உலக மகளிர் தினம்: ஐ.நா.வில் பரத நாட்டியம் ஆடுகிறார் ஐஸ்வர்யா தனுஷ்!
நியூயார்க்கில் இருக்கும் 190 நாடுகள் அடங்கிய ஐக்கிய நாடுகள் சபையில் இந்திய தூதகரத்தின் சார்பில் பரத நாட்டியம் ஆடும் முதல் பெண் என்ற பெருமையை பெற்றுள்ளார் ஐஸ்வர்யா தனுஷ்.
ஐஸ்வர்யா கடந்த ஆண்டு ஐக்கிய நாடுகள் சபையில் நல்லெண்ண தூதராக தேர்வு செய்யப்பட்டார். வருகிற மார்ச் 8ஆம் தேதி உலக மகளிர் தினத்தை கொண்டாடும் வகையில், உலக மகளிரின் மகத்துவத்தை வர்ணிக்கும் பொருட்டும், இந்திய கலச்சாரத்தை உலகுக்கு பறைசாற்றும் வகையிலும் இவர் இந்திய நாட்டின் நடன கலைகளுள் ஒன்றான பரத நாட்டியத்தை ஐ.நா.வில் அரங்கேற்ற உள்ளார்.
இந்நடன விழா ஐ.நா.வில் இருக்கும் இந்திய தூதரகத்தால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 45 நிமிடம் முதல் 1 மணி நேரம் நடக்கும் இந்த நிகழ்ச்சியில், நாட்டிய கடவுள் நடராஜருக்கு புஷ்பாஞ்சலியில் தொடங்கி, மதுரையை ஆண்ட மீனாட்சியின் வாழ்க்கையை சொல்லி, உலக பெண்களின் மகத்துவத்தையும், வைரமுத்துவின் அவசர தாலாட்டு என்ற பாடலில் இன்றைய நாளில் பணிக்கு செல்லும் தாய்மார்களின் மேன்மையையும் தன் நாட்டியத்தின் மூலம் கூற இருக்கிறார்.
முடிவில், காஞ்சி பெரியவர் எழுதிய. மைத்ரிம் பஜத என்ற பாடலுடன் உலக சமாதானத்தை வேண்டி நிறைவு செய்கிறார். இது எம்.எஸ்.சுப்புலெட்சுமியால் ஐக்கிய நாடுகள் சபையில் முதல்முறையாக பாடப்பட்ட பாடல் என்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கு முன் எம்.எஸ் சுப்புலெட்சுமி, பண்டிட் ரவிசங்கர், அம்ஜத் கான், ஷாகிர் உசேன், ஏ.ஆர்.ரகுமான், டாக்டர் எல்சுப்பிரமணியன், சுதா ரகுநாதன் போன்றோர் மட்டுமே கலந்து கொண்ட இவ்விழாவில், நடனம் ஆடும் முதல் பெண் என்ற பெருமையுடன் பங்கு பெறுகிறார் ஐஸ்வர்யா.
இவ்விழாவிற்குப் பின் அவருக்கு அமெரிக்க தமிழ் சங்கம் ஞாயிறு அன்று விழா எடுத்து, விருது வழங்கி கௌரவிக்க உள்ளது.