“என்னை படுக்கைக்கு அழைத்தவன் நரகத்துக்கு போவான்”: ராதிகா ஆப்தே சாபம்!

பிரகாஷ்ராஜுடன் ‘டோனி’, கார்த்தியுடன் ‘ஆல் இன் ஆல் அழகுராஜா’ மற்றும் ‘வெற்றிச்செல்வன்’ ஆகிய தமிழ்ப்படங்களில் நடித்திருந்தாலும், சமீபத்தில் வெளியான ‘கபாலி’ திரைப்படத்தில் ரஜினிகாந்துக்கு ஜோடியாக நடித்து தமிழ் ரசிகர்களின் நெஞ்சங்களின் இடம் பிடித்திருப்பவர் ராதிகா ஆப்தே.
பாலிவுட்டில் அறிமுகமாகி, ஹாலிவுட், தெலுங்கு, தமிழ் என பல மொழிப் படங்களில் நடித்துவரும் ராதிகா ஆப்தேவைச் சுற்றி எப்போதும் சர்ச்சைகள் இருந்துவருவது வாடிக்கை. அவரது நிர்வாண படங்கள் இணையதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின. ஹாலிவுட் படமொன்றில் துணிச்சலாக படுகவர்ச்சியாக நடித்து பரபரப்பை ஏற்படுத்தினார்.
இந்நிலையில், பல நடிகர்கள் தன்னிடம் தவறான நோக்கத்தில் அணுகியதாக ராதிகா ஆப்தே தற்போது பரபரப்பு புகார் கூறியுள்ளார். இது குறித்து அவர் அளித்த பேட்டி வருமாறு:-
சினிமாவில் எனக்கு சில மோசமான அனுபவங்கள் நடந்துள்ளன. ஒருமுறை தென்னிந்திய நடிகர் ஒருவர் நான் தங்கி இருந்த ஓட்டல் அறைக்கு இரவு நேரத்தில் போன் செய்து பேசினார். அவரது பேச்சில் தவறான நோக்கம் தெரிந்தது. நான் கடுப்பானேன். அந்த நடிகரை திட்டி விட்டேன். அதை மனதில் வைத்து அடிக்கடி அவர் என்னிடம் சண்டை போட்டார். இதுபோல் இந்தி திரையுலகிலும் ஒரு நிகழ்வு நடந்தது.
இந்தி படமொன்றில் நடிக்க என்னை அணுகினர். அந்த படத்தில் நடிக்க வேண்டும் என்றால் முக்கியமான ஒருவருடன் படுக்கையை பகிர்ந்து கொள்ள வேண்டும், சம்மதமா? என்று கேட்டனர். அப்படி கேட்டது எனக்கு வேடிக்கையாக இருந்தது. நான் அதுமாதிரியான பெண் இல்லை என்று கூறி விட்டேன். என்னை படுக்கைக்கு அழைத்தவன் நரகத்துக்கு போவான் என்றும் கூறினேன்.
நான் கவர்ச்சியாக நடிப்பதாக விமர்சிக்கின்றனர். கதாபாத்திரங்களுக்கு தேவையாக இருப்பதால் அவ்வாறு நடிக்கிறேன். அதற்காக நான் கவலைப்படவில்லை.
இவ்வாறு ராதிகா ஆப்தே பேட்டி அளித்துள்ளார்.