அந்தகன் – விமர்சனம்

நடிப்பு: பிரஷாந்த், சிம்ரன், கார்த்திக், சமுத்திரக்கனி, பிரியா ஆனந்த், ஊர்வசி, கே.எஸ்.ரவிக்குமார், யோகி பாபு, வனிதா விஜயகுமார், மனோபாலா, பெசண்ட் ரவி, லீலா சாம்சன், பூவையார் மற்றும் பலர்

எழுத்து & இயக்கம்: தியாகராஜன்

ஒளிப்பதிவு: ரவி யாதவ்

படத்தொகுப்பு: சதீஷ் சூர்யா

இசை: சந்தோஷ் நாராயணன்

வசனம்: பட்டுக்கோட்டை பிரபாகர்

தயாரிப்பு: ‘சாந்தி மூவிஸ்’ சாந்தி தியாகராஜன் & ப்ரீத்தி தியாகராஜன்

பத்திரிகை தொடர்பு: நிகில் முருகன்

தனது அட்டகாசமான நடிப்பு மற்றும் அபார நடனத் திறமையால் தமிழ்நாட்டில் மட்டுமல்ல, மலேசியா, சிங்கப்பூர் உள்ளிட்ட வெளிநாடுகளிலும் பெருவாரியான ரசிகர்களைப் பெற்று, உண்மையிலேயே ‘டாப் ஸ்டார்’ ஆகத் திகழ்ந்த நடிகர் பிரஷாந்த், ஓர் இடைவெளிக்குப் பிறகு மீண்டும் நடித்திருக்கும் திரைப்படம்; அவருடைய அப்பாவும், பிரபல நடிகர் மற்றும் தயாரிப்பாளருமான தியாகராஜன் திரைக்கதை எழுதி இயக்கியிருக்கும் திரைப்படம்; முக்கியமான கதாபாத்திரங்களில் மட்டும் அல்ல, சின்னச் சின்ன கதாபாத்திரங்களிலும் பெரிய பெரிய நட்சத்திர நடிகர்கள் நடித்திருக்கும் திரைப்படம்; இந்தியில் ஆயுஷ்மான் குரானா நடிப்பில், ஶ்ரீராம் ராகவன் எழுத்து மற்றும் இயக்கத்தில் உருவாகி மிகப் பெரிய வெற்றியைப் பெற்று வசூலை அமோகமாக வாரிக் குவித்த ‘அந்தாதுன்’ திரைப்படத்தின் ரீமேக்… என்பன போன்ற சிறப்புகளால் திரைத்துறையினர், விமர்சகர்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள திரைப்படம் ‘அந்தகன்’. அந்த எதிர்பார்ப்புகளை தற்போது திரைக்கு வந்திருக்கும் ‘அந்தகன்’ பூர்த்தி செய்கிறதா? பார்ப்போம்…

’அந்தகன்’ என்ற சொல்லுக்கு ‘பார்வைத் திறன் இல்லாதவர்’ என்பது பொருள். இப்படக்கதை புதுச்சேரியில் நடப்பதாக கட்டமைக்கப்பட்டுள்ளது.

பியானோ இசைக்கலைஞரான நாயகன் கிருஷ்ணா (பிரசாந்த்), பார்வைத் திறன் இல்லாத மாற்றுத் திறனாளி. மன்னிக்கவும்… பார்வைத் திறன் இல்லாத மாற்றுத் திறனாளியாக பொய்யாகத் தன்னை வெளியுலகுக்குக் காட்டிக் கொள்பவர். அப்படி காட்டிக்கொண்டால் தான் நாம் சுமாராக பியானோ வாசித்தாலும், பிரமாதமாக வாசிப்பதாக மற்றவர்கள் கருணை உள்ளத்துடன் கருதி கொஞ்சம் கூடுதலாகவே பணம் கொடுப்பார்கள் என்ற எண்ணம் கொண்டவர். லண்டனில் நடைபெற இருக்கும் சர்வதேச இசைப் போட்டியில் கலந்துகொண்டு, பியானோ இசைத்து, வெற்றி வாகை சூட வேண்டும் என்பது அவரது லட்சியம். இதற்காக பியானோ வகுப்பு எடுத்து, அதில் கிடைக்கும் பணத்தை சிறுகச் சிறுக சேர்த்து வருகிறார்.

