அம்முச்சி 2 – விமர்சனம்

நடிப்பு: அருண், சசி, மித்ரா, ராஜேஷ் பாலசந்திரன், சின்னமணி அம்மாள் மற்றும் பலர்

இயக்கம்: ராஜேஸ்வர்.கே

தயாரிப்பு: நக்கலைட்ஸ் & ஆஹா தமிழ்

ஓ.டி.டி: ஆஹா ஒரிஜினல்

மக்கள் தொடர்பு: யுவராஜ்

கொங்கு மண்டல வாழ்வியலை மையமாக வைத்து, சரளமான கொங்குத் தமிழ் பேச்சுவழக்கில் அழகிய காதல் கதையைச் சொல்லியிருப்பது தான் ‘அம்முச்சி 2”

கோவை மாவட்டத்தில் உள்ள  கோடாங்கி பாளையம் என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் நாயகி மித்ரா. அவருக்கு வெளியூர் போய் கல்லூரியில் சேர்ந்து படிக்க வேண்டும் என்று ஆசை. ஆனால் அவரது குடிகார அப்பாவுக்கு இதில் துளியளவும் விருப்பம் இல்லை. மகளுக்கு திருமணம் செய்து வைக்க வேண்டும் என்பதில் தான் அவர் குறியாக இருக்கிறார். “நான் கை காட்டும் மாப்பிள்ளையை கல்யாணம் செய்துகொள்ள வேண்டும்” என்று வற்புறுத்துகிறார். ஆனால் அவர் கை காட்டும் மாப்பிள்ளையோ படுபயங்கர முரடனாக இருக்கிறார்.

இந்நிலையில், நாயகி மித்ராவின் காதலரான நாயகன் அருண், கோடாங்கி பாளையம் வருகிறார். கல்யாணப் பிடியில் சிக்கியிருக்கும் மித்ராவை மீட்க அவர் மேற்கொள்ளும் நடவடிக்கைகள் என்ன? மித்ராவின் குடிகார அப்பாவையும், முரட்டு மாப்பிள்ளையையும் அவர் எப்படி சமாளித்தார்? மேற்படிப்பு படிக்க வேண்டும் என்ற மித்ராவின் ஆசை நிறைவேறியதா? என்ற கேள்விகளுக்கு விடையளிக்கிறது மீதிக்கதை.

0a1c

இதன் தலைப்பான ’அம்முச்சி’யாக வரும் சின்னமணி அம்மாள், அவரது மகனாக வரும் பிரசன்னா பாலசந்திரன், கதையின் நாயகனாக வரும் அருண், அவருடைய சகாவாக வரும் சசி,, நாயகியாக வரும் மித்ரா, வில்லனாக வரும் ராஜேஷ் பாலசந்திரன், நாயகனின் அம்மாவாக வரும் தனம், பிரசன்னாவின் மனைவியாக வரும் சாவித்திரி உள்ளிட்ட அனைவருமே தத்தமது கதாபாத்திரத்துக்குப் பொருத்தமாக இருக்கிறார்கள். பொருத்தமான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்கள்.

கொங்குத் தமிழ்ப்பேச்சு படத்துக்கு மிகப்பெரிய பலமாய் அமைந்துள்ளது. கொங்கு மண்டல வாழ்வியலை, அங்குள்ள மக்களின் உறவுப் பிணைப்புகளை துல்லியமாக சித்தரிப்பதில் இயக்குனர் ராஜேஸ்வர்.கே வெற்றி பெற்றுள்ளார். காதல், பாசம், காமெடி, நட்பு, துரோகம், வன்மம், செண்டிமெண்ட் என அனைத்து உணர்ச்சிகளையும் சரிவிகிதத்தில் கலந்து சுவாரஸ்யமாக கதையை நகர்த்திச் சென்றிருக்கிறார் இயக்குனர். குறைந்த பட்ஜெட்டில் இத்தனை கலகலப்பான படம் எடுக்க முடியும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தியிருக்கும் அவருக்கு பாராட்டுகள். நல்ல எதிர்காலம் அவருக்கு காத்திருக்கிறது.

சந்தோஷ்குமார் எஸ்.ஜே வின் ஒளிப்பதிவும், விவேக் சரோவின் இசையும் படத்துக்கு பலம்.

‘அம்முச்சி 2’ – அவசியம் கண்டு களியுங்கள்!