“வழக்கத்திற்கு மாறான படம் ’கணம்” – நடிகை அமலா பேட்டி
ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் சார்பில் எஸ்.ஆர்.பிரபு, எஸ்.ஆர்.பிரகாஷ் ஆகியோர் தயாரிப்பில் அறிமுக இயக்குநர் ஸ்ரீகார்த்திக் இயக்கியிருக்கும் ‘கணம்’ படத்தில் மிக முக்கியமான கதாப்பாத்திரத்தில் நடித்து மீண்டும் கோலிவுட்டிக்கு திரும்பியிருக்கும் நடிகை அமலா, இந்த படத்தில் நடிக்க சம்மதித்தது ஏன்? என்ற கேள்வி அனைவர் மனதிலும் இருக்க, அந்த கேள்வியுடன், படம் பற்றிய தனது சுவாரஸ்யமான அனுபவங்களையும் அவர் நம்மிடம் பகிர்ந்துக்கொண்டது இதோ,
தமிழ்த் திரையுலகில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியவர் நீங்கள். திடீரென திருமணம் செய்து கொண்டு ஆந்திர மாநிலத்தில் தங்கிவிட்டீர்கள். கோஹினூர் வைரத்தைத் ஆங்கிலேயர்கள் எடுத்துச் சென்றது போல நாகார்ஜுனா உங்களை எங்களிடமிருந்து எடுத்துச் சென்று விட்டார். ஆனால் பத்திரமாக வைத்திருக்கிறார். தமிழ்நாட்டை, தமிழ் சினிமாவில் நீங்கள் பணியாற்றிய நாட்களை நினைத்துப் பார்ப்பீர்களா?
அங்கு சென்ற முதல் வருடம் சென்னையை அதிகமாக மிஸ் செய்தேன். இங்கு கடலோரமாகத்தான் எனது விடுதி, வீடு எல்லாம் இருந்தது. அதனால் ஒரு சி.டியில் கடலின் ஓசையை நாகார்ஜுனா ஒலிக்க விடுவார். ஏனென்றால் அந்த ஒலியின் இல்லாமையை நான் அதிகமாக உணர்ந்தேன். பின் புதிய சூழல் கொஞ்சம் கொஞ்சமாகப் பழக்கப்பட்டுவிட்டது.
நான் இருந்த அந்த 6-7 வருட காலம் தமிழ் சினிமாவின் பொற்காலம் என்று சிலர் கூறுவதைக் கேட்டிருக்கிறேன். சிறந்த தொழில்நுட்பக் கலைஞர்கள், உயர்ந்த இயக்குநர்கள், இளையராஜாவின் அற்புதமான இசை என நிறைந்திருந்தது. இளையராஜா இசையமைத்தால் படம் கண்டிப்பாக வெற்றிதான் என்று ஒவ்வொரு இயக்குநரும் சொல்வதைப் பார்த்திருக்கிறேன்.
எனது தற்போதைய வாழ்க்கை பல வேலைகளுக்கு நடுவில், திருப்திகரமாக, ஆர்வத்துடன் சென்று கொண்டிருக்கும்போது மீண்டும் சினிமாவைப் பற்றி நினைக்க நேரமில்லை. எங்களின் பிராணிகள் நலச் சங்கத்தின் 30வது ஆண்டு இது. 5.5 லட்சம் பிராணிகளுக்கு நாங்கள் இதுவரை உதவியிருக்கிறோம். இப்படி இருக்கும் நிலையில் சினிமாவைப் பற்றிய எண்ணம் வராது இல்லையா.
ஆனால் நான் ஒரு தாயான பின்பு, அம்மா கதாபாத்திரங்களில் நடிக்க அழைத்தனர். நானும் அது குறித்து யோசித்தேன். ஆனால் குழந்தையை சரியாகக் கவனித்துக் கொள்ள முடியாது என்பதால் நடிக்கவில்லை. இப்போது அதற்கான சூழல் உருவாகியுள்ளது.
உங்களை நடிக்க சம்மதிக்க வைப்பது அவ்வளவு எளிதல்ல என்கிறார்களே, கணம் இயக்குநர் ஸ்ரீகார்த்திக் எப்படி உங்களை சம்மதிக்க வைத்தார்?