ஒரு நாள் அவர் சாலையைக் கடக்கும்போது, நாயகி ஜூலியின் (பிரியா ஆனந்த்) டூ வீலரில் மோதி கீழே விழுந்துவிடுகிறார். அப்போது இருவருக்கும் இடையே ஏற்படும் அறிமுகம், நட்பாக அரும்பி, காதலாக மலருகிறது. ஜுலியின் அப்பா, மேல்தட்டு மக்களுக்காக ஆடம்பர மதுபான பார் நடத்துகிறார். அந்த பாரில் ஜுலியின் தயவால், பியானோ வாசிக்கும் வேலை கிடைக்கிறது கிருஷ்ணாவுக்கு.

அந்த மதுபான பாரின் ரெகுலர் வாடிக்கையாளர்களில் ஒருவர் பிரபல தமிழ் திரைப்பட நடிகர் கார்த்திக். (ஆம்… ‘அலைகள் ஓய்வதில்லை’ படத்தில் அறிமுகமான கார்த்திக் இதில் நடிகர் கார்த்திக்காகவே வருகிறார்). கிருஷ்ணாவின் பியானோ இசையைக் கேட்டு மெய்மறக்கும் கார்த்திக், அவரை பாராட்டிவிட்டு, “நான் நடித்த படங்களில் இடம் பெற்றுள்ள பாடல்கள் என் மனைவிக்கு மிகவும் பிடிக்கும். நாளை எங்களது திருமண நாள். என் மனைவிக்கு ஒரு சர்ப்ரைஸ் கொடுக்க விரும்புகிறேன். நாளை நீ என் வீட்டுக்கு வந்து, என் படப் பாடல்களை என் மனைவிக்கு பியானோவில் இசைத்துக் காட்ட வேண்டும்” என்று கேட்டுக்கொள்வதோடு, அட்வான்ஸாக கிருஷ்ணாவின் பாக்கெட்டில் ஒரு தொகையையும் வைத்துவிட்டுப் போகிறார்.

கார்த்திக் கேட்டுக்கொண்டபடி அவரது ஃபிளாட்டுக்குப் போகிறார் கிருஷ்ணா. காலிங் பெல்லை அழுத்த, கார்த்திக்கின் மனைவி சிமி (சிம்ரன்) வந்து கதவைத் திறக்கிறார். கார்த்திக் பற்றி கிருஷ்ணா விசாரிக்க, “அவர் வீட்டில் இல்லை. பெங்களூருக்குப் போயிருக்கிறார். கிளம்புங்க” என்கிறார் சிமி. குழம்பித் தயங்கும் கிருஷ்ணா, “இன்று உங்கள் திருமண நாள். அதற்காக ஸ்பெஷலாக உங்களுக்கு பியானோ இசைத்துக் காட்ட என்னை வரச் சொல்லியிருந்தார் கார்த்திக்” என்று சொல்ல, இவர்களின் விவாதத்தை எதிர் ஃபிளாட்டில் வசிக்கும் பெண்மணி சந்தேகத்துடன் கவனிக்க, அதைப் பார்த்து தடுமாறும் சிமி, “சரி, உள்ளே வா” என்று கிருஷ்ணாவை வீட்டிற்குள் வரச் சொல்லி, கதவைச் சாத்துகிறார்.

கிருஷ்ணா உண்மையிலேயே பார்வைத் திறன் இல்லாதவர் தான் என நம்பும் சிமி, அவரை கையைப் பிடித்து அழைத்துப்போய், பியானோ முன் உட்கார வைக்கிறார். கார்த்திக் படப்பாடலை பியானோவில் வாசிக்கத் தொடங்கும் கிருஷ்ணா, தற்செயலாக தன் கருப்புக்கண்ணாடி வழியே வீட்டின் உட்புறம் பார்த்து திடுக்கிடுகிறார். அங்கே கார்த்திக் படுகொலை செய்யப்பட்டு, பிணமாக சுவரில் சாத்தி வைக்கப்பட்டிருக்கிறார். பதட்டத்தை வெளியே காட்டிக்கொள்ளாமல், எதுவும் தெரியாதவர் மாதிரி நிதானமாக நடந்துகொள்ளும் கிருஷ்ணா, “யூரின் பாஸ் பண்ணனும்” என்று சொல்ல, அவரை கையைப் பிடித்து அழைத்துக்கொண்டு போய் பாத்ரூம் முன் விடுகிறார் சிமி. பாத்ரூம் கதவை கிருஷ்ணா திறக்க, உள்ளே கைத்துப்பாக்கியை ஏந்தியபடி ஒரு நபர் (சமுத்திரக்கனி) நின்று கொண்டிருக்கிறார். அவரிடம் சிமி, பார்வைத் திறன் இல்லாத மாற்றுத் திறனாளி இவர் என்று சைகையில் சொல்ல, இது எதையும் பார்க்காதவர் போல கிருஷ்ணா சிறுநீர் கழித்துவிட்டு வெளியே வருகிறார். பின்னர் சிமியிடம் விடை பெற்று அந்த வீட்டிலிருந்து புறப்பட்டுப் போகிறார்.

