போலீசை ஏமாற்றி மெரினாவில் திடீர் போராட்டம்: மாணவர்கள், இளைஞர்கள் கைது!
ஜல்லிக்கட்டு போராட்டத்தில் இளைஞர்கள் தன்னெழுச்சியாக திரண்டு போராடியது தமிழக அரசியல் வரலாற்றில் ஒரு மைல் கல்லாக இருந்தது. அதே அளவு பெரிய எழுச்சி, தற்போது காவிரி மேலாண்மை வாரியம் விவகாரத்தில் ஏற்பட்டுள்ளது.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி மாணவர்கள், இளைஞர்கள் மெரினாவில் திரண்டு போராட்டம் நடத்த வாய்ப்புள்ளது என்று உளவுத்துறை தகவல் வந்ததை அடுத்து போலீஸார் மெரினாவில் குவிக்கப்பட்டனர்.
ஆனாலும் இன்று விடுமுறை தினம் என்பதால் பொதுமக்கள் ஏராளமானோர் கடற்கரைக்கு வந்தவண்ணம் இருந்தனர். இதனால் போலீஸார் சற்று மெத்தனமாக இருந்தனர். இந்நிலையில் கடற்கரை விவேகானந்தர் இல்லம் அருகே கடலுக்கு சற்று அருகே வரிசையாக நின்ற இளைஞர்கள் கையில் பதாகைகளை பிடித்து திடீரென கோஷம் போட ஆரம்பித்தனர்.
இந்த திடீர் போராட்டத்தை முகநூலில் அந்த இளைஞர்களே பதிவு செய்து ஒளிபரப்பினர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் போலீஸாருக்கு இந்த தகவல் கிடைத்தவுடன் போலீஸார் நூற்றுக்கணக்கில் கடற்கரை மணலில் இறங்கி தண்ணீர் பரப்பை நோக்கி ஓடி வந்தனர். போராட்டம் நடத்திய இளைஞர்களைத் தேடினர்.
ஆனால் அவர்கள் மக்களோடு மக்களாக கலந்து கண்ணகி சிலை, அண்ணா சமாதி, எம்ஜிஆர் சமாதி என நகர்ந்து தங்கள் போராட்டத்தை நடத்தினர். போலீஸார் தொடர்ந்து அவர்களை தேடிப்பிடித்து கைது செய்தனர்.
போராட்டம் நடப்பது முகநூல் மூலம் அதிகமானோரால் ஷேர் செய்யப்படுவதால் சென்னை முழுவதும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.