‘பிளாஸ்டிக் மாசில்லா தமிழ்நாடு’ பிரச்சாரத்தின் விளம்பரத் தூதுவராக நடிகர் விவேக் நியமனம்
தமிழகத்தில் 2019 ஆம் ஆண்டு ஜனவரி 1 முதல் பிளாஸ்டிக் பொருட்கள் உபயோகத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனையொட்டி,முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று (வியாழக்கிழமை) தலைமைச் செயலகத்தில் ‘பிளாஸ்டிக் மாசில்லா தமிழ்நாடு’ உருவாக்கிட மாநில அளவில் பிரச்சாரத்தினை தொடங்கி வைக்கும் விதமாக, அதற்கான லச்சினையை அறிமுகம் செய்து வைத்தார்.
மேலும், பிரச்சாரத்திற்கான குறும்படம் மற்றும் இணையதளத்தையும் வெளியிட்டார். அப்போது, ‘பிளாஸ்டிக் மாசில்லா தமிழ்நாடு’ பிரச்சாரத்தின் விளம்பரத் தூதுவராக திரைப்பட நடிகர் விவேக் நியமிக்கப்பட்டார். இதையடுத்து, நடிகர் விவேக்குக்கு துணிப்பை மற்றும் சணல் பைகளை முதல்வர் எடப்பாடி பழனிசாமி அன்பளிப்பாக வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, ”தூய்மையான தமிழகத்தை உருவாக்க ஒருமுறை மட்டும் பயன்படுத்தும் பிளாஸ்டிக்கைத் தவிர்க்க வேண்டும். பிளாஸ்டிக்கிற்கு பதில் மாற்றுப் பொருட்களை பயன்படுத்த வேண்டும்” எனப் பேசினார்.
பிளாஸ்டிக் பொருட்களுக்கு மாற்றாக, பாக்குமட்டையில் தட்டு, கோப்பை போன்ற பொருட்களைத் தயாரிக்கும் தொழில் முனைவோர்களுக்கு தொழில் வணிகத் துறை மூலமாக மானியத்துடன் கூடிய கடனுதவிக்கான வங்கி வரைவோலைகளை 5 தொழில் முனைவோர்களுக்கு முதல்வர் வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில், தடை செய்யப்படவுள்ள பிளாஸ்டிக் பொருட்களுக்கான மாற்றுப்பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டன. மட்பாண்ட பொருட்கள், சணல்பைகள், துணிப்பைகள் ஆகியவை காட்சிப்படுத்தப்பட்டன. அதுமட்டுமல்லாமல் 2019 ஆம் ஆண்டு ஜனவரி 1 முதல் தமிழகத்தில் தடை செய்யப்படவுள்ள பிளாஸ்டிக் பொருட்களான பிளாஸ்டிக் பைகள், தண்ணீர் பாக்கெட்டுகள், ஸ்ட்ராக்கள், பிளாஸ்டிக் தட்டுகளும் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன.