அலங்கு – விமர்சனம்
நடிப்பு: குணாநிதி, காளி வெங்கட், செம்பன் வினோத், சரத் அப்பானி, சவுந்தர்ராஜா, ஸ்ரீரேகா, சண்முகம் முத்துசாமி, ரெஜின் ரோஸ், இதயக்குமார், அஜய், கொற்றவை, தீக்ஷா, மஞ்சுநாதன், ஆவுடை நாயகம், அப்புனி சசி மற்றும் பலர்
இயக்கம்: எஸ்.பி.சக்திவேல்
ஒளிப்பதிவு: பாண்டிக்குமார்
படத்தொகுப்பு: சான் லோகேஷ்
இசை: அஜீஸ்
தயாரிப்பு: டிஜி பிலிம் கம்பெனி, மேக்னஸ் புரொடக்ஷன்ஸ்
தயாரிப்பாளர்கள்: சபரிஷ், சங்கமித்ரா சௌமியா அன்புமணி
வெளியீடு: ‘சக்தி பிலிம் ஃபேக்டரி’ பி.சக்திவேலன்
பத்திரிகை தொடர்பு: இரா.குமரேசன்
ஆதிமனிதன் வேட்டையாடி வாழ்ந்த காலத்திலேயே அவனுக்கும், நாய்க்கும் இடையே பிணைப்பு தோன்றிவிட்டதாக ஆதாரங்களுடன் கூறுகிறது மானிடவியல். இப்படி பல்லாயிரம் ஆண்டுகளாகத் தொடர்ந்து வரும் மனிதன் – நாய் உறவில் சமீபகாலமாக விரிசல் ஏற்பட்டு, மோதல்கள் அதிகரித்து வருகின்றன. இந்நிலையில், நாய்க்கும் அதை வெறுப்போருக்கும் இடையிலான பகை, நாயை நேசிப்போருக்கும் நாயை வெறுப்போருக்கும் இடையிலான பகையாக விஸ்வரூபம் எடுத்தால் என்ன ஆகும் என்பதே ‘அலங்கு’ திரைப்படத்தின் ஒருவரிக் கதை.
மாமன்னன் ராஜராஜ சோழன் காலத்தில் போருக்கு பயன்படுத்தப்பட்ட நாயினத்தின் பெயர் ‘அலங்கு’ என்பதால், நாயை மையமாகக் கொண்ட இந்த படத்துக்கு அதையே தலைப்பாக வைத்திருக்கிறார்கள். இக்கதை கோவை மாவட்டம் ஆனைக்கட்டி பகுதியிலும், கேரள மாநிலம் அகழி பகுதியிலும் நடப்பதாக கட்டமைக்கப்பட்டுள்ளது.
கோவை மாவட்டம் ஆனைக்கட்டி மலைப்பகுதியில், கணவனை இழந்த தனது தாய் தங்கம் (ஸ்ரீரேகா) மற்றும் தங்கையுடன் வசித்து வருகிறார் நாயகனும், மலைவாழ் பழங்குடி இனத்தைச் சேர்ந்த இளைஞருமான தர்மன் (குணாநிதி). அவரை தாய் தங்கம் வட்டிக்குக் கடன் வாங்கி பாலிடெக்னிக்கில் டிப்ளமோ படிக்க வைக்கிறார். இறுதியாண்டு படிக்கும்போது, விடுதி உணவில் புழு இருந்ததாக தர்மன் பிரச்சனை செய்ய, அவரை இடைநீக்கம் செய்கிறது பாலிடெக்னிக் நிர்வாகம்.
இதனையடுத்து, சொந்த ஊரில் தன் பால்ய சினேகிதர்களான கருப்பு (இதயகுமார்), சிலுவை (அஜய்) ஆகியோரோடு, ஒரு பணக்காரனிடம் வேலைக்குச் சேருகிறார் தர்மன். ஒருநாள் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த பெண் நாய் ஒன்றை குழி தோண்டி புதைத்து வருமாறு கட்டளையிடுகிறான் அந்த பணக்காரன். வாயில்லா ஜீவனான அந்த நாயை உயிரோடு புதைக்க மனமின்றி, காப்பாற்றி, தனது பாட்டியின் ஞாபகார்த்தமாக அதற்கு ‘காளி’ என்று பெயர் சூட்டி, தர்மன் பிரியமாக வளர்த்து வருகிறார். காளியும் அவரை விட்டுப் பிரியாமல், அவரது வீட்டில் தங்கி, அன்பாகப் பழகி வருகிறது.
