ஐந்தாம் வேதம் – விமர்சனம்
நடிப்பு: சாய் தன்ஷிகா, சந்தோஷ் பிரதாப், விவேக் ராஜகோபால், ஒய்.ஜி.மகேந்திரன், கிரிஷா குரூப், ராம்ஜி, தேவதர்ஷினி, மேத்யூ வர்கீஸ், பொன்வண்ணன் மற்றும் பலர்
இயக்கம்: நாகா
ஒளிப்பதிவு: ஸ்ரீனிவாசன் தேவராஜன்
படத்தொகுப்பு: ராஜேஷ் எம்.ஆர்
இசை: ரேவா
தயாரிப்பு: அபிராமி ராமநாதன், நல்லம்மை ராமநாதன் (அபிராமி மெகா மால் பிரைவேட் லிமிட்டெட்)
ஓ.டி.டி. தளம்: ஜீ 5 ஒரிஜினல்
பத்திரிகை தொடர்பு: சதீஷ் (எய்ம்)
பண்டைய ஆரியர்கள் ரிக் வேதம், யஜுர் வேதம், சாம வேதம், அதர்வண வேதம் என்ற நான்கு வேதங்களை இயற்றி, தொகுத்து, ஓதி, வழிபாடு செய்து வந்தார்கள் என்கிறது வரலாறு. அது என்ன ஐந்தாம் வேதம்? அப்படி ஒன்று இருக்கிறதா? இருந்தால் அது எதைப் பற்றி? என்ற கேள்விகளும், விடை அறிய ஆர்வமும் பிறக்கிறதல்லவா? ”ஒட்டுமொத்த மனிதகுலத்தின் எதிர்காலத்தை மாற்றியமைக்கும் திறன் கொண்ட சக்திவாய்ந்த அறிவைக் கொண்டது ’ஐந்தம் வேதம்’ என்ற பண்டைய நூல்” என கற்பனையாகப் புனைந்து, அதை மையமாக வைத்து, ‘மர்மதேசம்’ புகழ் நாகா இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ஐந்தாம் வேதம்’ இணையத் தொடர், அக்டோபர் 25 முதல் ’ஜீ 5 ஒரிஜினல்’ ஓடிடி தளத்தில் ஸ்ட்ரீம் ஆகிறது.
பல ஆண்டுகளாகத் தன்னை பார்க்கக்கூட வராத தன் தந்தை மீது கோபமாக இருப்பவர் அனு (சாய் தன்ஷிகா). அவர் தன் தாய்க்கு திதி கொடுத்து இறுதிச் சடங்குகள் செய்வதற்காக காசிக்கு வருகிறார். வந்த காரியம் முடிந்து புறப்படும்போது, அவரிடம் ஒரு புதிரான சாமியார் வருகிறார். அந்த சாமியார் அனுவின் கையில் ஒரு மரப்பெட்டியைக் கொடுத்து, அதை தமிழ்நாட்டின் தென்கோடியில் உள்ள ‘ஐயங்கார்புரம்’ என்ற கிராமத்துக்கு எடுத்துச் சென்று, அங்குள்ள பழமையான சிவன் கோயில் அர்ச்சகரிடம் கொடுக்குமாறு கூறுகிறார். நமக்கு எதற்கு இந்த வேண்டாத வேலை? என்று அனு மறுக்க, ”இந்த மரப்பெட்டியை உன் வம்சத்தைச் சேர்ந்தவர்கள் தான் கொண்டு போய் கொடுக்க வேண்டும் என்பது விதி” என்று கூறி, அதை அனுவின் கையில் கொடுத்துவிட்டு, மறுகணமே இறந்து விடுகிறார். அனு அதிர்ச்சி அடைகிறார்.
வேறுவழியின்றி வேண்டா வெறுப்பாக அந்த மரப்பட்டியை எடுத்துக் கொண்டு தமிழ்நாட்டுக்கு வருகிறார். இங்கிருந்து ஐயங்கார்புரத்துக்குச் செல்லாமல், புதுச்சேரி செல்ல திட்டமிடுகிறார். ஆனால், அடுத்தடுத்து நடக்கும் திடீர் சம்பவங்கள் அவரை ஐயங்கார்புரத்திற்குப் போக வைத்து விடுகின்றன.
ஐயங்கார்புரத்தில் இருக்கும் பழமை வாய்ந்த சிவன் கோயிலுக்குச் சென்று, அங்குள்ள அர்ச்சகரிடம் அந்த மரப்பெட்டியைக் கொடுக்கிறார். ஆனால், அம்மரப்பெட்டி பற்றி ஏற்கெனவே அறிந்திருந்த அர்ச்சகர் அதை வாங்க மறுத்துவிடுகிறார். மரப்பெட்டியை அனு அந்த கோயிலிலேயே வைத்துவிட்டு, ஐயங்கார்புரத்தை விட்டு வெளியேற முயலுகிறார். ஆனால், அவரால் வெளியேற முடியவில்லை.
