அதிமுக அணிகள் சமரச பேச்சு: “காக்கிநாடா எனக்கு! பாவாடை நாடா உனக்கு!!”
ஒரு படத்தில் ரவுடியாக வரும் விவேக், மாமூல் வசூல் மற்றும் அராஜகம் செய்வதில் தனக்கும் தாதா சுமனுக்கும் இடையே பிரச்சனை வரக்கூடாது என்பதற்காக, “காக்கிநாடா எனக்கு, பாவாடை நாடா உனக்கு” என்கிற ரீதியில் ஏரியா பிரிப்பார். அதுபோல், அதிமுகவின் கொள்ளைக் கூட்டத் தலைவர்களான பழனிச்சாமியும், பன்னீர்செல்வமும் தங்கள் அணிகளை இணைப்பதற்காக ஆட்சியிலும், கட்சியிலும் தங்களுக்கான பதவிகளை பிரித்துக்கொள்வதில் ஓர் உடன்பாட்டுக்கு வந்திருந்தனர். ஆனால் பதவி கிடைக்காத பன்னீர்செல்வம் அணியினர் சிலர் முரண்டு பிடிப்பதால், அணிகளின் இணைப்பு விவகாரத்தில் முட்டுக்கட்டை ஏற்பட்டுள்ளது..
ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அதிமுகவில் பழனிசாமி, பன்னீர்செல்வம் ஆகியோர் தலைமையில் 2 அணிகள் உருவாகின. இந்த இரு அணிகளையும் இணைக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டது. ஜெயலலிதா மரணம் தொடர்பாக சிபிஐ விசாரணை வேண்டும்; சசிகலா உள்ளிட்ட அவரது குடும்பத்தினரை கட்சியை விட்டு நிரந்தரமாக நீக்க வேண்டும் என்ற 2 நிபந்தனைகனை பன்னீர்செல்வம் தரப்பினர் முன்வைத்தனர். இதனால், இணைப்பு முயற்சியில் முட்டுக்கட்டை ஏற்பட்டது.
இந்நிலையில், டிடிவி தினகரன் – பழனிசாமி இடையே கருத்து மோதல்கள் வலுத்தன. இதையடுத்து, தினகரன் தலைமையில் 3-வது அணி உருவானது. தினகரனை சமாளிக்க, பன்னீருடன் இணைய பழனிசாமி முடிவெடுத்தார். முதலில் தினகரன் நியமனம் செல்லாது என பழனிசாமி தரப்பினர் அறிவித்தனர். அதைத் தொடர்ந்து, ஜெயலலிதா மரணம் தொடர்பாக ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்படும் என்றும், ஜெயலலிதா வசித்த போயஸ் தோட்ட இல்லம் நினைவிடமாக மாற்றப்படும் என்றும் பழனிசாமி அறிவித்தார்,
பன்னீர் தரப்பினரின் 2 நிபந்தனைகளையும் பழனிசாமி தரப்பினர் ஏற்றுக்கொண்டு அறிவித்ததைத் தொடர்ந்து இரு அணிகள் இணைப்புக்கான முயற்சி மீண்டும் மேற்கொள்ளப்பட்டது. போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த தனது தாயாரை பார்ப்பதற்காக பன்னீர் இன்று காலை சென்றார். அப்போது, பழனிசாமிக்கு நெருக்கமான அமைச்சர்கள் பி.தங்கமணி, எஸ்.பி.வேலுமணி ஆகிய இருவரும் மருத்துவமனைக்கு சென்று பன்னீரின் தாயார் உடல்நிலை தொடர்பாக விசாரித்தனர்.
பின்னர், பன்னீருன் அவர்கள் சுமார் ஒரு மணி நேரம் பேச்சுவார்த்தை நடத்தினர். மருத்துவமனையில் இருந்த வீடு திரும்பிய பன்னீர், ‘‘இரு அணிகள் இணைப்பு உறுதி. மாலை நடக்கும் கூட்டத்துக்குப்பின் முடிவை அறிவிப்பேன்’’ என்றார்.
இதைத் தொடர்ந்து இன்று மாலை பன்னீர் இல்லத்தில் ஆலோசனைக் கூட்டம் தொடங்கியது. இதில் முன்னாள் அமைச்சர்கள் மதுசூதனன், கே.பி.முனுசாமி, நத்தம் விஸ்வநாதன், பொன்னையன், செம்மலை, பாண்டியராஜன் மற்றும் எம்எல்ஏக்கள், மைத்ரேயன் உள்ளிட்ட எம்.பி.க்கள், முன்னாள் எம்.பி.க்கள் மனோஜ் பாண்டியன், கே.சி.பழனிசாமி, நிர்வாகிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். அணிகள் இணைப்பு தொடர்பாக நீண்ட நேரம் ஆலோசிக்கப்பட்டது.
அதேநேரத்தில் பழனிசாமியுடன் அவரது இல்லத்தில் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், செங்கோட்டையன், தங்கமணி, வேலுமணி மற்றும் வைத்திலிங்கம் எம்பி உள்ளிட்டோர் ஆலோசனை நடத்தினர். இருவரின் வீட்டின் முன்பும் ஏராளமான ஆதரவாளர்கள் குவிந்திருந்தனர்.
