அதாகப்பட்டது மகாஜனங்களே – விமர்சனம்
அப்பாவியான நாயகன் உமாபதி கிதார் வாசிப்பதில் வல்லவர். இதனால், அவரது அப்பா பாண்டியராஜன் தன்னுடைய அப்பாவின் நினைவாக உமாபதியின் புகைப்படத்துடன் அவரது முழு விவரம் அடங்கிய கிதார் ஒன்றை அவருக்கு பரிசாக அளிக்கிறார். இந்நிலையில், நாயகனின் நண்பர் பெரிய தொழிலதிபரான நரேனின் வீட்டில் செக்யூரிட்டியாக வேலை செய்கிறார். அவர், நாயகனுக்கு போன் செய்து தனக்கு குழந்தை பிறந்துள்ளதாகவும், தான் அவசரமாக அங்கு செல்லவேண்டும் என்பதால், நான் வரும்வரை என்னுடைய வேலையை நீ பார்க்கவேண்டும் என்று நாயகனிடம் கெஞ்சுகிறார்.
நாயகனும் மனமிறங்கி, அந்த வீட்டில் செக்யூரிட்டியாக வேலை செய்கிறார். வேலைக்கு வந்த சிறிது நேரத்தில் அவர் மயங்கிவிடுகிறார். மயக்கம் தெளிந்தபோது அந்த வீட்டில் அனைவரும் மயங்கிய நிலையில் கிடக்கிறார்கள். இதைப் பார்த்ததும் தன்னுடைய நண்பனுக்கு போன் போட்டு நடந்த விஷயங்களை சொல்கிறார் நாயகன். நண்பரும் என்னால் நீ மாட்டிக்கொள்ள வேண்டாம் என்று அவரை அங்கிருந்து கிளம்ப சொல்கிறார். அடுத்தபடியாக நண்பரும் போலீசுக்கு போன் போட்டு நடந்த விஷயங்களை புகாராக கொடுக்கிறார்.
உடனே அங்கிருந்து கிளம்பும் உமாபதி தான் கொண்டு வந்த கிதாரை அங்கேயே விட்டு விட்டு சென்றுவிடுகிறார். சிறிது நேரம் கழித்து கிதார் நினைவில்வர, அதை எடுப்பதற்காக மீண்டும் நரேனின் வீட்டுக்கு சென்று கிதாரை தேடிப் பார்க்கிறார். ஆனால், கிதார் அங்கு இல்லை. அந்த கிதாரில் தன்னுடைய முழு விவரமும் இருப்பதால், ஒருவேளை போலீஸ்தான் அதை எடுத்துச் சென்றிருப்பார்களோ? என்று பயப்படுகிறார் நாயகன். இதனால் தான் மாட்டிக் கொள்வோம் என்றும் பயப்படுகிறார்.
மறுநாள் தன்னுடைய நெருங்கிய நண்பரான கருணாகரனிடம் சென்று நடந்த விஷயங்களை கூறி, தன்னைக் காப்பாற்ற அவரால் மட்டுமே முடியும் என்று நம்பி உதவி கேட்கிறார். இதற்குள், கொள்ளையர்கள் கிதார் மாட்டிக்கொண்டு வந்திருப்பதாக பத்திரிகைகளில் செய்திகள் வருகிறது. அதன்பிறகு, தன்னுடைய கிதார் கொள்ளையர்கள் வசம்தான் இருக்கிறது என்பது தெரிந்துகொண்ட நாயகன், எப்படியிருந்தாலும் அந்த கிதார் போலீஸ் வசம் கிடைத்தால் தான் மாட்டிக்கொள்வோம் என்று நினைத்துக்கொண்டு கருணகாரனை வைத்து இந்த பிரச்சினையை தீர்க்க பார்க்கிறார்.
ஆனால் உண்மையிலேயே பயந்தாங்கொள்ளியான கருணாகரன் இவருடைய பிரச்சினையை எப்படி தீர்த்து வைத்தார்? என்பதே படத்தின் மீதிக்கதை.
தம்பி ராமையாவின் மகனான நாயகன் உமாபதி நடிப்பில் அடுத்தடுத்து உயரத்தை தொடுவார் என்ற நம்பிக்கையை இந்த படத்தில் கொடுத்திருக்கிறார். அப்பாவித்தனமான கதாபாத்திரத்திற்கு ஏற்ற நடிப்பை கொடுத்து காமெடியிலும் கலக்கியிருக்கிறார். நடனத்திலும் சிறப்பான பங்களிப்பை கொடுத்திருக்கிறார். தம்பிராமையாவின் பெயரை இவர் நிச்சயம் காப்பாற்றுவார் என்பது இந்த படத்தின் மூலம் தெரிகிறது.
நரேனின் மகளாக வரும் கதாநாயகி ரேஷ்மா ரத்தோர் நடிப்பில் ஓகேதான். நாயகனுக்கு அப்பாவாக வரும் பாண்டியராஜனுக்கு படத்தில் நடிப்பதற்கு பெரிதாக வாய்ப்பு கொடுக்கவில்லை. இருப்பினும் தனது கதாபாத்திரத்திற்கு ஏற்ற நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். தொழிலதிபராக வரும் நரேன் நகைச்சுவையான கதாபாத்திரத்தை ரொம்பவும் சிறப்பாகவே செய்திருக்கிறார்.
மனோபாலாவுக்கு இப்படத்தில் வித்தியாசமான கதாபாத்திரம். கடைசியில், இவரது கதாபாத்திரம் கொடுக்கும் டுவிஸ்டு பார்ப்பவர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தும். கருணாகரன் முக்கியமான கதாபாத்திரத்தை ஏற்று நடித்திருக்கிறார். அவர் இன்னொரு நாயகன் என்றே சொல்லலாம். படம் முழுவதும் அடிவாங்குவதும், அதை சமாளிப்பது என இவரது கதாபாத்திரம் நகர்ந்து சென்றிருக்கிறது. அதை வித்தியாசப்படுத்தி நடித்து அனைவரையும் வயிறு குலுங்க வைத்திருக்கிறார்.
தம்பி ராமையா ஒரு காட்சி வந்தாலும் நிறைவாக செய்துவிட்டு போயிருக்கிறார். இயக்குனர் இன்பசேகர் ஒரு இன்பமான கதையை உருவாக்கி, அதை ரசிகர்களுக்கு கலகலப்பாக கொடுத்திருக்கிறார். தன்னுடைய கதைக்கு ஏற்ற கதாபாத்திரங்களை தேர்வு செய்வதிலேயே பாதி வெற்றி பெற்றுவிட்டார். குடும்பத்தோடு சென்றால் கலகலப்பாக பொழுதை கழிக்கலாம் என்ற நம்பிக்கையை கொடுத்திருக்கிறார். படத்தின் நீளத்தை இன்னும் கொஞ்சம் குறைத்திருந்தால் மேலும் சிறப்பாக இருந்திருக்கும்.
பி.கே.வர்மா ஒளிப்பதிவு படத்தை கலர்புல்லாக காட்டியிருக்கிறது. இமான் இசையில் பாடல்கள் படத்திற்கு மிகப்பெரிய பலம். பின்னணி இசையிலும் கதைக்கு தேவையான பங்களிப்பை கொடுத்திருக்கிறார்.
மொத்தத்தில் ‘அதாகப்பட்டது மகாஜனங்களே’ கலகலப்பு.