‘தில்வாலே’ படமாக்கப்பட்ட ஹாலிவுட் ஸ்டூடியோவில் ‘அஜித் 57’ படப்பிடிப்பு!

ஐரோப்பாவுக்கு சில நாட்களுக்குமுன் புறப்பட்டுச் சென்ற நடிகர் அஜித்குமார், பல்கேரியாவில் திங்கட்கிழமை தொடங்க இருக்கும் தனது 57-வது படத்தின் படப்பிடிப்பில் விரைவில் கலந்துகொள்ள இருக்கிறார்.
பல்கேரியாவில் உள்ள பிரபல ‘நு பாயனா பிலிம் ஸ்டூடியோ’வில், இப்படத்தின் பாடல் மற்றும் சண்டைக் காட்சிகள் உள்ளிட்ட பல காட்சிகள், 40 நாட்கள் படமாக்கப்பட இருக்கின்றன. ஹாலிவுட் வசதிகளுடன் கூடிய இந்த ஸ்டூடியோவில் தான் ‘எக்ஸ்பெண்டபிள்ஸ் 3’, ‘300: ரெய்ஸ் ஆஃப் ஆன் எம்பையர்’, ‘லண்டன் ஹேஸ் ஃபாலன்’ போன்ற பிரபல ஹாலிவுட் படங்கள் படமாக்கப்பட்டன.
ஷாருக்கான் – கஜோல் நடித்த ‘தில்வாலே’ இந்திப்படம் தான் இந்த ஸ்டூடியோவில் படமாக்கப்பட்ட ஒரே இந்திய திரைப்படம் ஆகும். அந்த வகையில், பிரபல ‘நு பாயனா பிலிம் ஸ்டூடியோ’வில் படமாக்கப்படும் முதல் தமிழ்ப்படம், இரண்டாவது இநதியப் படம் என்ற பெருமையை அஜித்குமாரின் 57-வது படம் பெறுகிறது.
சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிக்கும் இப்படத்தில் கதாநாயகிகளாக காஜல் அகர்வால், அக்ஷராஹாசன், முக்கிய கதாபாத்திரங்களில் தம்பி ராமய்யா, கருணாகரன் ஆகியோர் நடிக்கிறார்கள். சர்வதேச குற்றம் தொடர்பான இந்த திகில் படத்தை சிறுத்தை சிவா இயக்குகிறார். அனிரூத் இசையமைக்கிறார்