“பெரிதாக கனவு காணுங்கள்”: கல்லூரி மாணவ மாணவிகளுக்கு நடிகர் விக்ரம் அறிவுரை!

HR பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ரியா ஷிபு தயாரிப்பில், இயக்குநர் எஸ். யூ. அருண் குமார் இயக்கத்தில், விக்ரம், எஸ். ஜே. சூர்யா, சுராஜ் வெஞ்சரமூடு, துஷாரா விஜயன் உள்ளிட்ட பலரின் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘வீர தீர சூரன் பார்ட் 2 ‘ படத்தின் வெளியீட்டுக்கு முன்னரான விளம்பரப்படுத்தும் நிகழ்வு மதுரை மற்றும் திருச்சியில் நடைபெற்றது.
‘வீர தீர சூரன் – பார்ட் 2’ திரைப்படத்தினை ரசிகர்களிடம் சென்றடைய செய்யும் வகையில் படக் குழுவினர் சென்னை- ஹைதராபாத்- பெங்களூரூ- திருவனந்தபுரம் – மதுரை – திருச்சி – கோயம்புத்தூர் – உள்ளிட்ட பல இடங்களுக்கு சுற்றுப்பயணம் செய்து விளம்பரப்படுத்தி வருகிறார்கள். சென்னை, ஹைதராபாத், பெங்களூரூ, திருவனந்தபுரத்தை தொடர்ந்து மதுரை மற்றும் திருச்சியில் உள்ள தனியார் கல்லூரிகளில் ஆயிரக்கணக்கான மாணவ மாணவிகள் முன்னணியில் பட வெளியீட்டுக்கு முன்னரான விளம்பரப்படுத்தும் நிகழ்வு நடைபெற்றது. இந்நிகழ்வில் விக்ரம், துஷாரா விஜயன், இயக்குநர் எஸ். யூ. அருண் குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வில் நடிகை துஷாரா விஜயன் பேசுகையில், ” எங்களை உற்சாகப்படுத்தும் மாணவ மாணவிகளுக்கு நன்றி. அனைவரும் 27ஆம் தேதி அன்று வீர தீர சூரன் படத்தை தியேட்டரில் பாருங்கள். உங்கள் அனைவருக்கும் இந்த திரைப்படம் பிடிக்கும்.
‘சாமி’ படத்தில் சீயான் சாரும், திரிஷா மேடமும் ரொமான்ஸ் செய்திருப்பார்கள். உங்களைப் போலவே நானும் அதற்கு மிகப்பெரிய ரசிகை. உங்களுக்கு பிடித்ததை போல் இந்த படத்திலும் ரொமான்ஸ் காட்சிகள் இருக்கிறது. படத்தில் ஆக்சன் – ரொமான்ஸ்- மாஸ்- என எல்லாமும் இருக்கும். நாங்கள் அனைவரும் ரசிகர்களாகிய உங்களின் மனதை கொத்தாக எடுத்து செல்வோம்.
இப்படத்தின் படப்பிடிப்பு மதுரை மேலூரில் தான் நடைபெற்றது. இயக்குநர் அருண்குமார் சார் ‘சித்தா’ போன்ற படத்தை இயக்கியவர். அவர் எப்போதும் பெண் கதாபாத்திரங்களை அழுத்தமாக எழுதக்கூடியவர். இந்தப் படத்தில் என் கேரக்டரின் பெயர் கலைவாணி. கலைவாணி – காளி இந்த இரண்டு கதாபாத்திரங்களும் ரசிகர்களுக்கு பிடிக்கும்.
அனைத்து மேடைகளிலும் சொல்வதைத் தான் இங்கும் சொல்கிறேன். இந்த குழுவுடன் தொடர்ந்து பத்து படங்களில் பணியாற்ற வேண்டும் என்று சொன்னாலும் பணியாற்றுவேன். ” என்றார்.
இயக்குநர் அருண்குமார் பேசுகையில், ” நான் மதுரையில் தான் பிறந்தேன். வளர்ந்தேன். படித்தேன். இந்த நிகழ்வு நடக்கும் தனியார் கல்லூரிக்கு அருகே தான் எங்கள் வீடு இருக்கிறது. இந்த கல்லூரி வளாகத்திற்குள் நுழைய அனுமதிக்க மாட்டார்கள். முதன் முறையாக வருகை தந்திருக்கிறேன். உங்களுடைய உற்சாகமான – ஆரவாரமான வரவேற்பு நன்றி. பரவை தான் என்னுடைய சொந்த ஊர் அங்கிருந்து இங்கு வந்து உங்களை சந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
அனைவரும் ‘வீர தீர சூரன்’ படத்தை தியேட்டருக்கு வருகை தந்து பாருங்கள். சீயான் ரசிகர்களுக்கு இந்த படம் நிச்சயம் பிடிக்கும். ஏனெனில் நானும் ஒரு சீயானின் ரசிகன் தான்.