இந்நிலையில், கடனைத் திருப்பித் தருமாறு வட்டிக்காரன் மிரட்ட, அக்கடனை அடைப்பதற்காக, தனது தாய்மாமா மலையன் (காளிவெங்கட்) ஏற்பாட்டின் பேரில், ரப்பர் தோட்ட கூலி வேலைக்காக கேரள மாநிலம் அகழிக்குச் செல்கிறார் தர்மன். அவருடன் சினேகிதர்கள் கருப்பு, சிலுவை ஆகியோரும் செல்ல, காளியும் உடன் செல்கிறது.
தர்மன் மற்றும் அவரது சினேகிதர்கள் வேலை பார்க்கும் ரப்பர் தோட்டத்தின் முதலாளியாக இருப்பவர் அகஸ்டியன் (செம்பன் வினோத்). அவர் அகழி நகராட்சித் தலைவராகவும் இருக்கிறார். அவரது மனைவி மலர் (கொற்றவை). குழந்தை பாக்கியம் இல்லாமல் தவித்த இத்தம்பதியருக்கு பல ஆண்டுகளுக்குப் பின் பிறந்த பெண் குழந்தை தான் ஏஞ்சல் (தீக்ஷா). வாராது வந்த மாமணி போல் வந்துள்ள சிறுமி ஏஞ்சல் மீது அளவு கடந்த பாசம் வைத்திருக்கிறார் அகஸ்டியன்.
ஏஞ்சலின் பிறந்தநாள் கொண்டாட்டத்தின்போது அவளை திடீரென்று நாய் ஒன்று கடித்துவிடுகிறது. உடனே சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கிறார்கள். பக்கத்து வார்டில், நாய்க்கடி பட்ட ஒரு சிறுவன் நாய் போல் குரைத்துக்கொண்டிருப்பதைப் பார்த்து துணுக்குறுகிறார் அகஸ்டியன். நாய்க்கடி பட்ட சிலர் அபூர்வமாக இப்படி குரைப்பார்கள் என்றும், உங்கள் மகள் இதுபோல் ஆகிவிடாமலிருக்க நாய்களின் சத்தமே அவளுக்கு கேட்கக் கூடாது என்றும் கூறுகிறார் மருத்துவர்.
இதனால் சஞ்சலம் அடையும் அகஸ்டியன், தனது வலது கரம் போல் செயல்படும் பிலிப்பை (சரத் அப்பானி) அழைத்து, நகரில் எங்குமே நாய் இருக்கக் கூடாது என கட்டளையிடுகிறார். உடனே பிலிப்பும் அவரது அடியாட்களும் கண்ணில் பட்ட நாய்களை எல்லாம் துரத்தித் துரத்தி வெட்டி கொல்லுகிறார்கள். நாய்களைக் கொன்று அவற்றின் தலைகளைக் கொண்டு வந்தால் ஒரு தலைக்கு 2ஆயிரம் ரூபாய் வீதம் அன்பளிப்பு வழங்குகிறார் பிலிப்.
இப்படியான நாயின அழிப்பு விவகாரத்தில், தர்மனின் செல்ல நாயான காளியும் பிலிப்பின் அடியாட்களிடம் மாட்டிக் கொள்கிறது. அதை கொல்வதற்காக வேனில் ஏற்றிக் கொண்டு போகிறார்கள். இதை பார்த்து பதறும் தர்மன் தன் சினேகிதர்களோடு சேர்ந்து காளியை மீட்க வேனை விரட்டிச் சென்று போராடுகிறார். இரு தரப்புக்கும் இடையே மிகப் பெரிய மோதல் வெடிக்கிறது. இந்த மோதலின்போது பிலிப்பின் கையை துண்டாக வெட்டி விடுகிறார் தர்மன்.
காளியை மீட்டுக்கொண்டு தர்மனும் அவரது சினேகிதர்களும் தப்பி ஓடுகிறார்கள். அவர்களைப் போட்டுத் தள்ள பிலிப்பின் அடியாட்கள் கொலை வெறியுடன் துரத்துகிறார்கள்.
தர்மனும், அவரது சினேகிதர்களும் பிலிப்பின் அடியாட்களிடமிருந்து தப்பித்தார்களா, இல்லையா? இந்த களேபரத்தில் காளி என்ன ஆனது? என்பன போன்ற கேள்விகளுக்கு சுவாரஸ்யமாகவும், விறுவிறுப்பாகவும் விடை அளிக்கிறது அலங்கு’ திரைப்படத்தின் மீதிக்கதை.
