“இது பெரியார் மண் என்பதை மீண்டும் நிரூபிப்போம்!” –ஆளூர் ஷா நவாஸ்
இந்துத்துவ பாசிஸவெறி காவிக்கூட்டம் சமீபத்தில் கோவையில் நடத்திய அட்டூழியத்தை எதிர்த்து, முற்போக்கு ஜனநாயக சக்திகளை ஒருங்கிணைத்து சென்னை வள்ளுவர் கோட்டத்தில் மக்கள் அதிகாரம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநில துணை பொதுச்செயலாளர் ஆளூர் ஷா நவாஸ் இதில் கலந்துகொண்டு பேசியதாவது:
இது பெரியார் மண் என்ற முழக்கத்தோடு நாம் இங்கு களத்தில் நிற்கிறோம். இந்தியாவில் வடமாநிலங்களை முழுவதும் சூறையாடிவிட்டு தமிழ்நாட்டை எப்படியாவது பதம் பாத்துவிட வேண்டுமென்று ஆர்.எஸ்.எஸ் கும்பல், இன்று நேற்று அல்ல, கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலாக – அரை நூற்றாண்டுக்கும் மேலாக – முயன்று கொண்டிருக்கிறது. அந்த முயற்சி இன்னும் முயற்சியாகவே இருப்பதில் தான் இது பெரியார் மண் என்பதை நிரூபித்திருக்கிறோம்.
அவர்கள் எந்தளவிற்கு எரிச்சலடைந்திருக்கிறார்கள் என்பதற்கு சாட்சி தான் நான்கு நாட்களுக்கு முன்னால் ஹெச். ராஜா நடத்திய கூத்துகள். இந்த தலைநகர் சென்னையில் அவர் ஒரு போராட்டம் என்கிற வடிவத்தில் அதாவது அறவழி என்கிற வடிவத்தில் ஒரு அராஜக வடிவத்தை அவர் கையில் எடுத்தார். அன்றைக்கு அவர் ஊடகங்களில் பேசும்போது அவருடைய உடல் மொழியை நீங்கள் பார்த்திருப்பீர்கள். எப்படியாவது ஒரு முஸ்லிம் கையில் கிடைக்க மாட்டானா…. அவனை கடித்து குதறியிருக்க மாட்டோமா என்ற வெறி அவரிடம் இருந்தது. அன்று போராட்டத்திற்கு அனுமதி இல்லை. ஆனாலும் அவர்கள் எழும்பூரில் கூடினார்கள்.
அதேநேரத்தில் இங்கு வள்ளுவர் கோட்டத்தில் ஒரு முஸ்லிம் அமைப்பு ஒரு போராட்டத்தை நடத்தி கொண்டிருந்தார்கள். அவர்கள் எதற்காக போராட்டத்தை நடத்திக்கொண்டிருந்தார்கள் என்றால் முஸ்லிம்களுக்காக, முஸ்லிம்களின் நலன்களுக்காக. முஸ்லிம் செல்வந்தர்கள் அந்த சமூகத்திற்கு எழுதி வைத்து போயிருக்கிற சொத்துக்களை வக்ஃபு வாரியம் நிர்வகித்து கொண்டிருக்கிறது. அந்த சொத்துக்கள் பல பெருமுதலாளிகளின் கைகளில் சிக்கியிருக்கிறது. ஒடுக்கப்பட்ட அடித்தட்டு முஸ்லிம்களின் கையில் இல்லை. அதை ஆக்கிரமித்து கொண்டிருப்பவர்கள் பெரும் முதலாளிகள் அந்த முதலாளிகளை எதிர்த்து போராட்டம் நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.
ஆனால் ஹெச். ராஜா அதை எப்படி சொல்கிறார் என்றால் “சசிகுமாரை கொன்றவர்களுக்கு ஆதரவாக போராட்டம் நடத்துபவர்களுக்கு அனுமதி கொடுத்திருக்கிறது. சசிகுமாரை கொன்றதை எதிர்த்து போராட்டம் நடத்துபவர்களுக்கு அனுமதி இல்லையா?” என்று கேட்கிறார். எவ்வளவு பெரிய மோசடி.
