”அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டவர்கள் நீக்கப்பட்டவர்கள் தான்!” – எடப்பாடி பழனிசாமி

சென்னை ராயப்பேட்டையில் உள்ள தலைமை அலுவலகத்தில் அதிமுகவின் 53-ம் ஆண்டு ஆண்டு விழா நேற்று நடைபெற்றது. அந்த வளாகத்தில் உள்ள எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா சிலைகளுக்கு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

இதைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியது:

பொன்விழா கண்ட கட்சி அதிமுக. இக்கட்சி பல்வேறு சாதனைகளை புரிந்திருக்கிறது.

’அதிமுக இரண்டாகிவிட்டது, அதிமுக பிரிந்து கிடக்கிறது என்ற வார்த்தையை கூட இனி உபயோகிக்க வேண்டாம். பிரிந்து சென்றவர்கள் இன்று எத்தனையோ அவதாரங்களை எடுக்கிறார்கள்.

ஒன்றாக இருப்பதால்தான் இத்தனை பேர் இங்கு நிற்கின்றோம். அதிமுக பிரிந்து கிடக்கிறது என சொல்லாதீர்கள். அதிமுக ஒன்று தான். கட்சியிலிருந்து நீக்கப்பட்டவர்களை இனி மீண்டும் சேர்க்க வாய்ப்பு இல்லை. நீக்கப்பட்டவர்கள் நீக்கப்பட்டவர்கள் தான்.

எங்கள் தரப்பில் இருப்பதுதான் அதிமுக. கட்சிக்கு விரோதமாக செயல்பட்டவர்கள் அனைவரும் நீக்கப்பட்டு விட்டார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.