மேடையில் இருப்போர் பெயர்களை எல்லாம் சொல்லிக் கொண்டிருப்பது நேரவிரயம்!
“இந்தக் கூட்டத்திற்குத் தலைமையேற்றிருக்கிற, எனது பெருமதிப்பிற்குரியவரும் ……. அப்படியானவரும் …… இப்படியானவருமான ……….. அவர்களே, முன்னிலை வகிக்கிற எனது அன்பிற்கும் மதிப்பிற்கும் உரிய …. அப்படியானவரும் ….. இப்படியானவருமான ………. அவர்களே, வரவேற்புரையாற்றிய ……… அவர்களே, நன்றியுரையாற்றவுள்ள ……… அவர்களே, சிறப்புரையாற்றவிருக்கிற எனது பேரன்பிற்கும் பெரும் மரியாதைக்கும் உரிய, மிகச் சிறந்த முன்னுதாரணமாகத் திகழ்கிற, வரலாறு படைத்துக்கொண்டிருக்கிற …….. அவர்களே….”
மேடையேறிப் பேசுகிற மிகப் பெரும்பாலோர் இப்படியாகத்தான் தொடங்குகிறார்கள். மற்றவர்களைப் பற்றித் தெரியாதவர்கள் கூட, அழைப்பிதழில் உள்ள பெயர்களை ஒன்று விடாமல் சொல்கிறார்கள், தனது பெயர் உச்சரிக்கப்படுவதைக் கேட்பது ஒரு போதை. ஒரு அங்கீகார உணர்வு. இந்த உளவியலைப் புரிந்துகொண்டு பல தலைவர்கள் மேடைகளில் தங்கள் பேச்சைத் தொடங்குகையில் அச்சிட்ட அழைப்பிதழில் உள்ள பெயர்களை மட்டுமல்லாமல், எதிரே அமர்ந்திருப்பவர்களில் முக்கியமானவர்களைக் குறிப்பிடுவார்கள். அதை பெரியதொரு கவுரவமாக எடுத்துக்கொள்கிறவர்கள் உண்டு.
சில அமைப்புகளின் நிகழ்ச்சி மேடைகளில் உரையாற்றுகிற தலைவர்கள், சம்பிரதாய அடுக்கில் வரக்கூடியவர்களின் பெயர்களை மட்டுமே குறிப்பிடுவார்கள். மற்றவர்களின் மூப்பு, பங்களிப்பு ஆகியவற்றைச் சுண்டி எறிவதாக இருக்கும் இந்தச் சம்பிரதாயம். சில இடதுசாரி, முற்போக்கு அமைப்புகளின் அரங்குகளில் கூட இப்படி நடப்பதுண்டு.
பேச்சாளர் மற்றவர்களின் பெயரைச் சொல்லிவிட்டுத் தனது பெயரை மட்டும் குறிப்பிட மறந்துவிட்டால், நொந்துபோய் உற்சாகம் இழக்கிறவர்களும் உண்டு. அதை ஒரு அவமதிப்பாக எடுத்துக்கொள்கிறவர்களும் இருக்கிறார்கள். அதற்காக ஆத்திரப்படுகிறவர்கள் அடுத்த படி.
அப்படிப்பட்ட சிலர் மேடையில் தங்களுடைய முறை வருகிறபோது, தனது பெயரைச் சொல்லாமல் விட்டதைச் சுட்டிக்காட்டி, “இருந்தாலும் பரவாயில்லை நான் அதைப் பொருட்படுத்தவில்லை” என்று கூறித் தங்களது “பெருந்தன்மை” எப்படிப்பட்டது என்று காட்டுவார்கள். உண்மையான பெருந்தன்மை இதையெல்லாம் கண்டுகொள்ளாமல், தான் சொல்லவந்த கருத்தைச் சொல்லிவிட்டுப் போவதுதான்.