சந்திக்க நேரம் அனுமதி பெற்றுவிட்டு வீட்டுக்கு வந்தார். 2-3 மணி நேரம் கதை சொன்னார். அவர் விளக்கிச் சொன்ன விதமும் சரி, கதையும் சரி, அழகாக இருந்தது. அப்படி ஒரு கதையை நீண்ட நாட்கள் கழித்துக் கேட்கிறேன். மிகவும் நெகிழ்ச்சியாக உணர்ந்தேன். அதனால் இதில் நடிக்க ஒப்புக்கொண்டேன். வழக்கத்துக்கு மாறான ஒரு படம். மூன்று கதாபாத்திரங்களின் பயணமே இந்தக் கதை. இதில் நாயகன் ஷர்வானந்தின் கதையில் எனக்கும் சிறிய பங்கு இருக்கிறது.
ஷர்வானந்த், ஸ்ரீகார்த்திக், சதீஷ், ரமேஷ் திலக் என இன்றைய தலைமுறைக் கலைஞர்களோட நடித்த அனுபவம் எப்படி இருந்தது?
ஷர்வானந்துடன் தான் எனக்கு அதிக காட்சிகள். மிகத் திறமையானவர். கண்ணியமானவர். ஸ்ரீகார்த்திக்கு, சர்வானந்தும் ஒருவரை ஒருவர் முந்தி பணியாற்றினர். என்னையும் கடுமையாக வேலை வாங்கினார். சரியான தருணம் கிடைக்கும் வரை நடிக்க வைத்தார். அது உங்களுக்குப் படம் பார்க்கும் போது தெரியும். டப்பிங் கொடுக்கும்போது படம் பார்த்தேன். மிகவும் சுவாரசியமானதாக இருந்தது.
நிறைய நகைச்சுவை நிறைந்திருந்தது. நீங்களும் விழுந்து விழுந்து சிரிப்பீர்கள். அதே சமயம் சில காட்சிகளில் மிகவும் உணர்ச்சிகரமானதாக இருக்கும். ஏனென்றால் அம்மா நினைவுக்கு வரும்போது யாராக இருந்தாலும் உணர்ச்சிவசப்படுவார்கள். அம்மா கதாபாத்திரம் வந்த பிறகு ஆழமான உணர்வுகள் கதையில் வரும். அதற்கேற்ற ஆழமான இசையும் உள்ளது.
இந்த 30 வருடங்கள் உங்களை சுற்றி ஏற்பட்டிருக்கும் மாற்றங்களை எப்படி பார்க்கிறீர்கள்?
பிரமிக்கத்தக்கதாக இருக்கிறது. ஒவ்வொரு வருடம் இந்த வளர்ச்சியை, வித்தியாசத்தை நான் பார்க்கிறேன். அது சந்தோஷமாகவும் இருக்கிறது. ஏனென்றால் உலகில் எங்கும் செல்லலாம் என்ற நிலை உருவாகியிருக்கிறது. பெண்களுக்கான பல நல்ல வெளிகள், வாய்ப்புகள் உருவாகியுள்ளன. அவர்கள் நினைத்த எதையும் சாதிக்க முடிகிறது. நான் வாழ்ந்து கொண்டிருக்கும் காலத்திலேயே இதைப் பார்த்ததில் மகிழ்ச்சி.
என் அம்மா அயர்லாந்து நாட்டைச் சேர்ந்தவர். அந்த காலத்தில் இந்தியப் பெண்களுக்கு இல்லாத ஒரு சுதந்திரத்தோடு அவர் வாழ்ந்ததை நான் பார்த்திருக்கிறேன். சுதந்திரமாக இருத்தல், மேற்கத்திய கலாச்சாரத்தை பின்பற்றுதல் என்றாலே உடைகளும், வாழும் முறையும் தான் என்று பலர் நினைக்கின்றனர். ஆனால் அதற்கேற்ற சிந்தனை ஓட்டத்தைப் பற்றி யாரும் சொல்வதில்லை. எனக்கு அதுதான் முக்கியமானதாக இருந்தது.
நம் பாரம்பரிய உடை அணிந்து கொண்டு தான் கல்லூரிக்குச் சென்று வந்தேன். மேற்கத்திய கலாச்சார உடைகளை அணிவதுதான் சுதந்திரம் என்று நான் நினைக்கவில்லை. சுதந்திரமாக சிந்திப்பதே முக்கியம், மனதின் சுதந்திரமே முக்கியம் என்று நினைத்தேன். இப்போது அதை எல்லா இடங்களிலும் பார்க்க முடிகிறது. ஏன் சினிமாவில் கூட அத்தனை துறைகளிலும் பெண்களைப் பார்ப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது.
