பிரபல நடிகர் ஸ்ரீகாந்த் மறைந்தார்
இயக்குநர் கே.பாலசந்தரால் அடையாளம் காணப்பட்டு, இயக்குநர் ஸ்ரீதரால் நாயகனாக அறிமுகப்படுத்தப்பட்ட பிரபல நடிகர் ஸ்ரீகாந்த் 12.10.2021 (செவ்வாய்க்கிழமை) அன்று வயது முதிர்ச்சி மற்றும் உடல்நலக்குறைவு காரணமாக காலமானார்.
ஈரோட்டை பூர்வீகமாகக் கொண்டவர் ஸ்ரீகாந்த். இவரின் இயற்பெயர் வெங்கட்ராமன். அழகும் துடிப்பும் மிக்க இளைஞராக இருந்த இவர், அரசுப்பணியில் நல்ல பொறுப்பில் வேலையில் இருந்தார். சென்னையில் வேலை பார்த்துக்கொண்டிருக்கும்போது, நாடகங்களின் பக்கம் இவரின் கவனம் செல்ல, அங்கே அறிமுகமானார் இயக்குநர் கே.பாலசந்தர்.
‘மேஜர் சந்திரகாந்த்’, ‘எதிர்நீச்சல்’, ‘பாமாவிஜயம்’ என தொடர்ந்து தன் படங்களில் நல்ல நல்ல கதாபாத்திரங்களில் ஸ்ரீகாந்தை நடிக்க வைத்தார் பாலசந்தர். அதேபோல், இயக்குநர் ஸ்ரீதரின் ‘வெண்ணிற ஆடை’ படத்தில் சைக்கியாட்ரிஸ்ட் டாக்டராக, மிகவும் ஸ்டைலாக, கெத்தாக நடித்து அசத்தினார் ஸ்ரீகாந்த். ‘வெண்ணிற ஆடை’ தான் நடிகையும் முன்னாள் முதல்வருமான ஜெயலலிதாவுக்கு முதல் படம். அந்த வகையில் திரையுலகில் ஜெயலலிதாவின் முதல் ஹீரோ ஸ்ரீகாந்த்.
ஸ்ரீகாந்தின் வாழ்வில் இன்னொரு அத்தியாயமாக ‘தங்கப்பதக்கம்’ திகழ்ந்தது. ஜெகன் எனும் கேரக்டரில் சிவாஜிக்கு இணையாக போட்டி போட்டு நடித்திருந்தார். இவரின் நடை, உடை, பாவனைகளும் வசன உச்சரிப்புகளும் எவர் சாயலுமில்லாமல் புதுமாதிரியாக இருந்தது என்பதும் இவரின் வெற்றிக்கு முக்கியக் காரணம். மகனாக இதில் மிரட்டியிருப்பார்.
ஆரம்பத்தில் வில்லத்தனம் செய்துகொண்டிருந்த ரஜினிகாந்த், நாயகனாக முதன் முதலில் நடித்த படமான ‘பைரவி’யில் வில்லனாக அசத்தியிருப்பார் ஸ்ரீகாந்த். இத்தனைக்கும் படத்தின் டைட்டிலில் ஸ்ரீகாந்த் பெயரே முதலில் போடப்பட்டதாம்
இவருடன் கவிஞர் வாலியும் நாகேஷும் ‘வாடாபோடா’ நண்பர்களாகத் திகழ்ந்தார்கள். இலக்கியம், படிப்பு என்று கிடைத்த நேரங்களில் செலவழித்த ஸ்ரீகாந்தின் வாழ்வில் மிக முக்கிய நட்பாக வந்தவர்தான் எழுத்தாளர் ஜெயகாந்தன். அடிக்கடி சந்தித்துக் கொள்வார்கள். அவரின் கதைகளைப் படித்துவிட்டு விவாதித்து அரட்டையடித்து மனம்விட்டுப் பேசினார் ஸ்ரீகாந்த். நட்பு இன்னும் பலப்பட்டது. ‘சிலநேரங்களில் சில மனிதர்கள்’ படத்தையும் மெட்ராஸ் பாஷை பேசும் கோட்டுச்சூட்டு போட்ட ஸ்ரீகாந்தையும் லட்சுமியையும் இன்னும் நூறாண்டானாலும் மறக்கமுடியாது.
சிவாஜி, முத்துராமன், ஜெய்கணேஷ், விஜயகுமார், சிவகுமார், கமலஹாசன், ரஜினிகாந்த் என பலருடனும் நடித்த ஸ்ரீகாந்த், செல்வராகவன் இயக்கத்தில் ‘காதல் கொண்டேன்’ படத்திலும் நடித்தார். இதுவரை 200-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.
உடல் நலக்குறைவு காரணமாக அவதிப்பட்டு வந்த அவர் செவ்வாய் கிழமையன்று காலமானார். அவருக்கு வயது 83. அவரது மறைவுக்கு திரைப் பிரபலங்களும், ரசிகர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.