ஒரு கொலை நிகழ்ந்திருப்பது தெரிந்தும், அது குறித்து போலீசில் புகார் கொடுக்காமல் இருப்பது நல்லது அல்ல என்று கருதும் கிருஷ்ணா, போலீஸ் நிலையத்துக்குப் போகிறார். அங்கிருக்கும் காவலரிடம் “ஒரு கொலை நடந்திருக்கிறது. அதை கண்ணால் பார்த்த சாட்சி நான். புகார் கொடுக்க வேண்டும்” என்று சொல்ல, “பார்வைத் திறன் இல்லாத நீ எப்படி கொலையை கண்ணால் பார்த்திருக்க முடியும்? சரி… சரி… இதோ… ஐயாவே வந்துவிட்டார்… அவரிடமே சொல்லு” என்றவாறு காவலர் எழுந்து நின்று சல்யூட் அடிக்க, ”வந்துகொண்டிருக்கும் ஐயா” யார் என்று பார்த்தால், கார்த்திக் வீட்டு பாத்ரூமுக்குள் ஒருவர் (சமுத்திரக்கனி) கைத்துப்பாக்கியுடன் ஒளிந்திருந்தாரே, அவர் தான் இப்போது போலீஸ் இன்ஸ்பெக்டராக காக்கி உடையில் விறைப்பாக வருகிறார். அவரை பார்த்த மாத்திரத்தில் கிருஷ்ணாவுக்கு வெலவெலத்துவிடுகிறது…

அதன்பின் அடுத்தடுத்து பரபரப்பாக, விறுவிறுப்பாக, நிமிடத்துக்கு நிமிடம் எதிர்பாராத திருப்பங்களுடன் என்னவெல்லாம் நடக்கிறது என்பதை பார்வையாளர்களை சீட்டின் நுனியில் அமர்த்தி, கட்டிப்போட்டு சொல்லுகிறது ‘அந்தகன்’ திரைப்படத்தின் மீதிக்கதை.

நாயகன் கிருஷ்ணா கதாபாத்திரத்தில் பிரஷாந்த் நடித்திருக்கிறார். ஓர் இடைவெளிக்குப் பின் திரையில் தோன்றினாலும் 1990களில், 2000களில் பார்த்த அதே பிரஷாந்த் போல அதே அழகுடன், அதே இளமையுடன், அதே வசீகரத்துடன் திரையில் ஜொலிக்கிறார். நிறைய உழைப்பைப் போட்டு, பார்வைத் திறன் இல்லாதவருக்கான உடல்மொழியை அச்சு அசலாய் அப்படியே தத்ரூபமாக கொண்டு வந்திருக்கிறார். காதலித்தல், பியானோ இசைத்தல், அதிரடி ஆக்‌ஷனில் இறங்குதல் போன்ற சகல அம்சங்களிலும், தன் கதாபாத்திரத்துக்கு உட்பட்டு, மிகையில்லாமல் இயல்பாக சிறப்பாக நடித்திருக்கிறார். இப்படத்துக்கு பிரஷாந்தின் நடிப்பு மிகப் பெரிய பலம். உண்மையிலேயே இந்த படம் பிரஷாந்துக்கு கம்பேக் தான். வெல்கம் பேக் பிரஷாந்த்…!

நடிகர் கார்த்திக்கின் இரண்டாவது மனைவி சிமியாக வில்லி கதாபாத்திரத்தில் சிம்ரன் நடித்திருக்கிறார். மிகவும் வலிமையான கதாபாத்திரம். கிடைத்த வாய்ப்பை சரியாகப் பயன்படுத்தி, திறமையாக நடிப்பை வெளிப்படுத்தி, தானொரு அனுபவம் வாய்ந்த நடிகை என்பதை மீண்டும் நிரூபித்திருக்கிறார்.

நாயகி ஜுலியாக நாயகனைக் காதலிக்கும் கதாபாத்திரத்தில் பிரியா ஆனந்த் நடித்திருக்கிறார். அழகாக இருக்கிறார். கவர்ச்சியாக உடையணிந்து வருகிறார். அவருடைய கதாபாத்திரம் கதையில் திருப்பம் ஏற்படுத்தும் அளவுக்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக இல்லை என்றாலும், கொடுத்த வேலையை குறைவின்றி நிறைவாகச் செய்துள்ளார்.