ரசிகர்களை திரையரங்குக்கு வரவழைக்கும் அளவு கணம் படத்தில் என்ன இருக்கிறது?
இது ஒரு சாகசப் பயணக் கதை என்று சொல்லலாம். 3 சாதாரண மனிதர்கள் வாழ்க்கைப் பயணத்தைப் பற்றிய கதை. ஒவ்வொரு தோல்விக்குப் பின்னர் எழுவது எப்படி என்பதை அழகாக, கவித்துவமாகச் சொல்லியிருக்கிறார்கள். அதில் நிறைய சிரிப்பு நிறைந்திருக்கும். ஒரு அதிர்ச்சி இருக்கும். அந்த அதிர்ச்சியின் மூலம் கூட வாழ்க்கையைப் பற்றி புரிய வரும். நமது சிறந்த முயற்சியைத் தர நமக்குக் கிடைக்கும் அரிய வாய்ப்பை பயன்படுத்துவது எப்படி என்று உணர வைக்கும். அந்த உந்துதலைக் கொடுக்கும். விழுந்தால் எழுந்திரு என்பதைச் சொல்லும். நம்மால் முடியும் என்ற நம்பிக்கையைத் தரும்.
படத்தின் ட்ரெய்லரில் காலப் பயணத்தைப் பற்றிய காட்சிகள் உள்ளன. உங்களுக்கு அப்படி ஒரு வாய்ப்பு கிடைத்தால் எந்த காலத்துக்குப் பயணப்படுவீர்கள்?
நான் எதிர்காலத்துக்குத் தான் செல்ல விரும்புகிறேன். பல வேலைகளைச் செய்து வருகிறோம், அது எப்படி நடக்கிறது என்பது தெரிய வேண்டும். நினைத்துப் பாருங்கள், யாராவது எதிர்காலத்தில் இருந்து வந்து, ‘கவலை வேண்டாம், இந்தக் காரியம் சரியாக நடக்கும்’ என்று சொன்னால் எவ்வளவு உற்சாகமாக இருக்கும்?அது கிடைக்க வேண்டுமென விரும்புகிறேன்.
இவ்வளவு நேர்மறையாக இருப்பதன் ரகசியம் என்ன?
நான் விலங்குகள் நலனுக்காகப் பணியாற்ற ஆரம்பித்தேன். அதில் நிறைய வலிகளைப் பார்த்திருக்கிறேன். ஒரு கட்டத்தில் அதன் துயரத்தில் மூழ்கிவிட்டேன். ஆனால் அது சரியான சிந்தனை அல்ல, நல்ல விஷயம் செய்ய திடமாக இருக்க வேண்டும் என்று யோசிக்க ஆரம்பித்தேன். அப்போது 8-9 மாத கர்ப்பமாக இருந்தேன். தியானம் கற்றுக் கொண்டேன். விபாசனா தியான மையம் என்கிற இடத்தில் கற்று, பயிற்சி செய்ய ஆரம்பித்தேன்.
அப்போது ஆரம்பித்து அடுத்த 20 வருடங்களுக்கும், ஒவ்வொரு வருடமும் 10 நாள் அங்கு நடக்கும் தியான முகாமுக்குச் சென்றுவிடுவேன். அது ஒரு நல்ல தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது என்று நினைக்கிறேன். எனக்கும் எல்லோரையும் போல கோபம் வரும். ஆனால் சீக்கிரமாக சகஜநிலைக்கு வந்துவிடுவேன். என்ன பிரச்சினை என்பதை பகுத்தாய்ந்து தீர்வு என்ன என்று யோசிக்க ஆரம்பித்துவிடுவேன். யாரையும் காயப்படுத்துவது போன்ற வார்த்தைகள் வெளியே வராது.
இப்போது நாம் பல மொழிகளைச் சேர்ந்த படங்களைப் பார்க்க ஆரம்பித்துவிட்டோம். கணம் எப்படி தமிழ் ரசிகர்களையும், தெலுங்கு ரசிகர்களையும் ஒரே நேரத்தில் கவரும் என்று நினைக்கிறீர்கள்?
