அங்காரகன் – விமர்சனம்

நடிப்பு: ஶ்ரீபதி, சத்யராஜ், நியா, அங்காடி தெரு மகேஷ், அப்புக்குட்டி, கே.சி.பிரபாத், ரெய்னா காரத் மற்றும் பலர்

இயக்கம் & ஒளிப்பதிவு: மோகன் டச்சு

படத்தொகுப்பு: வளர் பாண்டியன்

இசை: கு.கார்த்திக்

தயாரிப்பு: ’ஜூலியன் அண்ட் ஜெரோம் இண்டர்நேஷனல்’ ஸ்ரீபதி

பத்திரிகை தொடர்பு: ஏ.ஜான்

அங்காரகன் என்ற சொல் ஜோதிடத்தில் செவ்வாய் கிரகத்தைக் குறிக்கும். ஆனால் இந்தப்படத்தில் அது செவ்வாய் கிரகத்தை அல்ல; ஒரு பேயைக் குறிக்கிறது.

ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் குறிஞ்சிமலைக் காட்டில் வசித்த தொல்குடியினர், ஆட்சியாளர்களுக்கு அடிபணிய மறுத்து துணிச்சலோடு எதிர்த்து நிற்கிறார்கள். அந்த காட்டைக் கைப்பற்றிய ஆங்கிலேய ராணி ரெனிட்டா மார்ட்டின் (ரெய்னா காரத்), அங்கு வாழ்ந்த தொல்குடியினரை அழித்தொழிக்கிறார். அங்கு ஒரு ரிசார்ட் கட்டப்படுகிறது. இந்நிலையில், ராணி ரெனிட்டா மார்ட்டின் உயிரோடு எரித்துக் கொல்லப்படுகிறார்.

தற்காலத்தில், அந்த ரிசார்ட்டுக்கு வாடிக்கையாளர்கள் அவ்வளவாக வருவதில்லை என்பதால் அது மூடப்படும் நிலையில் இருக்கிறது. சிவா (அங்காடி தெரு மகேஷ்) அந்த ரிசார்ட்டின் புதிய மேலாளராக பொறுப்பேற்று அதை நிர்வகிக்கிறார். அங்குள்ள ராணி அறை மட்டும் திறக்கப்படாமல் எப்போதும் பூட்டியே கிடக்கிறது.

கதையின் நாயகன் ரோகித் (ஸ்ரீபதி), அவரது மனைவியான நாயகி தியா (நியா), மற்றும் சில வாடிக்கையாளர்கள் அந்த ரிசார்ட்டுக்கு வந்து தங்குகிறார்கள். மேலாளர் சிவா, ஒரு கொண்டாட்டத்துக்காக, பூட்டிக்கிடக்கும் ராணி அறையைத் திறந்து, சுத்தப்படுத்தி, தடபுடலான விருந்து ஒன்றுக்கு ஏற்பாடு செய்கிறார். விருந்து முடிந்தபின் அச்சமூட்டும் அமானுஷ்யமான சம்பவங்கள் நடக்கின்றன. இரண்டு பெண்கள் மாயமாகிறார்கள்.

அது பற்றி விசாரிக்க போலீஸ் அதிகாரி அதிவீரபாண்டியன் (சத்யராஜ்) அங்கு வருகிறார். அவர் நடத்தும் விசாரணையில் ரிசார்ட்டின் மர்ம முடிச்சுகள் அவிழ்கிறதா? மாயமான பெண்களின் கதி என்ன? என்ற கேள்விகளுக்கான விடையை திகில் மற்றும் எதிர்பாராத திருப்பங்களுடன் சொல்லுகிறது ‘அங்காரகன்’ திரைப்படத்தின் மீதிக்கதை.

 நாயகன் ரோகித்தாக ஸ்ரீபதி நடித்திருக்கிறார். அவர் புதுமுகம் என்றாலும் ஆட்டம், காமெடி, ஆக்‌ஷன் என அனைத்திலும் ஓ.கே என சொல்லுமளவுக்கு நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். மனைவியை சந்தேகப்படும் அவர் எந்த நேரமும் மதுவும்  கையுமாக இருக்கிறார். என்றாலும், கிளைமாக்ஸில் அங்காரகன் பேயாக மிரட்டியுள்ளார்.

நாயகி தியாவாக நடித்திருக்கிறார் நியா. குடிகாரக் கணவனை விட்டுக் கொடுக்காத குடும்பக் குத்துவிளக்கு கதாபாத்திரத்தில் நேர்த்தியாக நடித்திருக்கிறார். என்றாலும், அவ்வப்போது கிளாமர் காட்டி இளசுகளை சூடேற்றியிருக்கிறார்.

போலீஸ் அதிகாரி அதிவீரபாண்டியனாக சத்யராஜ் நடித்திருக்கிறார். தனது கேரியரின் ஆரம்பத்தில் வில்லனாகவும், பின்னர் ஹீரோவாகவும், அதன்பின்னர் சமீபகாலமாக குணச்சித்திர வேடங்களிலும் நடித்துள்ள சத்யராஜ், இந்த படத்தின் மூலம் மொட்டைத் தலையராக மீண்டும் வில்லன் அவதாரம் எடுத்து மிரட்டியிருக்கிறார். தொடக்கத்தில் போலீஸ் அதிகாரியாக வந்தாலும், கிளைமாக்ஸில் வில்லனாக மாறி அதிர்ச்சி அளிக்கிறார்.

ரிசார்ட்டின் மேலாளர் சிவாவாக வரும் அங்காடி தெரு மகேஷ், செக்யூரிட்டி பாவாடைசாமியாக வரும் அப்புக்குட்டி, ரிசார்ட்டின் இன்சார்ஜ் மணிகண்டனாக வரும் கே.சி.பிரபாத், ஆங்கிலேய ராணி ரெனிட்டா மார்ட்டினாக வரும் ரெய்னா காரத் உள்ளிட்டோர் தத்தமது கதாபாத்திரத்துக்குத் தேவையான நடிப்பை வழங்கியிருக்கிறார்கள்.

நாயகன் ஸ்ரீபதி திரைக்கதை எழுதியிருக்கிறார். இயக்கத்தையும், ஒளிப்பதிவையும் மோகன் டச்சு செய்திருக்கிறார். படத்தொகுப்பை வளர் பாண்டியன் கவனித்திருக்கிறார். திரைக்கதை, இயக்கம், படத்தொகுப்பு என்ற மூன்று பணிகளையும் இன்னும் கொஞ்சம் மெனக்கெட்டு சிரத்தையுடன் செய்திருந்தால் குழப்பம் இல்லாமல் படத்தை நன்றாக ரசித்திருக்கலாம்.

கு.கார்த்திக்கின் பாடலிசையும், பின்னணி இசையும், கதைக்கும் காட்சிகளுக்கும் ஏற்றபடி பயணித்திருக்கின்றன.

‘அங்காரகன்’ – ஒருமுறை பார்க்கலாம்!