அகத்தியா – விமர்சனம்

நடிப்பு: ஜீவா, ராஷி கண்ணா, அர்ஜுன், எட்வர்டு சோனென்ப்ளிக், மாடில்டா, ராதாரவி, நிழல்கள் ரவி, ரோகிணி, சார்லி, யோகி பாபு, ஷாரா, ரெடின் கிங்ஸ்லி, செந்தில், விடிவி கணேஷ் மற்றும் பலர்
எழுத்து & இயக்கம்: பா.விஜய்
ஒளிப்பதிவு: தீபக் குமார் பதி
படத்தொகுப்பு: சான் லோகேஷ்
இசை: யுவன் சங்கர் ராஜா
தயாரிப்பு: ’வேல்ஸ் பிலிம் இண்டர்நேஷனல்’ ஐசரி கே.கணேஷ், ‘வாம்இண்டியா’ அனீஷ் அர்ஜுன் தேவ்
பத்திரிகை தொடர்பு: நிகில் முருகன்
திரைத்துறையில் கலை இயக்குநராக வேண்டும் என்ற கனவுடன் இருக்கும் நாயகன் அகத்தியனுக்கு (ஜீவா), முதன்முதலாக ஒரு படத்தில் கலை இயக்கம் செய்ய வாய்ப்பு கிடைக்கிறது. தனக்கு கிடைத்திருக்கும் இந்த முதல் வாய்ப்பை நன்றாகப் பயன்படுத்தி, நல்ல பெயரையும் பாராட்டையும் பெற வேண்டும் என்று நினைக்கும் அவர், படப்பிடிப்புக்காக பாண்டிச்சேரியில் ஒரு பழைய பிரெஞ்சு பங்களாவை வாடகைக்கு எடுத்து, சொந்த பணத்தை செலவு செய்து, பிரமாண்டமான அரங்கம் அமைக்கிறார்.
படப்பிடிப்பு நடந்துகொண்டிருக்கையில், அங்கு இருக்கும் பழைய பியானோவை தற்செயலாக வாசிக்கையில், சில அமானுஷ்ய நிகழ்வுகள் நடந்து படப்பிடிப்பு நின்றுபோகிறது. செய்வதறியாது திகைக்கிறார் அகத்தியன். அவருக்கு ஆறுதல் சொல்லும் அவரது நீண்ட நாள் காதலி வீணா (ராஷி கண்ணா), அதே பங்களாவில் அச்சமூட்டும் உருவங்களை வைத்து ‘பேய் பங்களா’வாக மாற்றி, ‘பீதியூட்டும் பங்களா’ என்ற பொருளில் ‘ஸ்கேரி பங்களா’ என பெயர் சூட்டி, பார்வையிடுவதற்கு கட்டணம் விதித்து, பணம் சம்பாதிக்கலாம் என்று ஐடியா கொடுக்க, அதை ஏற்று அப்படியே செய்கிறார் அகத்தியன். ‘ஸ்கேரி பங்களா’வுக்கு மக்களிடம் – குறிப்பாக சுற்றுலாப் பயணிகளிடம் நல்ல வரவேற்பு கிடைப்பதால் வசூல் குவிகிறது.
இந்நிலையில், பார்வையிடுவதற்கு ‘ஸ்கேரி பங்களா’வுக்குள் சென்ற ஓர் இளைஞன் மாயமாகிவிட, அது சர்ச்சையாக வெடிக்க, அரசு அந்த பங்களாவை மூடுகிறது. மாயமான இளைஞனைத் தேடும் அகத்தியனுக்கு, அந்த பங்களாவில் அமானுஷ்யங்கள் இருப்பது தெரிய வருகிறது. அத்துடன் ஒரு பழைய பிலிம் ரோல் அவருக்கு கிடைக்கிறது. அதில் 1940-களில் வாழ்ந்த சித்தார்த்தன் (அர்ஜுன்) என்ற சித்த மருத்துவர் சில சம்பவங்களை, சில தகவல்களை பதிவு செய்து வைத்திருக்கிறார்.
சித்தார்த்தன் பதிவு செய்து வைத்திருந்த சம்பவங்கள், தகவல்கள் என்ன? அவற்றுக்கும் அகத்தியனுக்கும் உள்ள தொடர்பு என்ன? அமானுஷ்யங்களின் இடையூறுகளைக் கடந்து அந்த பங்களாவில் இருக்கும் மர்மத்தை அகத்தியனால் கண்டுபிடிக்க முடிந்ததா? என்பன போன்ற கேள்விகளுக்கு பல திருப்பங்களுடன் சுவாரஸ்யமாக விடை அளிக்கிறது ‘அகத்தியா’ திரைப்படத்தின் மீதிக்கதை.

