதுதான் பரிணாம வளர்ச்சியே தவிர, அதை தொடர்ந்து கொண்டு வீம்பு பேசுவது அல்ல!

எல்லாருக்கும் வாய்ப்பு இருப்பதற்கான அரசியலும் சமூகமும்தான் நம் பரிணாமத்துக்கான natural selection!

இதைப் புரிந்து கொள்ளாமல் இன்னும் தன்னை Animal படம் போல Alpha Male என சொல்லிக் கொள்பவர்களும், எதற்கெடுத்தாலும் எகிறி கொண்டு அடிக்க செல்பவர்களும், சதாசர்வ காலமும் அரசியல் மட்டுமே செய்து கொண்டிருப்பவர்களும் ஆணென்றால் பெரிய மயிர் என்று சுற்றி திரிபவர்களும் மனிதப் பரிணாமத்துக்கே எதிரானவர்கள் என்றறிக.

அவர்களெல்லாம் சிம்பன்சிகள்தானே தவிர, மனிதர்களல்ல!

-RAJASANGEETHAN