உரை நிகழ்ச்சி அல்லாத அரங்குகளில், பேச்சாளராய்ப் பயிற்சி பெறாதவர்கள், பாராட்டப்படுவதற்காகவோ அறிமுகப்படுத்தப்படுவதற்காகவோ மேடைக்கு அழைக்கப்படுகிறபோது, ஒரு பரபரப்புத் தடுமாற்றத்தின் காரணமாகவே கூட சிலரது பெயர்களைக் குறிப்பிட மறந்துவிடுவதுண்டு.
‘விழித்திரு’ திரைப்பட செய்தியாளர் சந்திப்பு நிகழ்வில் நடிப்புக் கலைஞர் தன்ஷிகா மறதி புரிந்துகொள்ளத்தக்கதே. அதை ஒரு பெருங்குற்றமாக, அவமதிப்புச் செயலாக எடுத்துக்கொண்டு இயக்குநர், கதாசிரியர், வசனகர்த்தா, நடிகர், பாடலாசிரியர், இசையமைப்பாளரும் இன்னும் பல திறமைகைள் பெற்றவருமான டி. ராஜேந்தர் நடந்துகொண்ட விதம் ஆரோக்கியமற்றது. அதற்குப் பரவலாகக் கண்டனங்கள் வெளிப்பட்டு வருவது ஆரோக்கியமானது. குறிப்பாக, தன் பெயரை ஏன் சொல்லவில்லை என்பதோடு நிறுத்தாமல் பெண்ணின் உடை பற்றிய அநாகரிகக் குத்தலாகவும் அவர் தொடர்ந்து பேசியதை எல்லோரும் கழுவிக்கழுவி ஊற்றுகிறார்கள். நிகழ்ச்சியில் கலந்துகொண்ட கலைஞர்களில் சிலர் அங்கே எதுவும் சொல்லாவிட்டாலும், வெளியே தங்கள் கருத்தைச் சொல்கிறார்கள். ஒருவேளை இப்படியெல்லாம் சர்ச்சையில் பெயர் அடிபடுவது தனது ‘டி.ஆர்.’பி. ரேட்டிங்குக்கு உதவும் என்ற மனநிலையோ என்னவோ.
நான் விவாதிக்க வந்தது இந்த விவகாரம் பற்றியதல்ல. மேடைப்பேச்சில் பெயர்களைக் குறிப்பிடுவது பற்றியதே.
வந்திருக்கிற எல்லோருடைய பெயர்களையும் குறிப்பிட முடியுமா? அது சாத்தியமும் இல்லை, நேரத்தையும் விழுங்கிவிடும் என்பது ஏற்கத்தக்கதே. நான் ஒரு வழிமுறையைக் கடைப்பிடிக்கிறேன்.
பொதுவாகவே, “பெரியோர்களே தாய்மார்களே,” என்று தொடங்குவதை, செங்கொடி இயக்கத்திற்கு உள்ளே வருவதற்கு முன்பே, தவிர்த்துவிட்டேன். அதன் மூலம் பெரியோர்கள் என்றால் ஆண்கள், தாய்மார்களாகிய பெண்கள் இரண்டாமிடத்தில் வைக்கப்பட வேண்டியவர்கள் என்ற சமூக விதியிலிருந்து என்னளவில் விடுபட்டேன்.
தரப்படுகிற கால அளவில், பெயர்கள் உச்சரிப்புக்கு என ஒரு பகுதி நேரத்தைத் தாரை வார்க்காமல், நேரடியாக “தோழர்களே” என்றோ, “நண்பர்களே” என்றோ தொடங்கிவிடுவேன். எவருடைய பெயரும் விட்டுப்போய்விட்டது என்ற சங்கடத்திற்கும் இடமில்லாமல் போய்விடும். அவையின் கடைசி வரிசையில் அமர்ந்திருப்பவர்களிலிருந்து மேடையில் அமர்ந்திருப்போர் வரையில் “தோழர்களே” அல்லது “நண்பர்களே” என்ற விளிப்பிற்குள் வந்துவிடுவார்கள் – சமமாக.
குமரேசன் அசாக்
ஊடகவியலாளர்