‘இயேசு vs ரமணர்’ என்ற சர்ச்சை பேச்சு: இளையராஜா வீடு முற்றுகை!
முன்னாளில் பிரபல இசையமைப்பாளராக இருந்தவரும், இந்நாளில் பட வாய்ப்பு இல்லாமல் யூ-ட்யூப் பார்த்து பொழுதைப் போக்கிக்கொண்டிருப்பவருமான இளையராஜா, சமீபத்தில் இசை நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு பேசியதாவது:
உலகத்தில் தோன்றிய ஞானிகளில் பகவான் ரமண மகிரிஷியைப் போல வேறு ஒருவர் கிடையாது. இயேசு உயிர்த்தெழுந்து வந்தார் என சொல்வார்கள். அடிக்கடி டாக்குமென்டரி பார்ப்பதை வழக்கமாக கொண்டுள்ளேன். அதில் இயேசு இறந்தார், உயிர்த்தெழுந்து வந்தார் என்பதில் தான் கிறிஸ்தவமே நிற்கிறது, வளர்ந்து வந்தது என்ற பாயிண்டை சொல்லி அப்படி ஒன்று நடக்கவில்லை என்று யூடியூபில் வரலாற்று ரீதியாக போடுகிறார்கள்.
ஆனால் உண்மையான உயிர்த்தெழுதல் நடந்தது ஒரே ஒருவருக்குத் தான். அது பகவான் ரமண மகரிஷிக்கு மட்டும் தான். உலகத்திலேயே அவருக்கு மட்டும் உயிர்த்தெழுதல் நடைபெற்றிருக்கிறது. அதுவும் அவரின் 16 வயதில்.
இவ்வாறு இளையராஜா பேசினார்.
இளையராஜாவின் இந்த பேச்சு கிறித்துவத்தையும், அதன் ஆணி வேரான மத நம்பிக்கையையும் சிறுமைப்படுத்துவதாகவும், ஒட்டுமொத்த கிறித்துவர்களின் மனதைப் புண்படுத்தியதாகவும் கூறி, இதற்கு மன்னிப்புக் கேட்க வேண்டும் என வலியுறுத்தி, இளையராஜா வீடு முன்பு முற்றுகை போராட்டம் நடத்தப்படும் என சிறுபான்மை மக்கள் நலக் கட்சியினர் அறிவித்திருந்தனர்.
இன்று காலை சென்னை தி.நகரில் உள்ள இளையராஜாவின் வீடு அமைந்துள்ள முருகேசன் தெருவிற்கு சிறுபான்மை மக்கள் நலக் கட்சியினர் வந்தனர். ஆனால் அவர்களின் முற்றுகைப் போராட்டத்திற்கு அனுமதி இல்லாததால் அவர்களை போலீஸார் தடுத்து நிறுத்தினர்.
இதனால் சென்னை தி.நகர் மேம்பாலம் அருகே சிறுபான்மை மக்கள் நலக் கட்சியினர் முற்றுகையில் ஈடுபட முயன்றனர். அவர்களை போலீஸார் தடுத்து கைது செய்தனர். கைது செய்யப்பட்டவர்கள் தி.நகரில் உள்ள திருமண மண்படத்தில் தங்க வைக்கப்பட்டு மாலையில் விடுவிக்கப்பட்டனர்.
“ஒரு இசை சம்பந்தப்பட்ட விழாவில் கலந்துகொண்ட இளையராஜா தேவையற்ற முறையில் ரமண மகரிஷியின் மகிமை பற்றி பேசினார். அவர் ரமண மகரிஷியின் புகழ் பாடுவதில் எங்களுக்கு ஆட்சேபனை இல்லை, ஆனால் அதற்காக உலகெங்கும் உள்ள கிறித்துவ மக்களின் நம்பிக்கையை கொச்சைப்படுத்த வேண்டுமா?” என முற்றுகையில் பங்கேற்றவர்கள் கேள்வி எழுப்பினர்.