“நான்கு நாட்களுக்கு முன்பு ஸ்ருஷ்டியிடம் இருந்து போன்…”

நான்கு நாட்களுக்கு முன்பு ஸ்ருஷ்டியிடம் இருந்து போன். இரண்டு மிஸ்டு கால்களை கவனிக்கவில்லை. மூன்றாவது தடவைதான் பார்த்தேன்.

”சொல்லு ஸ்ருஷ்டி..”

”சார், ஒரு குட் நியூஸ்”

”……”

”ஹலோ சார்… கத்துக்குட்டியில் நடிச்சத்துக்காக எனக்கு எடிசன் அவார்டு கிடைச்சிருக்கு. பெஸ்ட் ஹீரோயின் அவார்டு”

”ம்…”

”சார், நான் எவ்வளவு சந்தோசமா சொல்றேன். நீங்க எதுவுமே சொல்லாம இருக்கீங்களே?”

”உன்னோட உழைப்பு. உனக்கான விருது. நல்லா இரு!”

மேற்கொண்டு நான் ஏதும் பேசவில்லை. ஸ்ருஷ்டிக்கு அது எவ்வளவு பெரிய ஏமாற்றமாக இருக்கும் என்பது எனக்குத் தெரியும்.

பெரிதாகப் பேசாததற்குக் காரணம், இதைத் தாண்டிய உழைப்பையும் அர்ப்பணிப்பையும் ‘கத்துக்குட்டி’க்காக கொடுத்தவள் ஸ்ருஷ்டி. என் கதைக்காக நாயகி தேடி நான் அலையவில்லை. மானேஜர் அஜய் வாட்ஸப்பில் ஸ்ருஷ்டியின் இரண்டு புகைப்படங்களை அனுப்பி இருந்தார். மும்பையில் இருந்து வரச் சொல்லிவிட்டேன். எந்தப் பரிட்சையும் வைக்காமல் ஸ்ருஷ்டியை ஓகே செய்தேன். நம்பிக்கை. அவ்வளவுதான். ஆனால், அதற்கான நன்றியாக – பதில் பாசமாக ஷூட்டிங்கில் அவள் காட்டிய உழைப்பும் உதவியும் மறக்க முடியாதது. தமிழ் வசனத்தை இந்தியில் எழுதி வைத்துக்கொண்டு பரிட்சைக்குப் படிப்பதுபோல் மனப்பாடம் செய்து கொண்டிருப்பாள். ஷாட் இருந்தாலும் இல்லாவிட்டாலும் ஸ்பாட்டில் இருப்பாள்.

‘கத்துக்குட்டி’ பிரிவியூ பார்த்துவிட்டு மணிக்கணக்கில் சிலாகித்தாள். ‘நான் படம் முழுக்க வர்ற மாதிரி இருக்கு சார். எனக்குப் பெரிய பேர் கிடைக்கும்.’ – இன்னும் இன்னுமாய் நம்பிக்கை கொண்டாள். ‘கத்துக்குட்டி’ அவளுக்கான வெளிச்சத்தை இன்னும் பெரிதாகக் கொடுக்காமல் போன வருத்தம் இன்னும் ஆறவில்லை. அதனாலேயே ஸ்ருஷ்டியுடன் பேசுவதையே நிறுத்திவிட்டேன்.

(இதேபோல் தான் நரேனின் அர்ப்பணிப்பும்)

இன்றைய ‘தமிழ் இந்து’ நாளிதழில் எடிசன் விருது குறித்து ஸ்ருஷ்டியிடம் கேட்டிருக்கிறார்கள். ”கிராமம்தான் ‘கத்துக்குட்டி’ படத்தின் ஜீவனாக இருந்தது. இயற்கையோடு இயைந்து நிம்மதியான வாழ்க்கை வாழும் கதாபாத்திரத்தில் நடித்தேன். அதனால் சமூக விழிப்பு உணர்வு பார்வைக்கான விருது எனக்குக் கிடைத்துள்ளது. இந்தக் கதாபாத்திரத்தைக் கனவாகச் சுமந்து அதற்கு உயிர் கொடுத்து சிறப்பாக படத்தை எடுத்த இயக்குநர் இரா.சரவணனுக்கு இந்த விருதை அர்ப்பணிக்கிறேன்” எனச் சொல்லி இருக்கிறாள் ஸ்ருஷ்டி.

என் மீதான நிறைய கோபங்களை மறைத்துவிட்டு இப்படிச் சொல்லி இருக்கிறாள். இது புதிது அல்ல. ஷூட்டிங் தொடங்கி ரிலீஸுக்குப் பிறகு வரை எப்போதாவது பேசுகிற சூழல் வாய்த்தால், மொத்த கோபத்தையும் மறைத்துவிட்டு ”போன் பண்ணினால் எடுங்க சார்… அது போதும்!” என்பாள்.

தமிழில் நல்ல இடத்தைப் பிடிக்க ‘நேர்மையாக’ப் போராடும் இந்தப் பெருந்தன்மைக்காரி, நிச்சயம் பிரகாசமான வெளிச்சத்துக்கு வரவேண்டும்.

(கத்துக்குட்டி படத்தின் இயக்குனர் இரா.சரவணனின் பதிவு)