அவர்களை கைது செய்து வேப்பேரி மண்டபத்தில் வைக்கிறார்கள் அந்த வழியாக ஒரு முஸ்லிம் இளைஞர் போகிறார். அந்த பக்கம் மார்வாடியிடம் கொடுக்கல்-வாங்கல் காசுக்காக போயிருக்கிறார். கூலி வேலை செய்யக்கூடியவர். அந்த ஏழை முஸ்லிமை பிடித்து “இவன் இங்கே வெடிகுண்டு வீச வந்திருக்கிறான்” என்று சொல்லி காவல்துறையிடம் அடித்து ஒப்படைத்திருக்கிறார்கள். தமிழிசை, ஹெச். ராஜா இவர்களெல்லாம் “இவன் மீது வழக்கு போடு இவர் இங்கே குண்டு போட தான் வந்திருக்கிறான் வழக்கு போடு” என்று நிர்ப்பந்தம் கொடுத்திருக்கிறார்கள்.
எப்படியாவது ஒரு முஸ்லிமை வம்புக்கு இழுக்க வேண்டும். அல்லது இவர்கள் செய்யும் அத்தனை அராஜகங்களுக்கும் முஸ்லிம் தளத்திலிருந்து ஒரு எதிர்வினை வர வேண்டும் என்று விரும்புகிறார்கள்.
கோவையில் அவர்கள் 1997-ல் ஒரு திட்டமிட்டு ஒரு வன்முறையை நடத்தினார்கள். எதற்கென்றால் முஸ்லிம்களிடமிருந்து எதிர்வினை வர வேண்டும் என்று திட்டமிட்டு நடத்தினார்கள். அதற்கேற்ப முஸ்லிம்களிடமிருந்தும் எதிர்வினை வந்தது. அவர்கள் நினைத்தது நடந்தது. இந்த முறையும் அதற்கு தான் அவர்கள் திட்டமிட்டார்கள் ஆனால் ஒரு மாற்றம் என்னவென்றால் முஸ்லிம் அமைப்புகள் போராட்டம் என்ற அளவிற்கு கூட எதிர்வினையாற்ற வரவில்லை. வந்தது முழுக்க ஜனநாயக சக்திகள். வந்திருப்பது முழுக்க இடதுசாரி, பெரியாரிய சக்திகள். இங்கே தான் அவர்கள் திகைத்து போயிருக்கிறார்கள். 1997-ல் கூட ஹெச். ராஜாவின் உடல்மொழி இவ்வளவு வன்மமாக மாறவில்லை. இப்போது உச்சபட்சமாக வெறிபிடிக்கிறது என்றால் எதிர்வினை எங்கிருந்து வருகிறது என்பதை பார்த்து தான். முஸ்லிம்களிடம் இருந்து எதிர்வினை வர வேண்டும் என எதிரபார்க்கிறார்கள் ஆனால் ஜனநாயக சக்திகளிடமிருந்து எதிர்வினை வந்ததை பார்த்து தான் அவர்கள் உண்மையில் அச்சம் அடைகிறார்கள். ஆக நாம் இங்க தான் அவர்களின் அரசியலை புரிந்துகொள்ள வேண்டும்.
கண்ணையா குமார் மீது ஏன் கோபம்? ரோகித் வெமுலா மீது ஏன் கோபம்? பெரியார் மீது ஏன் கோபம்? என்று சொன்னால் இவர்கள் அவர்கள் சொல்லும் அத்தனை அவதூறுகளுக்கும் பதில் சொல்வதற்காக வருகிறார்கள். அம்பலப்படுத்த கூடியவர்களாக வருகிறார்கள். அந்த இடத்தில் ஒரு தவ்ஹித் ஜமாத் வர வேண்டும், அந்த இடத்தில் ஒரு முஸ்லிம் முன்னேற்ற கழகம் வர வேண்டும் என்று அவர்கள் விரும்புகிறார்கள். ஆனால் அந்த இடத்தில் ஒரு மக்கள் அதிகாரம் வருகிறது, அந்த இடத்தில் ஒரு விடுதலைச் சிறுத்தை வருகிறது. அந்த இடத்தில் ஒரு திராவிடர் கழகம் வருகிறது. அந்த இடத்தில் இடதுசாரி கட்சிகள் வருகிறார்கள். இப்படி அம்பேத்கரிஸ்ட்கள் வருகிறார்களே என்று தான் அவர்களுக்கு கோபம் வருகிறது. ஆக, அதை நாம் வலுப்படுத்த வேண்டும்.
