”அமரன்’ திரைப்படத்தில் என் தந்தை ஜி.தாஸை பார்த்தேன்”: சிவகார்த்திகேயன் உருக்கம்!

சிவகார்த்திகேயன், சாய் பல்லவி உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகியுள்ள படம் ‘அமரன்’. சோனி நிறுவனம், கமல்ஹாசன் மற்றும் மகேந்திரன் இணைந்து தயாரித்துள்ள இந்தப் படம் அனைத்து மொழிகளிலும் வெளியாகி இருக்கிறது. மறைந்த ராணுவ வீரர் மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கையை மையப்படுத்தி இப்படத்தை இயக்கி இருக்கிறார் ராஜ்குமார் பெரியசாமி. பெரும் எதிர்பார்ப்புக்கு இடையே வெளியாகி விமர்சன ரீதியாக வரவேற்பைப் பெற்றுள்ள ‘அமரன்’ தற்போது வசூல் ரீதியாகவும் வரவேற்பைப் பெற்றுள்ளது. உலகமெங்கும் ஒட்டுமொத்த வசூலில் 3 நாட்களில் சுமார் ரூ.100 கோடியை கடந்துவிட்டது. தொடர்ந்து வசூலை வாரிக் குவித்து வருகிறது.

இந்நிலையில், ‘அமரன்’ திரைப்படத்தின் வெற்றிக் கொண்டாட்டம் நேற்று (நவம்பர் 04) சென்னை லீலா பேலஸில் பிரமாண்டமாக நடைபெற்றது. சிவகார்த்திகேயன், சாய் பல்லவி, இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி, இசையமைப்பாளர் ஜிவி.பிரகாஷ்குமார், தயாரிப்பு வடிவமைப்பாளர் ராஜீவன், ஒளிப்பதிவாளர் சிஎச்.சாய், படத்தொகுப்பாளர் ஆர்.கலைவாணன் உள்ளிட்ட படக்குழுவினர் இதில் கலந்துகொண்டனர்.

இந்நிகழ்வில் சிவகார்த்திகேயன் பேசியதாவது:

“அமரன்’ வசூல் இன்று ரூ.150 கோடியை தாண்டிவிட்டது. இன்னமும் வசூல் செய்யும் என்கிறார்கள். தயாரிப்பாளர்கள் நிறைய முதலீடு செய்து படம் எடுக்கிறார்கள். ஆகையால் வசூல் முக்கியம் தான். நிறைய வசூல் செய்தால் மட்டுமே இதுபோல படங்கள் எடுக்க முடியும். எடுக்க வேண்டும் என்று தயாரிப்பாளர்களுக்குத் தோன்றும்.

அதைத் தாண்டி எனக்கும் வசூல் முக்கியம். பெரிய பட்ஜெட் வேண்டும். என்னுடைய படங்களுக்கு பெரிய பட்ஜெட் கிடைத்தால் மட்டுமே மக்களுக்கு பெரிய படங்களைக் கொடுக்க முடியும்.

மற்றபடி இந்தப் படத்தைத் தாண்டி விட்டேன், அந்தப் படத்தை தாண்டி விட்டேன் என்பதை தலையில் ஏற்றிக்கொள்ள மாட்டேன்.

இதுபோல பெரிய பட்ஜெட் படங்கள் எனக்கு கிடைப்பதற்கு காரணமான எனது முந்தைய படங்களின் குழுவினருக்கு நன்றி.

தமிழ் சினிமா எனக்கு கொடுத்திருக்கும் இடத்துக்கு கண்டிப்பாக உண்மையாக இருப்பேன்.

இந்த ‘அமரன்’ படத்தைச் சரியாகப் படமாக்க வேண்டும் என்று நான் நினைத்ததற்குக் காரணம் என் தந்தை ஜி.தாஸ் தான். இந்த படத்தில் நான் என் தந்தை ஜி.தாஸை பார்த்தேன்…

 தமிழ்நாட்டுச் சிறைத் துறையில் பணியாற்றியவர்களிடம் என் தந்தை ஜி.தாஸ் பற்றி கேட்டால் தெரியும். என் தந்தை ஒருநாள்கூட பணியில் இருந்து விடுப்பு எடுத்து நான் பார்த்தது இல்லை.

மேஜர் முகுந்திற்கும் என் அப்பாவிற்கும் நிறைய ஒற்றுமைகள் இருக்கின்றன. மேஜர் முகுந்த் போலவே என் தந்தையும் விடுமுறைக்கு வீட்டிற்கு வருவதாகச் சொல்லியிருந்தார். அடுத்த நாள் கல்லூரி முடிந்து நான் வீட்டிற்குச் சென்றபோது கூட்டமாக இருந்தது. என் தந்தை இறந்துவிட்டது தெரிந்தது.

மத ரீதியான சடங்குகள் அனைத்தும் முடிந்தபிறகு என் தந்தையின் நொறுங்கிய எலும்புகளைப் பார்த்தேன். அன்று நொறுங்கியது அவருடைய எலும்புகள் மட்டுமல்ல, 17 வயது இளையரான என் இதயமும்தான்.

இன்று ‘அமரன்’ படத்தைப் பார்த்து முதலமைச்சர், துணை முதலமைச்சர், சூப்பர் ஸ்டார் ஆகியோர் என்னைப் பாராட்டுகின்றனர். நீங்கள் அனைவரும் அன்று நொறுங்கிப்போன என்னை ஒட்ட வைத்து இந்த இடத்தில் நிறுத்தி இருக்கிறீர்கள். இன்று நான் இங்கே சிவகார்த்திகேயனாக நிற்கவில்லை. தாஸ் என்கிற நேர்மை தவறாத காவல்துறை அதிகாரியின் மகனாக நிற்கிறேன்.

