“தவறான வயதில் திருமணம் செய்துவிட்டேன்”: மனம் திறந்தார் அமலா பால்!

காதலித்து, திருமணம் செய்து, ஒரு வருடம் மட்டுமே சேர்ந்து வாழ்ந்த இயக்குனர் விஜய்யும், நடிகை அமலா பாலும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து, விவாகரத்து கோரி குடும்பநல நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளார்கள்.

இது தொடர்பாக அமலா பால் ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது:

வாழ்க்கை புதிதாக ஆரம்பித்தது போல உணர்கிறேன். 18 வயதில் சினிமாவில் அறிமுகமானேன். 23 வயதில் திருமணம் செய்தேன். 24 வயதில் இருவரும் பிரிந்துள்ளோம். எனக்கு அறிவுரை கூற யாரும் இல்லை. எனவே, என் தவறுகள் மூலமாகவே எல்லாவற்றையும் கற்றுக்கொண்டேன். பிரிவுக்குப் பிறகு நான் நிறைய அழுதேன். கடைசியில் இவற்றை என் அனுபவமாக எண்ணிக்கொள்கிறேன்.

இயக்குநர் விஜய்யை இன்னமும் காதலிக்கிறேன். எப்போதும் அந்தக் காதல் இருக்கும். அவர் எப்போதும் எனக்கு ஸ்பெஷல் மனிதர்தான். அதேசமயம் பிரிவதும் காதல் தான். யாரும் பிரிவதற்காகத் திருமணம் செய்ய மாட்டார்கள். எனவே, பிரிவது குறித்து எடுத்த முடிவு என் வாழ்க்கையிலேயே மிகவும் கடினமானதாகும். வாழ்க்கையில் எதையும் கணிக்கமுடியாது.

விஜய்யைத் திருமணம் செய்தது தவறான முடிவா என்றால் நிச்சயம் இல்லை என்றுதான் சொல்வேன். நான் யார் என்பதையும், யாராக இல்லை என்பதையும் திருமணம் எனக்கு உணர்த்தியுள்ளது. தவறான வயதில் திருமணம் செய்துவிட்டேன். 20களின் தொடக்கத்தில் திருமணம் செய்வது தவறு.

இந்தத் தோல்வியால் நான் உடைந்துபோகவில்லை. அதிலிருந்து நான் மெல்ல மெல்ல வெளியே வருகிறேன். நான் தவறான முன்னுதாரணமாக இருக்கக் கூடாது. என் குடும்பமும் என் சகோதரரும் இந்தச் சமயத்தில் எனக்கு உறுதுணையாக உள்ளார்கள். இந்தப் புயலில் என் சகோதரர் அபிஜித் நிறைய உதவிகள் செய்துள்ளார். என் சகோதரர் இல்லாமல் என்னால் வாழமுடியாது.

 திரைப்படத் துறையிலிருந்து நான் விலகியதாக யாரும் எண்ணவில்லை. என் திருமணத்துக்குப் பிறகு ‘வேலை இல்லா பட்டதாரி’ வெளியானது. பிறகு 2015-ல் ‘மிலி’, ‘அம்மா கணக்கு’ போன்ற படங்கள் ஒரு நடிகையாக வளர எனக்கு உதவின.

என் திருமணம் மற்றும் விவாகரத்துக்குப் பிறகும் திரையுலகம் என்னை வரவேற்றுள்ளது. இப்போது நான் நடிக்கும் படங்கள் அனைத்தும் அருமையான, வலுவான கதாபாத்திரங்கள் கொண்டவை. எல்லா மொழிகளிலும் எனக்கென்று மையக் கதாபாத்திரங்கள் கிடைக்கின்றன.

தனுஷுக்கு ஜோடியாக ‘வடசென்னை’யில் நடிக்கிறேன். ‘திருட்டு பயலே 2’, ‘வேலையில்லா பட்டதாரி 2’ ஆகிய படங்களிலும் நடிக்கிறேன். சுதீப்புக்கு ஜோடியாக கன்னட படத்தில் அறிமுகமாக உள்ளேன். நான் நடிக்கவுள்ள தெலுங்கு மற்றும் மலையாளப் படங்கள் குறித்து விரைவில் அறிவிப்புகள் வெளிவரும்.

இவ்வாறு அமலா பால் கூறியுள்ளார்.