மனித உணர்ச்சிகள் உலகம் முழுக்க பொதுவானதுதான். எனவே கணம் படத்தில் இருக்கும் உணர்ச்சிகள் இளைஞர்களை சென்றடைந்துவிட்டால் கண்டிப்பாகப் படம் தேசிய அளவில், பான் இந்தியா என்று சொல்லும்படி பிரபலமாகும். கண்டிப்பாக திரையில் தமிழ், தெலுங்கு என அத்தனை ரசிகர்களுக்கும் படம் சென்று சேரும் என்று எனக்குத் தெரியும். அம்மா பாசம், இளைஞர்களுக்கான தடைகள், போராட்டங்கள், இதெல்லாம் அனைவருக்கும் பொது. இந்த விஷயங்களை ரசிகர்கள் எப்படி வரவேற்கிறார்கள் என்று பார்க்க நான் ஆர்வமாக இருக்கிறேன்.
அம்மா பாடல் குறித்து?
கதையில் அது மிக அழகான, அரிய சூழல். அதற்கேற்ற உணர்ச்சிகரமான பாடல். ஆனால் சோகமான பாடல் கிடையாது, ஆறுதலைத் தான் தரும். அந்தச் சூழலுக்கு இந்தப் பாடல் உயிரைக் கொடுத்திருக்கிறது. ரசிகர்கள் மனதில் நன்றாகப் பதிந்துவிடும்.
அனைவருக்கும் பாயசம் செய்து கொடுத்தீர்களாமே?
(சிரிப்புடன்) ஆம். அம்மா கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறேன், ஒரு நாள், ‘அம்மா எங்களுக்குச் சமைத்துப் போடுவீர்களா’ என்று கேட்டபோது என்ன சொல்வதென்று தெரியவில்லை. எனக்கு சமையல் தெரியாது என்று சொல்ல முடியுமா? அதனால் மிகவும் ஆசையாகத் தான் செய்தேன். ஆனால் தினசரி சமையல் செய்யாத போது அவ்வளவு லாவகமாக வராது. படக்குழு அனைவரும் வீட்டுக்கு வந்து மொத்தத்தையும் சாப்பிட்டார்கள். அனைவரும் அமைதியாக சாப்பிட்டனர் பாவம். ஆனால் நிஜமாக அது சுவையாக இருந்ததா என்ற சந்தேகம் இருக்கிறது. நீங்கள் தான் அவர்களிடம் கேட்டுச் சொல்ல வேண்டும்.
தமிழில் டப்பிங் செய்தது எப்படி இருந்தது?
வசனமாகக் கொடுத்தால் நன்றாக தமிழ் பேசிவிடுவேன். ஆனால் சாதரணமாகப் பேசும்போது நான் சிந்திக்கும் ஆங்கிலத்தை ஒவ்வொரு வார்த்தையாகத் தமிழில் மொழிபெயர்த்துப் பேசத் தாமதமாகிவிடும். இப்போது பேசும் மொழி தெலுங்கு என்பதால் நிறைய வார்த்தைகள் தெலுங்கு வேறு வருகிறது. ஆனால் டப்பிங் செய்யும்போது ஸ்ரீகார்த்திக்கே ஆச்சரியப்பட்டுப் போனார். முதலில் தமிழில் தான் பேசுவேன். தெலுங்கை விட அது சுலபமாக இருந்தது.
படப்பிடிப்பு அனுபவம் குறித்து..?
ஸ்ரீகார்த்திக் குழுவினர் மிகச் சரியான ஒருங்கிணைப்போடு, திட்டமிடுதலோடு இருந்தனர். ஒவ்வொரு சின்ன விஷயத்தையும் சரியாக வைத்திருந்தனர். அதனால் நடிகர்கள் எங்களுக்கு மிகச் சுலபமாக இருந்தது. இப்படி ஒரு தொழில் முறை நேர்த்தியைப் பாராட்டியாக வேண்டும். இந்த நேர்த்தியால் தான் ட்ரீம் வாரியர் இவர்களுக்கு வாய்ப்பு தந்திருக்கிறது என்று நினைக்கிறேன். தயாரிப்பாளர் பிரபு தினமும் படப்பிடிப்புக்கு வருவார். எந்த வித பதட்டமும் காட்டமாட்டார். அன்று அவரது படங்களின் வெளியீடு இருந்தால் கூட அமைதியாகவே இருப்பார். 7 படங்கள் படப்பிடிப்பில் உள்ளன, 2 வெளியாக உள்ளது என எல்லாவற்றையும் எந்த பரபரப்பும் இல்லாமல் பேசுவார்.