என் தந்தைக்கு இந்திய அரசாங்கம் விருது அறிவித்தது. அதை என் தாயார் தான் பெற்றுக்கொண்டார். நான் அதை தூரத்தில் இருந்து வேடிக்கை பார்த்தேன். இந்தப் படமும் என் வாழ்க்கையும் ஒன்றுதான்.

என் தந்தையின் வாழ்க்கையைப் படமாக எடுக்கலாம் என்று நான் நினைத்தேன். ஆனால், என் தந்தையைப் பற்றி பேச நான் இந்த இடத்தில் இருக்கிறேன். அதுவே எனக்குப் போதும். என் தந்தை நீங்கள் எனக்குக் கொடுக்கும் கைத்தட்டலுக்கு மத்தியில் தான் இருக்கிறார் என்பதை எண்ணி நான் பெருமை கொள்கிறேன்” என்று சிவகார்த்திகேயன் உருக்கமாகப் பேசி கண் கலங்கினார்.

சாய் பல்லவி பேசும்போது…

“ராஜ்குமார் பெரியசாமி மற்றும் சிவகார்த்திகேயன் பேச்சுக்களுக்கு இடையில் நான் பேசுவது சரியாக இருக்காது. அவர்கள் இருவரும் நன்றாக பேசுவார்கள். அமரனில் நடித்ததை நான் மிகவும் சந்தோஷமாகக் கருதுகிறேன். படத்தைப் பார்த்துவிட்டு நிறைய ரசிகர்கள் ஒன்றுமே பேச முடியாமல் என்னைக் கட்டி அணைத்துப் பாராட்டினார்கள். அவர்களால் அழுகையை நிறுத்த முடியவில்லை. அதுவே எனக்கு பெரிய மகிழ்ச்சியைத் தந்துள்ளது” என்றார்.

இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி பேசியதாவது:-

“தமிழ்நாட்டில் வாழும் தமிழ் ரசிகர்களாக இருந்தாலும் சரி, வெளிநாடுகளில் வாழும் உலகத் தமிழர்களாக இருந்தாலும் சரி, ஒரு கதையை நேர்மையாகவும், ஈடுபாட்டோடும் கொடுத்தால் அதை மிகப்பெரிய வெற்றியடையச் செய்வார்கள் என்ற நம்பிக்கை இந்த படத்தில் எனக்கு கிடைத்திருக்கிறது. அடுத்தடுத்து இது போன்ற வித்தியாசமான முயற்சிகளை செய்யவேண்டும் என்று தோன்றுகிறது.

இந்த படத்தில் எது நிஜம், எது சித்தரிப்பு, எது உங்கள் கற்பனை என்றெல்லாம் நிறைய பேர் கேட்கின்றனர். பயோகிராபி என்பது ஒரு ஜானர். ‘டைட்டானிக்’, ‘ஷிண்ட்லர்ஸ் லிஸ்ட்’ இதெல்லாம் அந்த வகைப் படங்கள்தான். அவற்றுக்கென்று சில நியாய தர்மங்கள் இருக்கிறது. அவற்றை கடைப்பிடித்து எழுதப்பட்ட ஒரு திரைக்கதை இது. அது இன்று மிகப் பெரிய வெற்றியை அடைந்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.

இந்த படம் சம்பந்தமான சில சர்ச்சைகளுக்கு நான் முற்றுப்புள்ளி வைக்க விரும்புகிறேன். ஒரு ’தமிழர் அடையாளம்’ இந்த படத்துக்கு இருக்க வேண்டும் என்பது மேஜர் முகுந்த் வரதராஜனின் மனைவி இந்து ரெபக்கா வர்கீஸ் எங்களிடம் வைத்த கோரிக்கை. இத்தனைக்கும் இந்து ரெபேக்கா வர்கீஸ் கேரளாவைச் சேர்ந்த மலையாளி. மேலும், முகுந்தாக நடிப்பவர் தமிழ் ரூட்ஸ் உள்ள நடிகராக இருக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார். அதனால் தான் முகுந்தாக நடிக்க சுத்தத் தமிழனான சிவகார்த்திகேயனை தேர்ந்தெடுத்தோம்.

அதேபோல முகுந்த் ‘நைனா’ ’நைனா’ என்று ஆசையாக அழைக்கும் அந்த தந்தை வரதராஜனும், ‘ஸ்வீட்டி’ என்று செல்லமாக அழைக்கும் தாய் கீதாவும் வைத்த கோரிக்கை, ”முகுந்த் எப்போதும் தன்னை இந்தியன் என்று சொல்லிக்கொள்ளவே ஆசைப்படுவார். தன்னுடைய சான்றிதழில் கூட எந்த குறியீடும் இருக்கக் கூடாது என்று நினைப்பார். எனவே ஒரு இந்தியன், தமிழன் என்ற அடையாளத்தை மட்டும் ஒரு ராணுவ வீரனாக இந்த படத்தில் அவருக்கு கொடுங்கள்” என்றனர். இவற்றை எல்லாம் அந்த குடும்பத்தார் எங்கள் முதல் சந்திப்பிலேயே கேட்டுக்கொண்டனர். 

அதே நேரம், ஒரு இயக்குநராக, இந்த பயணத்தில் முகுந்த் எந்த சமூகத்தைச் சேர்ந்தவர் என்பது ஒரு முக்கியமான விஷயமாக எங்களுக்குப் படவில்லை. அவர்கள் வீட்டுக்கு நாங்கள் சென்றபோது கூட நாங்களும் அதை கேட்கவில்லை. அவர்களும் அதை சொல்லவில்லை” என்றார்.