AMMANI – Tamil Review
Artistes: Lakshmi Ramakrishnan, Nithin Sathya, Subbulakshmi, Robo sankar and others
Writer – Director: Lakshmi Ramakrishnan
Producer: Ven Govinda
Music: K
Cinematography: Imran Hamad.K.R.
Editing: Rejith.K.R.
வழக்கமான கதையோ, மசாலாத்தனமோ இல்லாமல் ‘ஆரோகணம்’, ‘நெருங்கி வா முத்தமிடாதே’ ஆகிய வித்தியாசமான படங்களை இயக்கிய நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன் எழுதி இயக்கியிருக்கும் மூன்றாவது படம் ‘அம்மணி’. ‘சொல்வதெல்லாம் உண்மை’ தொலைக்காட்சி நிகழ்ச்சியின் தொகுப்பாளராகவும் இருக்கிற லட்சுமி ராமகிருஷ்ணன், அந்நிகழ்ச்சியில் பங்கேற்ற ஒரு மூதாட்டியின் வாழ்வியல் சுவாரஸ்யங்களைக் கேட்டு, ரசித்து, மனம் லயித்து, அதன் செல்வாக்கில் உருவாக்கியிருக்கும் படம் இது.
அரசு மருத்துவமனை ஆயாவாக துப்புரவு வேலை செய்யும் தொழிலாளி சாலம்மா (லட்சுமி ராமகிருஷ்ணன்). விதவை. இவருக்கு இரண்டு மகன்கள், ஒரு மகள். மகள் காதலித்தவனுடன் ஓடிப்போய் திருமணம் செய்துகொள்கிறாள். மூத்தமகன் எந்நேரமும் குடியும் குடித்தனமுமாக இருக்கிறான். இளைய மகன் சிவா (நித்தின் சத்யா) ஆட்டோ ஓட்டி, மனைவி மக்களை காப்பாற்றி வருகிறான். சாலம்மாவின் மகள் குடும்பம் நீங்கலாக, ஏனையோர் அனைவரும் கூட்டுக்குடும்பமாக சாலம்மாவுடன், அவரது சொந்த வீட்டில் வசித்து வருகிறார்கள்.
சாலம்மாவின் வீட்டிலேயே ஒரு அறையை வாடகைக்கு எடுத்து, அதில் பல ஆண்டுகளாக வசித்து வருகிறார் அம்மணி (சுப்புலட்சுமி) என்ற பார்ப்பன மூதாட்டி சொந்த பந்தங்களெல்லாம் வேறு எங்கோ இருக்க, அவர்களுடனான உறவற்று வாழும் அம்மணி, சாலைகளில் கிடக்கும் குப்பைகளை சேகரித்து, அவற்றை கடையில் விற்று, அதில் கிடைக்கும் பணத்தில் நிம்மதியாக, ஜாலியாக வாழ்ந்துவருகிறார்.
இந்நிலையில், சாலம்மாவுக்கு தனது வீட்டு கடனைக் கட்ட பணம் தேவைப்படுகிறது. இதனால், தன்னுடைய வேலையை ராஜினாமா செய்துவிட்டு, அதன்மூலம் வரும் பணத்தில் அந்த கடனை கொடுத்துவிட்டு மீதியை மகன்களுக்கு பிரித்துக் கொடுக்கலாம் என முடிவெடுக்கிறார். அது தெரிந்ததும் அவரது மகன்கள், மகள் வழி பேரன் ஆகியோர் இவர் மீது பாசம் காட்டுகிறார்கள்.
ஆனால், சாலம்மாவுக்கு வரும் பணம் கடனை கட்டுவதற்கே சரியாக போய்விடுகிறது. இதனால், விரக்தியடைந்த அவருடைய இளைய மகன் சிவா, தனது பெயரில் அந்த வீட்டை எழுதி வாங்கிக்கொண்டு, அம்மாவையும், குடிகார அண்ணனையும் வீட்டைவிட்டு விரட்டுகிறான்.
இதனால் சாலம்மா மிகவும் மனமுடைந்து போகிறார். இந்த சூழ்நிலையில் இவர் என்ன முடிவு எடுக்கிறார் என்பது தான் யாரும் எதிர்பார்க்காத க்ளைமாக்ஸ்.
சாலம்மாவாக வரும் லட்சுமி ராமகிருஷ்ணன், படம் முழுக்க நிறைந்திருக்கிறார். மருத்துவமனை ஆயாவாக அந்த கதாபாத்திரமாகவே வாழ்ந்திருக்கிறார். எத்தகைய கதாபாத்திரத்திலும் தன்னால் சிறப்பாக நடிக்க முடியும் என்பதை நிரூபித்திருக்கிறார்.
சமூக அக்கறை உள்ள ஓர் இயக்குனராகவும் லட்சுமி ராமகிருஷ்ணன் பளிச்சிடுகிறார். குடிசைப் பகுதி வாழ்வியலை ரத்தமும் சதையுமாக நம் கண்முன்னே கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறார். இன்றைய காலகட்டத்தில் மனித உறவுகளை நமத்துப்போக செய்துவிட்டு, பணம் தான் அனைவரையும் ஆட்டிப் படைக்கிறது என்பதை அழகாக எடுத்துச் சொல்லியிருக்கிறார். ஆடை குறைந்த இளம்பெண்களின் ஆபாச குத்தாட்டமோ, நெருக்கமான காதல் காட்சிகளோ இல்லாமல், யதார்த்தத்தை சொல்லும் விதமாக கதையை நகர்த்திச் சென்றிருக்கிறார். க்ளைமாக்ஸிலும், எக்ஸ்ட்ரா க்ளைமாக்ஸிலும் “அட…” என ஆச்சரியப்பட வைத்திருக்கிறார் இயக்குனர் லட்சுமி ராமகிருஷ்ணன்.
குப்பை பொறுக்கும் அம்மணி என்ற பார்ப்பன மூதாட்டியாக வரும் சுப்புலட்சுமியின் நடிப்பும், குறும்பும், துறுதுறுப்பும் நம்மை கவர்கிறது. “என்கிட்ட இருக்கும் பணத்துக்காக என்னோட இருக்குறவங்க, அந்த பணம் தீர்ந்ததுனா எப்படி நடந்துக்குவாங்கனு எனக்கு தெரியும். அதனால என் பொழப்ப பாக்குறேன்” என்று சாலம்மாவுக்கு மட்டுமல்லாமல், ஒட்டுமொத்த மனித இனத்துக்கும் அறிவுரை கூறுவது போல வசனம் பேசிவிட்டு, கோணிப்பையை எடுத்துக்கொண்டு சுப்புலட்சுமி கிளம்பும்போது, கைதட்டலில் திரையரங்கம் அதிர்கிறது.
சாலம்மாவின் இளைய மகன் சிவாவாக வரும் நித்தின் சத்யா, எமன் கெட்டப்பில் வந்து சவ ஊர்வலத்தில் குத்தாட்டம் போடும் ரோபோ சங்கர் உள்ளிட்ட அனைத்து நடிப்புக் கலைஞர்களும் அளவாய், அற்புதமாய் நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்கள்.
இம்ரானின் ஒளிப்பதிவு அருமை. கே-யின் இசையில் பாடல்கள் பரவாயில்லை. பின்னணி இசை கதையோடு சேர்ந்து பயணித்து படத்துக்கு பக்கபலமாக இருக்கிறது.
‘அம்மணி’ – கருத்துள்ள உயர்ந்த மனுஷி!