தெலுங்கு மக்கள் குறித்து அவதூறாக பேசிய நடிகை கஸ்தூரி தலைமறைவு: கைது செய்ய 2 தனிப்படைகள் அமைப்பு!
தெலுங்கு பேசும் மக்கள் குறித்து அவதூறாகப் பேசிய நடிகையும் ‘சங்கிடியா’வுமான கஸ்தூரி மீது போலீஸ் வழக்குப்பதிவு செய்ததைத் தொடர்ந்து அவர் தலைமறைவாகி உள்ளார்.
பிராமணர்களை பாதுகாக்க புதிதாக சட்டம் இயற்ற வேண்டும் எனக் கோரி இந்து மக்கள் கட்சி சார்பில் சென்னை எழும்பூர் ராஜரத்தினம் விளையாட்டரங்கம் அருகில் கடந்த 3ஆம் தேதி ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் கலந்துகொண்டு பேசிய கஸ்தூரி, “200 ஆண்டுகளுக்கு முன்பு மன்னர்களுக்கு அந்தப்புர சேவைகள் செய்ய வந்தவர்கள் தான் தமிழ்நாட்டில் வாழும் தெலுங்கு மக்கள். அவர்களை தமிழர்கள் என்று ஏற்றுக்கொள்கிறவர்கள், ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இங்கு வந்த தமிழ் பேசும் பிராமணர்கள் தமிழர்கள் இல்லை என்று எப்படி சொல்ல முடியும்?” என்கிற ரீதியில் பேசினார்.
இந்த பேச்சுக்கு தெலுங்கு அமைப்பினர் கண்டனமும், போலீசில் புகாரும் தெரிவித்து வருகிறார்கள். குறிப்பாக அகில இந்திய தெலுங்கு சம்மேளன பொதுச்செயலாளர் நந்தகோபால் சென்னை எழும்பூர் காவல் நிலையத்தில் கஸ்தூரி மீது புகார் அளித்தார். அதன் பேரில், அவதூறாகப் பேசுதல், கலவரத்தை ஏற்படுத்தும் நோக்கத்தில் பேசுதல், இரு தரப்பினரிடையே மோதலை ஏற்படுத்தும் வகையில் பேசுதல் என்பன உள்ளிட்ட 4 பிரிவின்கீழ் கஸ்தூரி மீது போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.
இது தொடர்பான விசாரணைக்கு ஆஜராகுமாறு கஸ்தூரிக்கு உத்தரவிடும் சம்மனைக் கொடுக்க போலீசார் சென்னை போயஸ் கார்டனில் உள்ள கஸ்தூரியின் வீட்டுக்குச் சென்றபோது, அவர் ஏற்கெனவே கதவைப் பூட்டிவிட்டு, செல்போனையும் ஆஃப் செய்துவிட்டு, அங்கிருந்து தப்பியோடி விட்டது தெரிய வந்துள்ளது.
இதனால் அவரைப் பிடிக்க 2 தனிப்படைகளை அமைத்து போலீஸ் தேடி வருகிறது.
இதனிடையே. கஸ்தூரி முன்ஜாமின் கோரி உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுத் தாக்கல் செய்திருப்பது குறிப்பிடத் தக்கது.