கதையின் நாயகன் அகத்தியனாக ஜீவா நடித்திருக்கிறார். சிக்கலான கதையை தெளிவாகப் புரிந்துகொண்டு, அதற்கு தேவையான இயல்பான நடிப்பை மிகையில்லாமல் கொடுத்திருக்கிறார். பெற்ற தாய்க்காக எப்பேர்பட்ட பேயையும் எதிர்கொள்ளத் துணிவுடன் களத்தில் இறங்கி, நெகிழ்ச்சியை ஏற்படுத்தி விடுகிறார்.
மேற்கத்திய உடையணிந்த சித்த மருத்துவர் சித்தார்த்தனாக அர்ஜுன் நடித்திருக்கிறார். அவரது அனுபவ நடிப்பும், திரை இருப்பும் படத்துக்கு பெரும் பலம் சேர்த்திருக்கிறது.
நாயகனின் காதலி வீணாவாக வரும் ராஷி கண்ணாவுக்கு பெரிதாக வேலை இல்லை என்றாலும், கொடுத்த வேலையை குறைவின்றி நிறைவாக செய்திருக்கிறார்.
பிரெஞ்சு ஆளுநர் எட்வின் டூப்ளே கதாபாத்திரத்தில் வரும் எட்வர்டு சோனென்ப்ளிக் வில்லத்தனத்தில் மிரட்டியிருக்கிறார். அவரது தங்கை ஜாக்குலினாக வரும் மாடில்டா அழகாக இருக்கிறார். அழுத்தமான நடிப்பு மூலம் தனது கதாபாத்திரத்துக்கு நியாயம் செய்திருக்கிறார்.
ஷாரா, ரெடின் கிங்ஸ்லி, செந்தில், யோகி பாபு, விடிவி கணேஷ் ஆகியோர் பார்வையாளர்களை சிரிக்க வைக்க பயன்பட்டிருக்கிறார்கள்.
ராதாரவி, நிழல்கள் ரவி, ரோகிணி, சார்லி உள்ளிட்ட ஏனைய நடிப்புக் கலைஞர்களும் தத்தமது கதாபாத்திரத்துக்குத் தேவையான நடிப்பை வழங்கியிருக்கிறார்கள்.
இப்படத்தை எழுதி இயக்கியிருக்கிறார் பா.விஜய். ஆங்கில மருத்துவம் ஆதிக்கம் செலுத்தும் இன்றைய காலகட்டத்தில், நமது பாரம்பரிய சித்த மருத்துவத்தின் மேன்மையை பறைசாற்றும் கதைக்கருவைத் தேர்ந்தெடுத்து, இளைய தலைமுறையினரும் பார்த்து ரசிக்கத் தக்க விதத்தில் காமெடி, திகில், ஃபேண்டஸி, அம்மா செண்டிமெண்ட், சுவாரஸ்யம், விறுவிறுப்பு ஆகியவற்றுக்கு இடமளிக்கும் வகையில் திரைக்கதை அமைத்து, அர்த்தமுள்ள வசனங்கள் எழுதி, போரடிக்காமல் படத்தை நகர்த்திச் செல்வதில் வெற்றி பெற்றுள்ளார் இயக்குநர் பா.விஜய். கிளைமாக்ஸ் சண்டையில் யாருமே எதிர்பார்க்காத புதுமையைப் புகுத்தி நிமிர்ந்து உட்கார வைத்திருக்கிறார். பாராட்டுகள் பா.விஜய்.
யுவன் சங்கர் ராஜா இசையில் ’என் இனிய பொன்நிலாவே’ என்கிற இளையராஜா பாடலின் ரீமிக்ஸ் வெர்ஷன் பிரமாதம். பின்னணி இசை காட்சிகளுக்கும், கதையோட்டத்துக்கும் வலு சேர்த்திருக்கிறது.
கலை இயக்குநர் பி.சண்முகத்தின் கைவண்ணத்தில் அரங்குகள் அமர்க்களமாக வடிவம் பெற்றுள்ளன. தீபக் குமார் பதியின் ஒளிப்பதிவும், சான் லோகேஷின் படத்தொகுப்பும் இயக்குநரின் கதை சொல்லலுக்கு உறுதுணையாக இருந்துள்ளன.
‘அகத்தியா’ – முற்றிலும் மாறுபட்ட திரைப்படத்தைக் காண விரும்புவோருக்கு அறுசுவை விருந்து!
ரேட்டிங்: 3/5