மாற்று நுரையீரல் கிடைப்பதில் தாமதம்: பிரபல நடிகை மீனாவின் கணவர் மரணம்
மாற்று நுரையீரல் கிடைப்பதில் தாமதம் ஏற்பட்ட நிலையில், பிரபல நடிகை மீனாவின் கணவர் வித்யாசாகர் மரணமடைந்தார். அவருக்கு வயது 48.
தென்னிந்திய திரையுலகில் பிரபலமாகத் திகழும் நடிகை மீனாவுக்கும், பெங்களூருவைச் சேர்ந்த வித்யாசாகர் என்பவருக்கும் 2009ஆம் ஆண்டு திருமணம் நடந்தது. இவர்களுக்கு நைனிகா என்ற மகள் இருக்கிறார்.
மீனாவின் கணவர் வித்யாசாகர் நுரையீரல் நோயினால் பாதிக்கப்பட்டு, சிகிச்சை எடுத்து வந்தார். புறாக்களின் எச்சத்தை சுவாசிப்பதால் பரவும் ஒருவித தொற்று, அவரது நுரையீரல்கள் இரண்டையும் பாதித்து, நுரையீரல் மாற்ற வேண்டிய நிலை.
மாற்று அறுவை சிகிச்சைக்குத் தேவையான மாற்று நுரையீரலை தானமாக வழங்கும் டோனருக்காக காத்திருந்தபோது, அவருக்கு கோவிட் தொற்று ஏற்பட்டது. பின்னர் கோவிட் தொற்று குணமானாலும், நுரையீரல் செயல்பாடு முற்றிலும் இழந்துபோய்விட, மருத்துவமனையில் எக்மோ சிகிச்சையில் இருந்தார்.
உறுப்பு மாற்று சிகிச்சைக்கு பலவித விதிமுறைகள் உள்ள நிலையில், மாற்று நுரையீரல் தானம் கிடைப்பது தாமதமாகி வந்ததால், உடல் நிலை மோசமடைந்து, கவலைக்கிடமாகி, சிகிச்சை பலனின்றி, நேற்று மாலை உயிரிழந்தார்.
இன்று மதியம் 2 மணிக்கு சென்னை பெசண்ட்நகர் மயானத்தில் வித்யாசாகரின் உடல் தகனம் செய்யப்படும்.