அடிப்படையில் இந்த மதவாத சக்திகளை வீழ்த்த நாம் ஒன்றுபட வேண்டிய அவசியத்தில் இருக்கிறோம். அவர்கள் நூற்றுக்கணக்கான அமைப்புகளாக திரண்டிருக்கிறார்கள். ஆனால் கருத்தளவில் ஒரே நோக்கத்தோடு இணைந்திருக்கிறார்கள். இந்து முன்னணியும் இந்து மக்கள் கட்சியும் வெவ்வேறு அமைப்புகள். விஷ்வ இந்து பரிஷத், ஆர்.எஸ்.எஸ் வேறு வேறு அமைப்புகள். ஆனால் அவர்கள் நோக்கம் ஒன்றுதான். இந்து ராஷ்டிரம், முஸ்லிம்கள் அந்நியர்கள், கிறிஸ்துவர்கள் எதிரிகள், இங்குள்ள கம்யூனிஸ்ட்கள் அனைவரும் இந்து மத விரோதிகள். இப்படிப்பட்ட சிந்தனையில் தெளிவாக இருக்கிறார்கள்.
நமக்கு சிந்தனை ஒன்றாக இருக்கிறது. ஆனால் நாம் அமைப்புகளாக சிதறி சிதறி நாம் வலிமையற்று போய் கிடக்கிறோம். இதுதான் பிரச்சனை. ஆக, ஒன்று கூடல் இன்று அவசியம். எல்லோரும் ஒரு இயக்கத்தின் கீழ் அணி திரள்வது சாத்தியமில்லை. எல்லோரும் வெவ்வேறு அமைப்புகளில் இருக்கிறோம் ஆனால் நமக்கு கருத்தியல் ஒன்று தான். பார்ப்பனியத்தை வீழ்த்தும் கருத்தியல். எல்லோருக்கும் சமூக நீதி வழங்க வேண்டும் என்ற கருத்தியல். சமத்துவம் இந்த மண்ணில் பிறக்க வேண்டும் என்ற கருத்தியல். எனவே அந்த கருத்தியலில் நாம் ஒன்றுபட்டு நிற்க வேண்டும்.
இந்து முன்னணியாளர்கள் கொலை செய்யப்பட்டிருக்கிறார்கள். அவர்கள் தேசத்திற்காக போராடி கொலை செய்யப்படவில்லை. இந்துக்களும் முஸ்லிம்களும் எங்கேயும் கலந்துவிடக் கூடாது என்று துடிக்கிறார்கள். இந்துக்களும் முஸ்லிம்களும் கலக்கும் இடங்களை குறி வைத்து அடிப்பது என்பது அவர்கள் செயல் திட்டம். இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் ஒரு சம்ஜோதா எக்ஸ்பிரஸ் ஓடிகிறது. அதில் இவர்கள் குண்டு வைத்தார்கள். அஜ்மீர் தர்காவில் குண்டு வைத்தார்கள் அதிலும் முஸ்லிம்கள் தான் கைது செய்யப்பட்டார்கள் வழக்கம் போல. எப்படியோ ஆர்.எஸ்.எஸ் தான் காரணம் என்பதை கண்டுபிடித்து விட்டார்கள். அங்கு ஏன் குண்டு வைக்கிறார்கள். அது இந்துக்களும் முஸ்லிம்களும் கலக்கும் இடம். மத அடையாள சின்னமாக இருந்தாலும் பெருமளவில் வெகுமக்கள் போகிறார்கள், அது அவர்களுக்கு உறுத்துகிறது. அது அவர்களுடைய செயல்திட்டம்.
கோவையிலும் அமைதி நிலவுகிறது. கோவையில் வியாபாரம் செய்ய கூடிய வணிக பெருமக்கள் இந்த அரசியலை புரிந்து கொண்டு ஒற்றுமையாக செயல்பட தொடங்கிவிட்டார்கள் என்பதனால் தான் அவர்கள் இன்று இந்துக்களையும் அடிக்க தொடங்கிவிட்டார்கள். பெஸ்ட் பேக்கரி தாக்கப்பட்டதை நாம் பார்த்திருக்கிறோம் குஜராத்தில், அது ஒரு முஸ்லிம்க்கு சொந்தமானது. இங்கு ஒரு பேக்கரி தாக்கப்பட்டிருக்கிறது அது இந்துவுக்கு சொந்தமானது. திருச்சியில் ஒரு 10 ஆண்டுக்கு முன்னால் பிரவீன் தொக்காடியா சொன்னாரே “இந்த முனை முஸ்லிம்களுக்கு, இந்த முனை கிறிஸ்வர்களுக்கு, இந்த முனை மதச்சார்பின்மை பேசும் இந்துகளுக்கு” என்று. ஆக இந்து பேக்கரி தாக்கப்பட்டிருக்கிறது.