இங்குள்ள சிந்தாமணி தியேட்டரில் தான் ‘தூள்’ திரைப்படம் பார்த்தேன். ரசித்தேன். இன்று அவர் நடிக்கும் படத்தை இயக்குவதற்கு வாய்ப்பு கிடைத்திருக்கிறது. இதற்காக சீயான் விக்ரமுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். அத்துடன் படத்தில் பணியாற்றிய நடிகர், நடிகைகளுக்கும், தொழில்நுட்ப கலைஞர்களுக்கும் , தயாரிப்பாளருக்கும் இந்த தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
‘வீர தீர சூரன் – பார்ட் 2’ படத்திற்கு கிடைக்கும் வரவேற்புக்கு பிறகு தான் பார்ட் ஒன் படத்தை எடுக்க வேண்டும். இதுவரை அதற்கான படப்பிடிப்பு பணிகள் தொடங்கவில்லை. ஆனால் நிச்சயமாக முதல் பாகம் வெளியாகும். ” என்றார்.
விக்ரம் பேசுகையில், ” மங்கையர்க்கரசி என்ற பெயரே சிறப்பாக இருக்கிறது. எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது. இந்த கல்லூரியில் பயிலும் மாணவ மாணவிகளான நீங்கள் அனைவரும் கல்வியில் கவனம் செலுத்துங்கள். நீங்கள் கண்ட கனவுகளை நனவாக்குவதற்காக தொடர்ந்து செல்லுங்கள். பெரிதாக கனவு காணுங்கள்.
இயக்குநர் அருண் குமாரை நான் ‘சித்தா’ என்று தான் அழைப்பேன். தமிழ் சினிமாவின் திறமை வாய்ந்த இயக்குநர். இந்தத் திரைப்படத்தை அழகாக இயக்கியிருக்கிறார். இந்த படம் மதுரையில் நடக்கும் கதை. அதனால்தான் உங்களை சந்திப்பதற்கு வேட்டி அணிந்து வந்திருக்கிறேன். அதனால் தான் மீசையை முறுக்கி இருக்கிறேன். ஆனால் படத்தில் என்னை அழுக்காக்கி நாஸ்தி செய்திருக்கிறார்கள். அதனால் தான் தற்போது கூலிங் கிளாஸ் அணிந்து இருக்கிறேன். இந்தப் படத்தில் எனக்கு ஒரே ஒரு உடை தான். படம் முழுவதும் அந்த உடையில் தான் இருப்பேன்.
கமர்சியல் சினிமா என்று சொல்வார்கள் தானே.. அதனை யதார்த்தமாக உருவாக்கி இருக்கிறோம். அதனால் இந்த படத்தை பார்த்து நீங்கள் மிகவும் ரசிப்பீர்கள். இந்தப் படத்தில் இடம்பெறும் ரொமான்ஸ் காட்சிகளை இயக்குநர் மிகவும் ஷட்டிலாக காண்பித்திருக்கிறார். இதற்கு உங்களின் வரவேற்பு கிடைத்திருக்கிறது என்றவுடன்.. எங்களுக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது. இந்த தருணத்திலேயே இந்த படம் மிகப்பெரிய வெற்றியை பெறும் என்ற நம்பிக்கையை எங்களுக்கு ஏற்படுத்தி இருக்கிறது.
இந்தப் படத்தில் அழகான துஷாராவையும் பார்க்கலாம். ஆக்ரோஷமான துஷாராவையும் பார்க்கலாம். அவருடைய நடிப்பு பிரமாதம். அவருக்கும் சிறந்த எதிர்காலம் இருக்கிறது. அதற்கு என் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்” என்றார்.
அத்துடன் மதுரை மற்றும் திருச்சி ஆகிய இரண்டு இடங்களிலும் கல்லூரி மாணவ மாணவிகளுடன் மேடையில் பாடல் பாடியும், நடனம் ஆடியும், செல்ஃபி எடுத்துக் கொண்டும் அனைவரையும் சீயான் விக்ரம் மற்றும் துஷாரா விஜயன் ஆகிய இருவரும் உற்சாகப்படுத்தினார்கள்.