“நேரடியாகவோ, மறைமுகமாகவோ அரசியலில் ஈடுபடும் எண்ணம் எனக்கு இல்லை”: அஜித் அதிரடி விளக்கம்!
![](http://www.heronewsonline.com/wp-content/uploads/2019/01/0a1a-31.jpg)
சமீபத்தில் திருப்பூரில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் “மாற்றுக் கட்சியினர் பாஜக.வில் இணையும் விழா” நடைபெற்றது. இவ்விழாவில் சிலர் தங்களை “அஜித் ரசிகர்கள்” என்று கூறிக்கொண்டு பாஜக.வில் இணைந்தனர்.
அப்போது பேசிய தமிழக பாஜக தலைவர் தமிழிசை, “திரைப்பட கலைஞர்களிடையே நேர்மையானவர் அஜித். அவர், தான் சம்பாதித்த பணத்தை மக்களுக்காக செலவு செய்ய நினைப்பவர். அவரைப் போலவே அஜித்தின் ரசிகர்களும் நல்லவர்கள். அதனால் தான் பாரதிய ஜனதா கட்சியில் இணைந்துள்ளனர்” என்றார். “இனி மோடியின் திட்டங்களை மக்களிடையே கொண்டு செல்ல வேண்டும்” என்று கட்சியில் இணைந்த அஜித் ரசிகர்களிடம் கோரிக்கை வைத்த அவர், “அஜித் ரசிகர்கள் மோடியின் தொண்டர்களாக மாறி தமிழகத்தில் தாமரையை மலரச் செய்ய வேண்டும்” என்றார்.
“அஜித் ரசிகர்கள்” என்ற பெயரில் சிலர் பாஜக.வில் இணைந்தது, அப்போது தமிழிசை பேசிய பேச்சு ஆகியவை சமூக வலைத்தளங்களில் வைரலானது. இதனால் ‘அஜித்தும் பாஜக.வை ஆதரிக்கும் நிலைப்பாட்டில் உள்ளாரா’ என்று அரசியல் விமர்சகர்கள் விவாதிக்கத் தொடங்கினர். தொடங்கினர். இதனையடுத்து அஜித் தற்போது அதிரடி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், நேரடியாகவோ, மறைமுகமாகவோ அரசியலில் ஈடுபடும் எண்ணம் தனக்கு இல்லை என்பதை தெளிவுபடுத்தியிருக்கிறார். மேலும், “அரசியலில் எனக்கும் தனிப்பட்ட விருப்பு வெறுப்பு உண்டு. அதை நான் யார் மீதும் திணிப்பது இல்லை. மற்றவர்கள் கருத்தை என் மேல் திணிக்க விட்டதும் இல்லை. என் ரசிகர்களிடம் இதையே தான் எதிர்பார்க்கிறேன். உங்கள் அரசியல் கருத்து உங்களுடையதாகவே இருக்கட்டும். என் பெயரோ, என் புகைப்படமோ எந்தவொரு அரசியல் நிகழ்விலும் இடம் பெறுவதை நான் சற்றும் விரும்பவில்லை.
என்னுடைய இந்த முடிவுக்குப் பிறகுகூட சில அரசியல் நிகழ்வுகளுடன் என் பெயரையோ, என் ரசிகர்களின் பெயரையோ சம்மந்தப்படுத்தி ஒரு சில செய்திகள் வந்துகொண்டு இருக்கிறது. தேர்தல் வரும் இந்த நேரத்தில் இத்தகைய செய்திகள் எனக்கு அரசியல் ஆசை வந்துவிட்டதோ என்கிற ஐயப்பாட்டை பொதுமக்களிடையே விதைக்கும். என் ரசிகர்களிடம் எனது வேண்டுகோள் என்னவென்றால் நான் உங்களிடம் எதிர்பார்ப்பது எல்லாம் மாணவர்கள் தங்களது கல்வியில் கவனம் செலுத்துவதும், தொழில் மற்றும் பணியில் உள்ளோர் தங்களது கடமையை செவ்வனே செய்வதும். சட்டம் ஒழுங்கை மதித்து நடந்துக் கொள்வதும், ஆரோக்கியத்தின் மீது கவனம் செலுத்துவதும், வேற்றுமை கலைந்து ஒற்றுமையுடன் இருப்பதும் மற்றவர்களுக்கு பரஸ்பர மரியாதை செலுத்துவதும், ஆகியவை தான். அதுவே நீங்கள் எனக்கு செய்யும் அன்பு. வாழு வாழ விடு” என்பன உள்ளிட்ட பல கருத்துகலை அஜித் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
அஜித் அறிக்கை:-