பிரபல நடிகர் விவேக் காலமானார்: மாரடைப்பு காரணமாக மருத்துவமனையில் உயிர் பிரிந்தது
மாரடைப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த பிரபல நடிகர் விவேக், சிகிச்சை பலனின்றி, இன்று அதிகாலை 4.35 மணியளவில் மரணம் அடைந்தார். அவருக்கு வயது 59.
பிரபல நகைச்சுவை நடிகர் விவேக், திரைப்பட படப்பிடிப்புக்காக வடமாநிலங்களுக்குச் சென்றுவிட்டு சமீபத்தில் தான் சென்னை திரும்பினார். அவர் நேற்றுமுன்தினம் சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனைக்குச் சென்று சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் முன்னிலையில், கொரோனா நோய்க்கு எதிரான தடுப்பூசி போட்டுக்கொண்டார். அத்துடன் ‘எல்லோரும் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும்’ என்று மக்களுக்கு வேண்டுகோள் விடுத்தார்.
நேற்று காலை அவர் வீட்டிலிருந்தபோது திடீரென மயங்கி விழுந்தார். இதனால் அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் அவரை வடபழனியில் உள்ள சிம்ஸ் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
இது குறித்து சிம்ஸ் மருத்துவமனை துணைத்தலைவர் ராஜுசிவசாமி நேற்று மாலை செய்தியாளர்களிடம் கூறுகையில், “சுயநினைவிழந்த நிலையில் விவேக் பகல் 11 மணிக்கு மருத்துவமனைக்கு கொண்டுவரப்பட்டார். மருத்துவ பரிசோதனையில், அவரது இதயத்தின் இடதுபுற ரத்தநாளத்தில் 100 சதவிகித அடைப்பு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனால் உடனடியாக அவருக்கு ஆஞ்சியோ பிளாஸ்டி சிகிச்சை அளிக்கப்பட்டு, ‘ஸ்டெண்ட்’ கருவி பொருத்தப்பட்டது. அதன்பின்னரே விவேக்கின் இதயத் துடிப்பு ஓரளவு சீரானது. சுமார் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக அவரது இதயத்தின் செயல்பாடுகள் பாதிக்கப்பட்டதால், நுரையீரலை செயற்கையாக இயக்க வைக்க உயிர்காக்கும் ‘எக்மோ’ கருவி பொருத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தற்போது அவரது உடல்நிலை சற்று கவலைக்கிடமாகவே உள்ளது. 24 மணி நேர மருத்துவ கண்காணிப்புக்குப் பிறகே அடுத்தகட்ட தகவல்களை வெளியிட முடியும்” என்றார்.
இந்த நிலையில் சிகிசை பலனளிக்காமல் இன்று (17-04-2021) அதிகாலை 4-35 மணிக்கு விவேக்கின் உயிர் பிரிந்தது.
பின்னர் அவரின் உடல் மருத்துவமனையிலிருந்து விருகம்பாக்கம் பத்மாவதி நகரிலுள்ள அவரது இல்லத்திற்கு கொண்டு செல்லப்பட்டு பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருக்கிறது. திரைத்துறை பிரபலங்கள், ரசிகர்கள் மற்றும் பொதுமக்கள் அவருக்கு நேரிலும், சமூகவலைத்தளங்கள் மூலமும் அஞ்சலி செலுத்தி வருகிறார்கள்.