அடுத்த சாட்டை – விமர்சனம்
சமுத்திரகனி நடிப்பில் வெளியான சாட்டை படத்தின் வெற்றியை தொடர்ந்து ‘அடுத்த சாட்டை’ என்ற படம் வெளியாகி இருக்கிறது. சாட்டை படத்தில் பள்ளி மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் இடையேயான கதையை உருவாக்கி இருந்தார்கள். அடுத்த சாட்டை படத்தில் கல்லூரி மாணவர்களுக்கும், பேராசிரியர்களுக்கும் இடையேயான கதையை உருவாக்கி இருக்கிறார்கள்.
கல்லூரியில் முதல்வராக தம்பிராமையாவும், பேராசிரியராக சமுத்திரகனியும் இருக்கிறார்கள். ஒரு குறிப்பிட்ட சமூகத்தினருக்கும் மட்டும் முன்னுரிமை தரப்பட்டு வரும் அந்த கல்லூரியின் தவறுகளை சமுத்திரகனி சுட்டி காட்டி வருகிறார். மாணவர்களுக்கிடையே ஜாதிகள் ஏதும் கிடையாது என்று கூறி மாணவர்களை ஒழுங்குப்படுத்தி வருகிறார் சமுத்திரகனி. மாணவர்களுக்கிடையே இருக்கும் பிளவுகளையும் நீக்குகிறார்.
சமுத்திரகனியின் செயலால் கோபமடையும் தம்பிராமையா, அவரை எப்படியாவது கல்லூரியில் இருந்து வெளியேற்ற வேண்டும் என்று முயற்சி செய்கிறார். இறுதியில் சமுத்திரகனி, தம்பிராமையாவின் சூழ்ச்சியில் இருந்து எப்படி தப்பித்தார்? ஜாதிகளை விட்டு நல்ல கல்லூரி முதல்வராக தம்பிராமையா மாறினாரா? என்பதே படத்தின் மீதிக்கதை.
மாணவர்களால் கல்லூரிகள் சீர்கெடுகிறதா? அல்லது கல்லூரிகளால் மாணவர்கள் சீர்கெடுகிறார்களா? என்பதை அடிப்படையாக வைத்து படத்தை உருவாக்கி இருக்கிறார்கள். சிறந்த வழிக்காட்டி இருந்தால் மாணவர்கள் அனைத்திலும் சிறந்து விளங்குவார்கள் என்ற கருத்தை சொல்லியதற்கு பெரிய பாராட்டுகள்.
கல்லூரி பேராசிரியர் கதாபாத்திரத்திற்கு கச்சிதமாக பொருந்திருக்கிறார் சமுத்திரகனி. வசனங்கள் பேசும் போது பார்ப்பவர்களுக்கு உத்வேகத்தை ஏற்படுத்துகிறது. ஆக்ஷனிலும் கலக்கி இருக்கிறார். மாணவர்களாக நடித்திருக்கும் யுவன், ஸ்ரீராம், அதுல்யா, கனிகா ஆகியோர் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்கள். தம்பிராமையா மிரட்டலான நடிப்பால் கவர்ந்திருக்கிறார். பியூனாக இருக்கும் ஜார்ஜ் கொடுத்த வேலையை செய்திருக்கிறார்.
படம் ஆரம்பத்தில் இருந்து சமூகத்திற்கு தேவையான பல கருத்துகளை வசனங்கள் மூலம் சொல்லிக்கொண்டே இருக்கிறார்கள். நல்ல கருத்து என்றாலும், அதுவே ஒரு கட்டத்தில் சோர்வை ஏற்படுத்தி விடுகிறது. தற்போதுள்ள சூழ்நிலைக்கு இப்படம் தேவையானது என்றே சொல்லலாம்.
முத்தக்காட்சி, புகைப்பிடித்தல், மது அருந்துதல், கேலி செய்தல், ஆபாசம் போன்ற காட்சிகள் இல்லாமல் படத்தை இயக்கி இருக்கிறார் இயக்குனர் அன்பழகன்.
ராசாமதியின் ஒளிப்பதிவும், ஜஸ்டின் பிரபாகரின் இசையும் படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறது.
மொத்தத்தில் ‘அடுத்த சாட்டை’ சமூகத்திற்கு தேவையானது.