“வாக்குறுதியை அமலாபால் காப்பாற்றவில்லை”: இயக்குனர் விஜய் தந்தை குற்றச்சாட்டு!

இயக்குனர் விஜய், நடிகை அமலாபால் இருவரும் காதலித்து, இரு வீட்டார் சம்மதத்துடன், 2014ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார்கள். திருமணம் நடந்து இரண்டே ஆண்டுகள் கடந்துள்ள நிலையில், அமலாபால் மீண்டும் திரைப்படங்களில் நடிப்பது தொடர்பாக இருவருக்கும் இடையே கருத்துவேறுபாடு ஏற்பட்டுள்ளதாகவும், விரைவில் விவாகரத்து செய்ய உள்ளதாகவும் செய்திகள் வெளியாயின.
“இந்த செய்திகள் உண்மையே” என்று இயக்குனர் விஜய்யின் தந்தையும், தயாரிப்பாளருமான ஏ.எல்.அழகப்பன் கூறியுள்ளார். அவர் கூறியிருப்பதாவது: “விஜய் – அமலாபால் தொடர்பாக பலவிதமாக செய்திகள் வருவது எங்களுக்குத் தெரியும். இந்த நேரத்தில் நான் சொல்ல விரும்புவது என்னவென்றால், வெளிவந்துள்ள செய்திகள் உண்மையே.
“அமலாபால் மீண்டும் படங்களில் நடிப்பது குறித்து எங்கள் அதிருப்தியைத் தெரிவித்த பிறகும் அவர் தொடர்ந்து புதுப் படங்களில் நடிக்க ஒப்பந்தமானார். எங்களிடமோ, ஏன் விஜய்யிடமோ கூட கலந்து ஆலோசிக்கவில்லை. இதனால் அவர்களுக்கு இடையே பிரச்சனை ஏற்பட்டது.
“சில சண்டைகளுக்குப் பிறகு, ‘இனிமேல் நடிக்கமாட்டேன்’ என்று அமலாபால் வாக்குறுதி அளித்தார். ஆனால் அவரால் அந்த வாக்குறுதியை காப்பாற்ற முடியவில்லை. அவருடைய குடும்பத்தினருடன் பேசினோம். ஆனால் அமலாபால் அதை பற்றி எல்லாம் கவலைப்படவில்லை.
“எங்களுக்கு எங்களின் மகன் வாழ்க்கை தான் முக்கியம். அதனால் சட்டரீதியாக இதை எதிர்கொள்கிறோம்” என்றார் ஏ.எல்.அழகப்பன்.