இரு தரப்பும் ஆலோசித்துக் கொண்டிருக்கும்போதே, மாலை 6 மணியளவில், மெரினா கடற்கரையில் உள்ள ஜெயலலிதாவின் நினைவிடம் மலர்களால் அலங்கரிக்கப்பட்டது. பொதுப்பணித் துறை அதிகாரிகள், காவல் துறை அதிகாரிகள் அங்கு வந்தனர். நினைவிடத்தை அலங்கரிப்பது தொடர்பாக அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘‘முதல்வர் பழனிசாமியும், பன்னீர்செல்வமும் வர உள்ளதால் ஏற்பாடுகளை செய்ய எங்களுக்கு மேலிடத்தில் இருந்து உத்தரவு வந்துள்ளது’’ என்றனர்.
நினைவிடத்தில் இருந்து இருவரும் ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்துக்கு வருவார்கள் என்று தகவல் பரவியதால் அங்கும் நிர்வாகிகள், தொண்டர்கள் குவியத் தொடங்கினர். இந்த 2 இடங்களிலும் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டது.
பழனிசாமி அணியைச் சேர்ந்த கலசப்பாக்கம் பன்னீர்செல்வம் உள்ளிட்ட சில எம்எல்ஏக்கள், வாலாஜாபாத் கணேசன் உள்ளிட்ட மாவட்டச் செயலாளர்கள், நிர்வாகிகள் ஜெயலலிதா நினைவிடத்துக்கு வந்தனர். அங்கு திரண்டிருந்த அதிமுக தொண்டர்கள், இரு அணிகளும் இணையப் போகிறது என்று சொல்லி மகிழ்ச்சியுடன் கோஷம் போட்டபடி இருந்தனர்.
பழனிசாமி, பன்னீர் இருவரும் எப்போது ஜெயலலிதா நினைவிடத்துக்கு புறப்படுவார்கள் என நிர்வாகிகள் ஆவலுடன் காத்திருந்தனர். இரவு 7 மணி ஆகியும் யாரும் புறப்படுவதாக தெரியவில்லை. 7.30 மணி, 8 மணி, 8.30 மணி, 9 மணி என ஒவ்வொரு அரை மணி நேரத்திலும் இப்போது வருவார்கள்… இப்போது வருவார்கள் என காத்திருந்தவர்கள் எதிர்பார்ப்பு அதிகரித்தது. இரவு 9 மணியைத் தாண்டியும் ஆலோசனை கூட்டத்தில் இருந்து நிர்வாகிகள் யாரும் வெளியில் வரவில்லை.
கட்சி, ஆட்சியில் அதிகாரப்பகிர்வு தொடர்பாக இரு அணிகளிலும் தொடர்ந்து 4 மணி நேரத்துக்கும் மேலாக பேச்சுவார்த்தை நடந்தது. ஜெயலலிதா நினைவிடம், அதிமுக தலைமை அலுவலகத்தில் இருந்த நிர்வாகிகள் மத்தியிலும் தொடர்ந்து பரபரப்பு நிலவியது.
இதற்கிடையே, பன்னீர் இல்லத்தில் பேச்சுவார்த்தையில் இடம் பெற்றிருந்த இ.மதுசூதனன், பொன்னையன் ஆகியோர் வெளியில் வந்தனர். மதுசூதனன் கூறும்போது, ‘‘அணிகள் இணைப்பு தொடர்பாக ஓபிஎஸ் நல்ல முடிவு எடுப்பார்’’ என்றார். தற்போதைய எம்பி, எம்எல்ஏக்களுடனும் அதன்பின், முன்னாள் எம்.பி., எம்எல்ஏக்கள் மற்றும் நிர்வாகிகளுடனும் தனித்தனியாக 2 கட்டங்களாக பன்னீர் பேச்சுவார்த்தை நடத்தியதாக கூறப்படுகிறது. ஆனால், கட்சியிலும் ஆட்சியிலும் பதவியை எதிர்பார்த்து ஏமாந்த சிலர், பன்னீர் அவசரப்படக் கூடாது என முரண்டு பிடித்ததாக கூறப்படுகிறது.
பழனிசாமி, பன்னீர் தரப்பினர் எங்கும் வராததால் இரு இடங்களிலும் திரண்டிருந்த நிர்வாகிகள் கலையத் தொடங்கினர். இரவு 9.30 மணி அளவில் பன்னீர் அணி செய்தித் தொடர்பாளர் கோவை சத்யா, நிருபர்களிடம் கூறும்போது, ‘‘ஓபிஎஸ் இன்று செய்தியாளர்களை சந்திக்கவில்லை. நாளை சந்திப்பதாக இருந்தால் அழைப்பு விடுப்போம்’’ என தெரிவித்தார். அதனால், இணைப்புக்காக காத்திருந்த அதிமுகவினர் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர். ஜெயலலிதா நினைவிடத்தில் காத்திருந்த அரசு அதிகாரிகளும் திரும்பிச் சென்றனர்.