வில்லியின் கள்ளக்காதலனாகவும், அவரது கணவரை கொலை செய்ய உடந்தையாக இருக்கும் போலீஸ் இன்ஸ்பெக்டராகவும் சமுத்திரக்கனி நடித்திருக்கிறார். மிரட்டும் உடல்மொழியில் அச்சத்தையும், பயந்து நடுங்கும் உடல்மொழியில் சிரிப்பையும் வரவழைக்க்கிறார். அவரது மனைவியாக நடித்திருக்கும் வனிதா விஜயகுமார், சில காட்சிகளில் வந்தாலும், நல்ல பங்களிப்பு செய்துள்ளார்.

வில்லியின் கணவர் நடிகர் கார்த்திக்காகவே நடித்திருக்கும் கார்த்திக், தனது வழக்கமான ஸ்டைலில், துருதுருவென அலப்பறை செய்திருக்கிறார்.

லாட்டரிச்சீட்டு திருட்டுத்தனமாக விற்கும் பெண்மணியாக வரும் ஊர்வசி, ஐஸ்வர்யா ராய் மீது பக்தி கொண்ட ஆட்டோ டிரைவராக வரும் யோகி பாபு, நொடித்துப்போன பழைய மருத்துவமனையை வைத்துக்கொண்டு ஏமாளிகளின் உடலுறுப்புகளைத் திருடி விற்கும் டாக்டராக வரும் இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் ஆகியோர் காமெடி வில்லன்களாக கலக்கியிருக்கிறார்கள். மனோபாலா, பூவையார் ஆகியோரும் கிடைத்த கேப்பில் நகைச்சுவையை சிதற விட்டிருக்கிறார்கள்.

இந்தியில் வெற்றி வாகை சூடிய ‘அந்தாதுன்’ திரைப்படத்தின் தமிழ் ரீமேக் உரிமையை வாங்கி, அதன் மூலக்கதைக்கு தமிழ் ரசிகர்களுக்குப் பிடிக்கும் விதத்திலும், பிரசாந்துக்குப் பொருந்தும் விதத்திலும் திரைக்கதை அமைத்து, கிரைம் திரில்லர் ஜானரில் சஸ்பென்ஸ் மற்றும் விறுவிறுப்புக் குறையாமல் இப்படத்தை சிறப்பாக இயக்கியிருக்கிறார் தியாகராஜன். படம் ஆரம்பித்த சில நிமிடங்களிலேயே பார்வையாளர்களைக் கதைக்குள் இழுத்துக்கொண்டு போய்விடுகிறார் இயக்குநர். அதன்பிறகு அடுத்தடுத்து நிகழும் எதிர்பாராத புதுப்புது திருப்பங்களால் நம்மை மூச்சடைக்கச் செய்து, மொபைலை நோண்ட விடாமல், திரையிலிருந்து பார்வையை அகலவிடாமல் செய்துவிடுகிறார். கதாபாத்திரங்களுக்குப் பொருத்தமான நடிகர் – நடிகைகளைத் தேர்வு செய்திருப்பதிலும், சின்னச் சின்ன கேரக்டர்களுக்குக் கூட நட்சத்திர நடிகர்களை நடிக்க வைத்திருப்பதிலும் இயக்குநரின் புத்திசாலித்தனம் பளிச்சிடுகிறது. அத்தனை நடிப்புக் கலைஞர்களையும் அளவு மீறாமல் கச்சிதமாக நடிக்க வைத்திருப்பதோடு, அத்தனை தொழில்நுட்ப கலைஞர்களையும் சிறப்பாக வேலை வாங்கி, இப்படத்தை வெற்றிப்படமாக படைத்தளித்திருக்கிறார் இயக்குநர். வாழ்த்துகள் தியாகராஜன்.

சந்தோஷ் நாராயணன் இசையமைப்பில் பாடல்கள் அனைத்தும் அருமை. கிரைம் த்ரில்லர் என்பதற்காக டமால் டுமீல் என்று பின்னணி இசையில் உருட்டாமல், நாயகன் பியானோ இசைக்கலைஞர் என்பதை மனதில் வைத்து, பியானோ இசையையே பெரும்பாலும் பயன்படுத்தியிருப்பது கிளாஸ்.

ரவி யாதவின் துல்லியமான, கவித்துவமான ஒளிப்பதிவு, படத்தை பிரமாண்டமாகவும், கலர்ஃபுல்லாகவும் காட்ட உதவியிருக்கிறது. சதீஷ் சூர்யாவின் படத்தொகுப்பு, படத்தின் திருப்பங்களை குழப்பமில்லாமல் புரிந்துகொள்வதற்கு துணை புரிந்திருக்கிறது.

‘அந்தகன்’ – பிரஷாந்துக்கு வெற்றிகரமான கம்பேக்! பாருங்கள்! வாழ்த்துங்கள்!