30 லட்சம் மரக்கன்றுகள் நட்டு சாதனை படைத்தவர்: நடிகர் விவேக் வாழ்க்கை சுருக்கம்
இன்று காலமான நகைச்சுவை நடிகர் விவேக் 1961ஆம் ஆண்டு நவம்பர் 19ஆம் தேதி அங்கய்யா பாண்டியன் – மணியம்மாள் தம்பதியருக்கு தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள பெருங்கோட்டூரில் மகனாக பிறந்தார். பிறந்தார். அவரது முழு பெயர் விவேகானந்தன். மதுரை அமெரிக்கன் கல்லூரியில் பி.காம் படித்து பட்டம் பெற்ற இவர் அதே வர்த்தகத் துறையில் எம்.காம் பட்டமும் பெற்றார்.
டிஎன்பிஎஸ்சி குரூப்-4 தேர்வில் வெற்றிபெற்று, தமிழக அரசின் தலைமைச் செயலகத்தில் ஜுனியர் உதவியாளராக பணியில் சேர்ந்தார். சென்னை இவரது வசிப்பிடம் ஆனது.
மேடை நாடக நடிப்பில் ஆர்வம் கொண்ட விவேக்கிற்கு திரைப்பட இயக்குனர் கே.பாலசந்தரின் அறிமுகம் கிடைத்தது. அவருடைய இயக்கத்தில் 1987ஆம் ஆண்டு வெளியான ‘மனதில் உறுதி வேண்டும்’ படத்தின் மூலம் நடிகராக அறிமுகம் ஆனார். அந்த படத்தில் சிறிய வேடத்தில் நடித்த விவேக், பாலசந்தரின் ‘புதுப்புது அர்த்தங்கள்’ படத்தில் நடித்து பிரபலமானார். அடுத்தடுத்து பட வாய்ப்புகள் குவிந்தன. இப்படங்களில் நகைச்சுவையுடன் சமூக சீர்திருத்தக் கருத்துகளையும் பேசி நடித்தார். ரசிகர்களை சிரிக்க வைப்பதோடு சிந்திக்கவும் வைத்ததால் ’சின்ன கலைவாணர்’ என்ற பெயர் பெற்றார்.
இவரது நடிப்பில் கடைசியாக கடந்த ஆண்டில் ‘தாராள பிரபு’ என்ற படம் வெளியானது. இதுவரை 220க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.
திரைப்படத்துறையில் ஆற்றிய பங்களிப்பிற்காக இவருக்கு இந்திய ஒன்றிய அரசு பத்மஸ்ரீ விருது கொடுத்து கவுரவித்தது. தமிழக அரசு 4 முறை சிறந்த நகைச்சுவை நடிகருக்கான விருது வழங்கியது.
சுற்றுச்சூழல் ஆர்வலராகவும் விளங்கிய விவேக், முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் மீதான பற்று காரணமாக ‘பசுமை கலாம்’ என்ற இயக்கத்தைத் தொடங்கி, தமிழகம் முழுவதும் சுமார் 30 லட்சம் மரக்கன்றுகள் நட்டு சாதனை படைத்தார்.
விவேக்கிற்கு அருள்செல்வி என்ற மனைவியும், இரண்டு மகள்களும் இருக்கிறார்கள். மூத்தமகள் அமிர்தநந்தினி கட்டிடக்கலை வல்லுனராக இருக்கிறார். இளைய மகள் தேஜஸ்வினி சிட்டி வங்கியில் பணிபுரிகிறார். இரண்டு மகள்களுக்கும் இன்னும் திருமணம் ஆகவில்லை..
விவேக்கின் ஒரே மகனான பிரசன்னகுமார் 2015ஆம் ஆண்டு தனது 14-வது வயதில் மூளைக்காய்ச்சல் காரணமாக மரணமடைந்தார் என்பது நினைவு கூரத்தக்கது.