இதனிடையே, அந்த மரப்பெட்டியைக் கைப்பற்ற பலர் முயற்சி செய்கிறார்கள். எனில், அம்மரப்பெட்டியின் மர்மம் தான் என்ன? அப்பெட்டிக்கும் ’ஐந்தாம் வேதம்’ என்ற தலைப்புக்கும் என்ன தொடர்பு? அப்பெட்டியை கைப்பற்ற முயற்சிப்பவர்கள் யார்? ஏன்? அனு தனக்கு ஏற்படும் சவால்களை எப்படி எதிர்கொள்கிறார்? என்பன போன்ற கேள்விகளுக்கு எதிர்பாராத திருப்பங்களுடன் திகிலும், சுவாரஸ்யமுமாய் விடை அளிக்கிறது ‘ஐந்தாம் வேதம்’ இணையத் தொடரின் மீதிக்கதை.
நாயகி அனு கதாபாத்திரத்தில் சாய் தன்ஷிகா நடித்திருக்கிறார். எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும், திரையில் அந்த கதாபாத்திரமாகவே வாழ்ந்து காட்டும் வல்லமை கொண்ட சாய் தன்ஷிகாவுக்கு இந்த இணையத் தொடர் கதாபாத்திரம் சற்று வித்தியாசமானது, சற்று சிக்கலானது தான். என்றாலும், அதை துணிச்சலாக ஏற்று, மாடர்ன் பெண்ணாக சாமர்த்தியமாக வாழ்ந்துகாட்டி ஜமாய்த்திருக்கிறார்.
சந்தோஷ் பிரதாப், விவேக் ராஜகோபால், ஒய்.ஜி.மகேந்திரன், கிரிஷா குரூப், தேவதர்ஷினி, பொன்வண்ணன் ஆகியோர் தங்களது கதாபாத்திரம் உணர்ந்து அதற்குத் தேவையான நடிப்பை குறைவின்றி நிறைவாகக் கொடுத்திருக்கிறார்கள்.
சாமியாராகத் தோன்றும் நடன இயக்குநர் ராம்ஜியின் நடிப்பு பாராட்டும்படி உள்ளது. மேத்யூ வர்கீஸ் இயல்பான நடிப்பை வழங்கியிருக்கிறார்.
ரிக் வேதம், யஜூர் வேதம், சாம வேதம், அதர்வண வேதம் ஆகிய நான்கு வேதங்களாகத் தோன்றிய நான்கு கதாபாத்திரங்களும் கண்களாலேயே தமது மிரட்டலான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்கள்.
1995 முதல் 1998 வரை சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி, திகிலில் பார்வையாளர்களை உறைய வைத்து, அமோக வரவேற்பைப் பெற்ற ‘மர்ம தேசம்’ தொடரை இயக்கி, பெயரும் புகழும் பெற்ற நாகா தான் இந்த ‘ஐந்தாம் வேதம்’ இணையத் தொடரை இயக்கியிருக்கிறார். நாமறிந்த நான்கு வேதங்களுக்கு அப்பால் ஐந்தாம் வேதம் என்ற ஒன்றிருந்தால்…? என்ற கேள்வியிலிருந்து கருவை உருவாக்கி, புராணத்தையும், அறிவியலையும் கலந்து திரைக்கதை அமைத்து, பொருத்தமான நடிப்புக் கலைஞர்களை தேர்வு செய்து, அவர்களை திறமையாக வேலை வாங்கி, காட்சிகளை சுவாரஸ்யமாகவும், விறுவிறுப்பாகவும் நகர்த்திச் சென்றுள்ளார் இயக்குநர் நாகா. ஏஐ தொழில்நுட்பம் எனும் செயற்கை நுண்ணறிவு தவறான பாதையிலும் இட்டுச் செல்லும் என்பதையும் விளக்கியிருப்பது பாராட்டுக்குரியது. ‘மர்ம தேசம்’ போலவே இந்த தொடரிலும் பார்வையாளர்களை திகிலுடன் சீட்டின் நுனியில் அமரும்படி செய்திருப்பதிலும், அடுத்தடுத்த சீசன்கள் எப்போது வரும் என்று ஆவலோடு எதிர்பார்க்க வைப்பதிலும் வெற்றி பெற்றுள்ளார் இயக்குநர்.
ஸ்ரீனிவாசன் தேவராஜனின் நேர்த்தியான ஒளிப்பதிவு, ரேவாவின் தனித்துவமான பின்னணி இசை, ராஜேஷ் எம்.ஆரின் துல்லியமான படத்தொகுப்பு ஆகியவை இயக்குநரின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்துள்ளன.
‘ஐந்தாம் வேதம்’ – ‘மர்மதேச’த்தைப் பார்த்து ரசித்த தலைமுறையும், அதை பார்க்காத இளம் தலைமுறையும் சேர்ந்தமர்ந்து கண்டு களிக்கலாம்!