அவர்கள் இந்துக்களுக்கு எதிரானவர்கள், இடஒதுக்கீட்டுக்கு ஆதரவாக போராடுவது யார்? முற்போக்காளர்கள். இதில் பலனடைய போகிறவர்கள் யார்? பெரும்பான்மை பிற்படுத்தப்பட்ட இந்துக்கள். அந்த இடஒதுக்கீட்டிற்கு எதிராக செயல்படுபவர்கள் யார்? இந்த இந்துத்துவ அல்லது இந்துக்களின் நலனுக்காக போராடுகிறோம் என்கிற இந்த பாசிச சக்திகள். என்வே இவர்களை அம்பலப்படுத்த வேண்டும்.
அவர்கள் பல இடங்களில் இருக்கிறார்கள். அது காவல் துறையாக இருந்தாலும், அது ஊடகமாக இருந்தாலும், அது இராணுவமாக இருந்தாலும் அது நீதித்துறையாக இருந்தாலும் எல்லா இடத்திலும் ஆர்.எஸ்.எஸ் சக்திகள் ஊடுருவியிருக்கிறார்கள். காவல்துறை கோவையில் அப்பட்டமாக தன்னுடைய முகத்தை வெளிக்காட்டியிருக்கிறது. மிக மிக வெளிப்படையாக வெளிக்காட்டியிருக்கிறது. ஒரு கும்பல் கூடுகிறது. கும்பல் என்றால் 100 பேர் 200 பேர் அல்ல 2000, 3000 பேர்களை கொண்ட கும்பல் கூடுகிறது. ஒரு படுகொலையை வைத்து வன்முறையை நிகழ்த்த திட்டமிட்டிருக்கிறார்கள். இந்த உண்மையை கண்டுபிடிக்க முடியாதா?
தர்மபுரியில் அட்டூழியம் நடத்தினார்கள். ஆறு மணி நேரம். திட்டமிட்டு கிராமம் கிராரமாக திரட்டி வந்து வண்டி கட்டி வந்து அடித்து நொறுக்கினார்கள். கொளுத்தினார்கள். வேடிக்கை பார்த்தது காவல்துறை.
பரமக்குடியில் வெறும் சாலைமறியலில் ஈடுபட்டதற்காக 7 பேரை சுட்டுக் கொன்றது காவல்துறை. அங்கு கூடியவர்கள் ஒரு கல்லை கூட வீசவில்லை. ஒரு கூட்டமாக திரண்ட காரணத்திற்காக அவர்கள் கொல்லப்பட்டார்கள்.
ஆனால், கோவையில் ஒரு கும்பல் கலவரம் நடத்திக் கொண்டிருக்கும்போது ஏன் உங்கள் துப்பாக்கிகள் வேலை செய்யவில்லை?
நீதிமன்றங்களும் இப்படி தான் நடந்து கொண்டிருக்கின்றன. ராம்குமார் வழக்கில் என்ன நடக்கிறது என்று பார்க்கிறோம். எந்தவித அடிப்படையும் இல்லாமல் சட்டத்தை மீறி நடந்து கொள்கிறார்கள். ஒடுக்கப்பட்ட மக்கள், உழைக்கும் மக்கள் விசயமென்றால் இப்படி மேலாக வெளிக்காட்டுகிறது. இங்கே தான் நாம் மக்கள் அதிகாரம் என்ற முழக்கத்தை வைத்திருக்கிறோம். அதிகாரம் ஆதிக்க சக்திகள் கையில் இருக்கிறது. அந்த அதிகாரம் கைமாறி உழைக்கும் மக்கள் கையில் வரும்போது தான் நிலை மாறும். அதை நோக்கி இந்த மக்களை அணிதிரட்ட வேண்டிய பணி நம்மிடமிருக்கிறது. கடமையிருக்கிறது. எனவே இதை நாம் எடுத்து சொல்ல வேண்டும்.
கோவையில் அந்த வன்முறை நடந்த உடனே ஜனநாயக சக்திகள் பெருமளவில் திரண்டு ஒரு எச்சரிக்கை விடுத்திருக்கிறார்கள். அது கோவையோடு சுருங்கிவிடக் கூடாது. ஆர்.எஸ்.எஸ்-ன் செயல் திட்டம் கோவையோடு சுருங்கி போவதல்ல. தமிழ்நாடு முழுவதும் பரப்ப கூடிய வகையில் வைத்துக் கொண்டிருக்கும் ஒரு செயல்திட்டம். அதை முறியடிக்க வேண்டிய பொறுப்பு நமக்கு இருக்கிறது.
இது பெரியார் மண் தான் என்பதை மீண்டும் மீண்டும் நாம் களத்தில் நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். இந்த போராட்டம் காலத்தின் தேவை. ஜனநாயக சக்திகள் சேர்ந்திருப்பது மகிழ்ச்சியை தருகிறது.
இவ்வாறு ஆளூர் ஷா நவாஸ் பேசினார்.