‘செல்ஃபி’ என்ற திரைப்படத்தில் இணை நாயகனாக அறிமுகமான குணாநிதி இப்படத்தில் நாயகனாக உயர்வு பெற்று, தர்மன் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். முதல் பட நாயகன் போல் இல்லாமல் பல படங்களில் நாயகனாக நடித்து அனுபவம் பெற்றவர் போல் கதைக்கும் கதாபாத்திரத்துக்கும் என்ன தேவையோ அதை சரியாக, அளவாகக் கொடுத்து ஜொலித்திருக்கிறார். நாய் மீது பாசம் காட்டுவது, அதற்கொரு தீங்கு என்றால் ஆக்ரோஷம் கொள்வது, தாய் மற்றும் தங்கை மீதான அன்பை வெளிப்படுத்துவது என காட்சிக்குக் காட்சி இயல்பான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். குணாநிதி தமிழ் சினிமாவில் நிச்சயம் ஒரு ரவுண்டு வருவார் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.
குணாநிதிக்கு அடுத்தபடியாக சிறப்பாக நடித்திருப்பது ’காளி’ என்ற நாய். நாயகனைப் பின்தொடர்வதிலும் நன்றியுணர்ச்சியை வெளிப்படுத்துவதிலும் சளைக்காத அது, பார்வையாளர்களின் பரிவையும் பச்சாதாபத்தையும் ஒருங்கே அள்ளுகிறது.
மலையாள உலகில் மிகப்பெரும் நட்சத்திரமாகத் திகழும் செம்பன் வினோத், இதில் அகஸ்டியன் என்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். தனது கண் அசைவு மற்றும் பார்வை மூலமே அபார நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்.
இந்த படத்தில் மிகவும் ஆச்சர்யப்பட வைத்தவர் நாயகனின் தாய் தங்கமாக வரும் நடிகை ஸ்ரீரேகா தான். மிரட்டலான லுக், ஆக்ரோஷமான வசனம், எதற்கும் துணிவு, வேகம் என தங்கம் கேரக்டருக்கு அருமையாக உயிர் கொடுத்து, அனைவரையும் மிரள வைத்திருக்கிறார்.
நாயகனின் தாய்மாமா மலையனாக வரும் காளிவெங்கட், சினேகிதர்கள் கருப்பு, சிலுவையாக வரும் இதயகுமார், அஜய், அகஸ்டியனின் வலது கரமாக பிலிப் என்ற கதாபாத்திரத்தில் வரும் சரத் அப்பானி, அகஸ்டியனின் மனைவி மலராக வரும் கொற்றவை, மகளாக வரும் பேபி தீக்ஷா உள்ளிட்ட ஏனைய நடிப்புக் கலைஞர்களும் தத்தமது கதாபாத்திரத்துக்குத் தேவையான நடிப்பை நிறைவாக வழங்கியிருக்கிறார்கள்.
வாயில்லா ஜீவன்கள் மீதும் அன்பு செலுத்த வேண்டும், எக்காரணம் கொண்டும் அவற்றை வெறுக்கக் கூடாது என்பதை சொற்பொழிவாக இல்லாமல் முழுநீள திரைப்படமாக காட்சிப்படுத்தியிருக்கிறார் இயக்குநர் எஸ்.பி.சக்திவேல். நாய்க்கும் வெள்ளை உள்ளம் கொண்ட மனிதர்களுக்கும் இடையிலான பாசத்தை நேர்த்தியாக சொல்லியிருக்கிறார். இதுவரை நாய்களை ஜீவராசியாகவே கருதாமல் ஒதுங்கிச் செல்பவர்கள் கூட இப்படத்தைப் பார்த்தால், அவர்களும் நாய்களை நேசிக்கத் தொடங்கிவிடுவார்கள் என்னும் அளவுக்கு கருணை சுரக்கும் மனதுடன் காட்சிகளை நகர்த்திச் சென்றிருக்கும் இயக்குநருக்கு பாராட்டுகள்.
ஆனைக்கட்டி மற்றும் கேரள பகுதிகளை மிகவும் அழகாகவும் காட்சிகளுக்கு உயிரோட்டம் கொடுக்கும்படியாகவும் ஒளிப்பதிவு செய்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் பாண்டிக்குமார்.
அஜீஸின் பாடலிசை மற்றும் பின்னணி இசை படத்திற்கு பலம்.
’அலங்கு’ – அனைத்துத் தரப்பினரும் குடும்பத்துடன் பார்த்து ரசிக்கலாம்!